மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 1 ஜுன் 2020

சிறப்புக் கட்டுரை: காமத்தின் பேரம்!

சிறப்புக் கட்டுரை: காமத்தின் பேரம்!

பெருந்தேவி

#Me Too இயக்கம் குறித்து நேற்று வெளியான கட்டுரையின் தொடர்ச்சி

சென்ற ஆண்டு (2017) அக்டோபர் மாதத்தில் #Me Too ஹேஷ்டாக், அது பரவலான ஒன்பது நாட்களில் மட்டும் 1.7 மில்லியன் ட்வீட்களில் பயன்படுத்தப்பட்டது. எண்பதுக்கும் மேற்பட்ட உலகநாடுகளிலிருந்து இந்த ட்வீட்கள் வெளிவந்தன. இப்படிப் பரவலாகும் வகையில், இந்தப் போராட்டத்தை பாதிக்கப்பட்டவர்கள் கையிலெடுக்க வேண்டிய தேவை என்ன என்று பார்க்கலாம்.

பாலியல் வன்முறை, அச்சுறுத்தல் போன்றவற்றைச் சந்தித்தவர்களுக்கு இந்தப் போராட்டம் அவற்றைக் கூடுதல் தெளிவோடு யோசித்துப்பார்க்க ஒரு வாய்ப்பைத் தருகிறது. இத்தகைய வெளிப்படுத்தல் மூலம் traumatic எனச் சொல்லத்தக்க அனுபவத்துக்கு ஆற்றுப்படுத்தல் வேண்டுமென நினைப்பவர்களுக்கு அது கிடைக்க சாத்தியம் இருக்கிறது. மேலும், இத்தகைய துயரங்களை அனுபவித்த மற்றவர்களும் இத்தகைய பகிர்வுகளோடு தம்மை அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது. இது தனக்கோ அல்லது தன்னையொத்த ஒரு சிலருக்கு மட்டுமோ நேர்ந்தது, நேர்வது அல்ல என அறிந்துகொள்ளும்போது, தனிப்பட்ட ‘அவமானமும்’ துயரமும் இங்கே இயங்கும் சமூக அமைப்பின், செயற்பாடுகளின் பாரபட்சத்தன்மையால் விளைந்ததெனப் புரிகிறது. (பாரபட்சத்தன்மை என்பது இரு பாலினங்களின் பாரபட்சக் கட்டமைப்பு மட்டுமல்ல, இது பற்றிப் பிறகு.)

அச்சத்தைப் போக்கும் மருந்து

மிக முக்கியமாக, பாதிக்கப்பட்டவர்களின் சொல்லாடலை வெளிப்படுத்த வகைசெய்ததன் வாயிலாக அவர்களின் முகமையை (agency) இந்தப் போராட்டம் அங்கீகரிக்கிறது. இது கூட்டு முகமை (collective agency) என்பதே இங்கே அடிக்கோடிடப்பட வேண்டியது. தான் எதிர்கொண்ட பாலியல் தொல்லையைப் பேசினால் இந்தச் சமூகம் தன்னைத்தான் இழிவாகப் பேசும் என்ற அச்சத்தைக் கூட்டு முகமை நீக்கிவிடுகிறது. தமிழ்ப் பண்பாட்டின் அடிப்படையில் சிந்தித்துப் பார்த்தால் கண்ணகி என்கிற வலுவான புனிதப் பிரதிமத்துக்கு சவால்தரும் வலுவான எதிர்ச்சொல்லாடல் கூட்டு முகமையால் சாத்தியமாகி உள்ளது. பொதுவெளியில் கற்பின் தெய்வமாக, காவியக் கதாநாயகியாகத் தொழப்படுகிற பெண் குறித்த சொல்லாடலுக்கு நேர் எதிராக, ஆண்மையச் சூழலில் கற்பின் சாத்தியமின்மையைப் பல சாதாரணப் பெண்களும் பறைசாற்றும் சொல்லாடல் இது. புனைவுக்கு எதிரான வரலாற்றுத் தருணத்தில் இயங்கும் சொல்லாடல்.

பாதிக்கப்பட்டவர்கள் கொள்கிற அச்சம் அவர்களைப் பற்றியது மட்டுமல்ல; அவர்கள் மன உணர்வு மாத்திரமல்ல. தனக்கோ தன்னைச் சார்ந்தவர்களுக்கோ பொருண்மையான பாதிப்பு நடந்துவிடுமோ என்ற அச்சம். தன்னிடம் முறைகேடாக நடந்துகொண்டவர், சமூகப் பண்பாட்டு, அரசியல் தளத்தில் அல்லது பணியிடத்தில் உயர் இடத்தில் இருக்கிறார் என்கிறபோது இந்த அச்சம் பாதிக்கப்பட்டவர்களின் வாய்களுக்குப் பூட்டுப்போட்டுவிடுகிறது. அனுராதா ரமணன் சங்கர மடத்து ஆட்களால் மிரட்டப்பட்டதாக, தன் குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் விடப்பட்டதாகத் தன் பேட்டியில் தெரிவித்ததை, அவர் உடைந்துபோனதைப் பதிவு செய்கிறது ஒன்-இந்தியா இணைய இதழ்.

ஒரு முறையோடு நிற்பதில்லை

பல சமயம் இத்தகைய மோசமான அனுபவம், ஒருமுறை நடக்கும் பிறழ்வால் ஏற்படுவதல்ல. ஒருமுறைப் பிறழ்வைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்பதல்ல நான் சொல்வது. பாலியல் முறைகேட்டில் ஈடுபடுகிற பலரது நடவடிக்கைகளும் மீண்டும் மீண்டும் ஒருவரிடம் அல்லது பலரிடம் மீள்நிகழ்த்துதலின் வடிவம் கொள்கின்றன. ஆனால், வாழ்க்கையின் குரூர அரங்கத்தில், இந்த மீள்நிகழ்த்துதல்களில் கதாபாத்திரங்களின் இடங்கள் ஒன்றேபோல் இருக்கின்றன.

இதற்கு எடுத்துக்காட்டு எம்.ஜே.அக்பருடன் பணி தொடர்பாகச் சந்தித்த பத்துக்கும் மேம்பட்ட இளம் பெண் பத்திரிகையாளர்களின் அனுபவங்கள். ஒரு கணப்பொழுதிலும் தவறிக்கூட தனது அத்துமீறலுக்கு எதிர்வினையாக, சம்பந்தப்பட்ட பெண்ணின் மறுப்பையோ பிடித்தமின்மையையோ ஒரு பொருட்டாக அவர் நினைக்கவில்லை. அவரிடம் பாலியல் தொல்லையைச் சந்தித்த பல பெண்களும் பணிக்காக நேர்காணலுக்கு வந்தவர்கள், அல்லது அவருக்கு அடுத்த நிலைகளில் கீழே பணியாற்றியவர்கள். வேலையும் (career) வாழ்க்கையும் பாதிக்கப்படும் என்பதற்காகவே அவர்கள் மௌனமாக இருந்திருக்கிறார்கள். ஊறுபடத்தக்க நிலையில் உள்ளவர்கள் எடுக்கும் நிலைப்பாடு இது. #Me Too அலையில்தான் இதில் பலரும் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.

பாலியல் அத்துமீறல்களைச் சந்திக்கும் பெண்கள் ஏன் பல ஆண்டுகள் கழித்தும் அவற்றைக் குறித்துப் பேசுவதில்லை என்ற தேய்வழக்கான கேள்விக்கு தன்யா ராஜேந்திரன் போன்ற ஊடகர்களும் ஷாலினி போன்ற மனநல மருத்துவர்களும் விளக்கமாகப் பதில் கூறியிருக்கிறார்கள். எனவே அதிலிருந்து நகர்ந்து பலரும் கேட்கும் வேறு சில கேள்விகளை எடுத்துக்கொள்ளலாம்.

பெண்களுக்குப் பங்கில்லையா?

சில பெண்கள் பாலியல் அத்துமீறல்களைச் சுயதேவைக்காகப் பயன்படுத்திக் கொள்கிறார்களே, தங்கள் பால் அடையாளத்தை, பாலியலை முன்வைத்து அவர்கள் செய்யும் பேரமில்லையா இது, இதை ஏற்காத மற்ற பெண்களின் வாய்ப்பைத் தட்டிப் பறிப்பதில்லையா இது எனக் கேட்கப்படுகிறது. இங்கே சுயபரிசீலனை செய்துகொண்டு முதலில் எண்ணிப்பார்க்க வேண்டியது, ஏன் திரும்பத் திரும்ப பெண்களை நோக்கியே கேள்விகளை எறிகிறோம் என்று. நாம் இங்கே பேச வேண்டியது ஆண்மையச் சமூகச் சூழல் இயங்கும் விதம் குறித்து. நம் கவனத்தைத் திருப்ப வேண்டியது ஆண்மையச் சமூகச் சூழலை முறையானதென ஏற்கும், அதை இயல்பாக்கும் அன்றாடச் செயற்பாடுகளை நோக்கி; இந்தச் செயற்பாடுகளை முன்வைக்கும் நிறுவனங்களை நோக்கி. குடும்பத்துக்கு வெளியே இயங்கும் அலுவலகங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், திரைத் துறை, ஊடகம் உள்ளிட்ட தொழில்துறைகள் அனைத்தும் குடும்ப நிறுவனத்தை அடியொற்றி இருப்பவை என்பதைக் கொஞ்சம் சிந்தித்தாலே தெரிந்துகொள்ள முடியும். எதிர்ப்பாலியல் நியதிகளால் நிறுவப்பட்டிருக்கிற குடும்ப அமைப்பில் பாலியலை முன்வைத்து பேரம் நடப்பதில்லையா என்ன? இன்றுவரை பலரும் உபயோகிக்கும் தலையணை மந்திரம் போன்ற பயன்பாடுகள் நாம் அறிந்ததுதானே!

அங்கிருந்து தொடங்கி, பெண்கள் பாலியலை வைத்துப் பேரம் செய்கிறார்கள் என்று பாரபட்சமாகக் குற்றம்சாட்டுவதைத் தள்ளிவைத்துவிட்டு நாம் கேட்க வேண்டியது இதுதான்: எந்தச் சூழலில் இந்தப் பேரத்தைச் செய்ய அவர்கள் தள்ளப்படுகிறார்கள்? தனிப்பட்ட குடும்ப, அலுவலகச் சூழல் அல்ல நான் குறிப்பிடுவது. இங்கே சூழல் என்பது எதிர்ப் பாலியல் நியதிகள் கட்டமைக்கிற வாழ்க்கை - சமூகச் சூழலை, மற்ற நிறுவனங்களுக்கு முன்மாதிரியாக விளங்கும் குடும்ப நிறுவனத்தை. இச்சூழல் பாலின வகைமாதிரிகளை (gender categories) நிறுவி, அவற்றின் வழி பால்களைக் கட்டமைத்து, தனிமனிதர்களின் பாலியல்களை ஒழுங்கு செய்கிறது (regulation of sexualities).

பால் படிநிலைதான் இத்தகைய ஒழுங்குபடுத்தலின் அடிப்படை அலகாக உள்ளது. பால் படிநிலையின் அடிப்படையில் நடக்கும் பாலியல் ஒழுங்குபடுத்துதலிருந்து விளைவதுதானே நிஜமான பரஸ்பரப் பகிர்தலுக்கு மாற்றான, அதை நீக்கிய, அல்லது பரஸ்பரப் பகிர்தல் என்ற பெயரில் நடைபெறும் காமத்தின் பேரம்? பெண் பாலியலை முன்வைத்து நடக்கும் பேரத்துக்கும் பெண்ணைப் பண்டமாக்குவதற்குமான தொடர்பும்கூட இந்த ஒழுங்குபடுத்தலிலிருந்துதானே வருகிறது?

குடும்பத்திலிருந்து தொடங்கி, அதை அடியொற்றிய பிற நிறுவனங்களில் நடக்கும் இத்தகைய பேரத்துக்குப் பெண்ணை எளிதில் பொறுப்பாக்கிவிடலாம். ஏனெனில், இந்த அடிப்படையான கேள்விகள் கடினமானவை.

(#Me Too இயக்கம் குறித்த பெருந்தேவியின் அலசல் தொடரும்)

கட்டுரைத் தரவுகள்:

http://www.publicseminar.org

https://tamil.oneindia.com

https://www.firstpost.com

செவ்வாய், 16 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon