மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 5 ஜூலை 2020

வரி உயர்வால் நிதி நெருக்கடி!

வரி உயர்வால் நிதி நெருக்கடி!

தொலைத் தொடர்புப் பொருட்கள் மீது இறக்குமதி வரி உயர்த்தப்படுவதால் தொழிற்துறையின் நிதி நெருக்கடிகள் அதிகரிக்கும் என்று இந்திய செல்லுலார் ஆபரேட்டர் சங்கம் தெரிவித்துள்ளது.

பேஸ் ஸ்டேஷன் உள்பட சில தொலைத் தொடர்பு உபகரணங்களுக்கான இறக்குமதி வரியை அக்டோபர் 11ஆம் தேதியன்று மத்திய அரசு 20 விழுக்காடு வரை உயர்த்தியுள்ளது. இறக்குமதியைக் குறைத்து நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை குறைப்பதற்காகவே மத்திய அரசு இந்த முடிவுக்கு வந்தது. இந்த வரி விதிப்பு அக்டோபர் 12ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. கடந்த 15 நாட்களில் இரண்டு முறை இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டிலுள்ள அனைத்துப் பெரிய தொலைத் தொடர்பு நிறுவனங்களின் பிரதிநிதியாக இந்திய செல்லுலார் ஆபரேட்டர் சங்கம் இயங்கி வருகிறது. கடந்த இரண்டு காலாண்டுகளாக தொலைத் தொடர்புத் தொழிற்துறையின் நெட்வொர்க் உபகரண இறக்குமதிச் செலவுகள் 2 முதல் 3 பில்லியன் டாலராக இருந்துள்ளதாக இந்திய செல்லுலார் ஆபரேட்டர் சங்கம் மதிப்பிட்டுள்ளது. இந்தச் செலவுகள் மேலும் 10 விழுக்காடு வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து இந்திய செல்லுலார் ஆபரேட்டர் சங்கத்தின் பொது இயக்குநரான ராஜன் மேத்யூஸ் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “இதனால் தொழிற்துறையின் செலவுகளும், நிதிச் சவால்களும் அதிகரிக்கும். ஒவ்வொரு ஆண்டுக்கும் 8 பில்லியன் டாலர் மதிப்பிலான நெட்வொர்க் உபகரணங்களை நிறுவனங்கள் இறக்குமதி செய்கின்றன. கடந்த இரண்டு காலாண்டுகளில் மட்டும் 2 முதல் 3 பில்லியன் டாலருக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்.

சனி, 13 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon