மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஜூலை 2020

விலை உயர்வால் விற்பனை சரிவு!

விலை உயர்வால் விற்பனை சரிவு!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக இந்தியாவின் எரிபொருளுக்கான தேவை செப்டம்பர் மாதத்தில் சரிவைச் சந்தித்துள்ளது.

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையேற்றத்தாலும் ரூபாய் மதிப்பு சரிவாலும் இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டு வருகின்றன. இதனால் எரிபொருள் பயன்பாட்டில் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த பத்து மாதங்களில் முதன்முறையாக இந்தியாவில் டீசல் பயன்பாடு சரிவைச் சந்தித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த எரிபொருள் தேவை 16.54 மில்லியன் டன்னாக இருந்துள்ளது. இது முந்தைய ஆகஸ்ட் மாத அளவை விட 1.3 சதவிகிதம் குறைவாகும். இந்த விவரங்களை மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பெட்ரோலியம் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு அமைப்பு வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் பயன்படுத்தப்படும் மொத்த சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் வகைகளில் 40 சதவிகிதப் பங்களிப்பைக் கொண்டுள்ள டீசல் விற்பனை செப்டம்பர் மாதத்தில் 0.8 சதவிகிதம் குறைந்து 6.03 மில்லியன் டன்னாக இருந்துள்ளது. டீசல் விற்பனை குறைந்துள்ளதால் தொழில் துறை வளர்ச்சியும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் விற்பனையைப் பொறுத்தவரையில் 4.2 சதவிகித உயர்வுடன் 2.23 மில்லியன் டன்னாக இருந்துள்ளது. பயணிகள் வாகனங்களுக்கு செப்டம்பர் மாதத்தில் ஏற்பட்ட தேவைக் குறைவு (5.6%) காரணமாகவே பெட்ரோல் விற்பனை வழக்கமான உயர்வைக் கொண்டிருக்கவில்லை என்று கூறப்படுகிறது.

சனி, 13 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon