மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 15 நவ 2019

முதலிடத்தை நெருங்கும் ஜியோ!

முதலிடத்தை நெருங்கும் ஜியோ!

மொபைல் சந்தாதார் பங்குச் சந்தை அடிப்படையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதிரடியாக இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியத் தொலைத் தொடர்புச் சந்தையில் நுழைந்து இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இதர நெட்வொர்க் நிறுவனங்களை ஆட்டங்காண வைத்துள்ளது. பல்வேறு சிறப்புச் சலுகைகளை அறிவித்து தனது சந்தாதார்களின் எண்ணிக்கையைத் துரிதமாக உயர்த்தி வருகிறது. ஜூலை மாத நிலவரப்படி ஜியோவின் சந்தைப் பங்கு 19.6 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் வோடஃபோன் மற்றும் ஐடியா செல்லுலார் ஆகிய நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளி ஜியோ இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளதாக இந்தியா ரேட்டிங்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது முதல் இடத்தில் இருக்கும் ஏர்டெல் நிறுவனத்தின் சந்தைப் பங்கு ஜூன் மாதத்தில் 30.1 சதவிகிதத்திலிருந்து ஜூலை மாதத்தில் 29.8 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. வோடஃபோன் - ஐடியா நிறுவனங்கள் இணைந்த பின்னர் அவற்றின் சந்தைப் பங்கு 38.4 சதவிகிதமாக இருக்கிறது. எனினும் தனிப்பட்ட அளவில் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள்தான் முதல் இரண்டு இடங்களில் இருக்கின்றன. ஜூலை மாதத்தில் ஜியோ நிறுவனம் புதிதாக 1.18 கோடிப் பேரைத் தனது சேவைக்குள் இணைந்திருந்தது. மற்ற நிறுவனங்கள் இதில் குறிப்பிடும்படியான வளர்ச்சியைக் கொண்டிருக்கவில்லை. கூடிய விரைவில் ஜியோ நிறுவனம் ஏர்டெலைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைத் தனதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சனி, 13 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon