மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 5 ஜூலை 2020

சபரிமலை தீர்ப்பு: தமிழகத்தில் பேரணி!

சபரிமலை தீர்ப்பு: தமிழகத்தில் பேரணி!

சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் நுழையலாம் என்று அனுமதி வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில் கோவை, வேதாரண்யம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஐயப்ப பக்தர்களின் பேரணி நடைபெற்றது.

கடந்த செப்டம்பர் 28ஆம் தேதியன்று, அரசியல் சாசனப்படி அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலை கோயிலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரள மாநிலத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகின்றன. இந்த தீர்ப்பை மறு சீராய்வுக்கு உட்படுத்த வேண்டும் என பந்தளம் ராஜகுடும்பத்தினர், கோயில் தந்திரிகள், ஐயப்ப பக்தர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த தீர்ப்பு தொடர்பாக, நேற்றுவரை 10க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், இன்று (அக்டோபர் 13) உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக கோவை சித்தாபுதூர் பகுதியிலிருந்து காந்திபுரம் பேருந்து நிலையம் வரை பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் 1,000க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் பங்கேற்றுத் தீர்ப்புக்கு எதிராக முழக்கமிட்டனர். நாகை மாவட்டம் வேதாரண்யத்திலும் இன்று ஐயப்ப பக்தர்கள் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகப் பேரணி நடத்தினர்.

இது போன்று, கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் தீர்ப்புக்கு எதிராகப் பல்வேறு அமைப்புகள் இணைந்து பேரணி நடத்தின. இதில், 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். பம்பை, நிலக்கல், திருவனந்தபுரம், பாறசாலை பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்தன. பா.ஜக மற்றும் ஐயப்ப தர்ம சம்ரக்ஷனா சமிதி உள்பட சில அமைப்புகள் இணைந்து, இரண்டு நாட்களுக்கு முன்பு பந்தளத்தில் இருந்து திருவனந்தபுரம் வரை நடைப்பயணம் தொடங்கினர். வருகிற 15ஆம் தேதியன்று, இந்த பயணம் திருவனந்தபுரம் தலைமைச்செயலகத்தின் முன்பாக முடிவடைகிறது. ‘சபரிமலையைப் பாதுகாப்போம்’ என்ற கோ‌ஷத்துடன், அங்கு முற்றுகைப் போராட்டம் நடக்கவுள்ளது.

தீர்ப்புக்கு எதிராகப் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், மேல்முறையீட்டு வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சனி, 13 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon