மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 5 ஜூலை 2020

டிட்லி: பாறை சரிந்து 12 பேர் பலி!

டிட்லி: பாறை சரிந்து 12 பேர் பலி!

ஒடிசாவில் டிட்லி புயலுக்குப் பயந்து குகைக்குள் ஒதுங்கியதில், பாறை சரிந்து விழுந்து 12 பேர் உயிரிழந்தனர், நான்கு பேர் காணாமல் போயுள்ளனர்.

வங்கக் கடலில், சென்னைக்கு அருகில் உருவான டிட்லி புயல் ஆந்திரா-ஒடிசா இடையே இரண்டு நாட்களுக்கு முன்னர் கரையைக் கடந்தது. இதனால் இரு மாநிலங்களிலும் பெருமழை பெய்தது. புயல் பாதிப்பிலிருந்து காப்பதற்காக, மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

ஓடிசா மாநிலம் கஜபதி மாவட்டம் பராஹரா கிராமத்தில் பெருமழையைத் தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டது. புயலுக்குப் பயந்து அங்கிருந்த குகை ஒன்றில் ஒதுங்கினர் சிலர். அப்போது, பாறை சரிந்து விழுந்ததில் குகைக்குள் தங்கியிருந்த 12 பேர் உயிரிழந்தனர். இன்னும் நான்கு பேரைக் காணவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள், மண்ணுக்குள் புதைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இவர்களில் மூன்று பேர் குழந்தைகள். டிட்லி புயலால் ஒடிசாவில் இதுவரை 36 பேர் உயிரிழந்தனர். கட்டாக், பூரி உள்ளிட்ட மாவட்டங்களில் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இது குறித்து நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள, மாவட்ட ஆட்சியருக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த அறிக்கை கிடைத்த பின்னர் நிதியுதவி குறித்து முடிவு செய்யப்படும். உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்க, தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மீட்கப்பட்ட 1 லட்சத்து 27 ஆயிரத்து 262 பேர், 963 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இப்பேரிடரைக் கையாள்வதற்குத் தேவையான வசதிகளை மாநில அரசு செய்துள்ளதாகக் கூறியுள்ளார். ஏற்கனவே, ஒவ்வொரு மாவட்டங்களிலும் தங்கும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும், இயற்கைப் பேரிடரின்போது எச்சரிக்கை விடுப்பதற்கு எஸ்எம்எஸ் அனுப்ப வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சனி, 13 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon