மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 20 பிப் 2020

முல்லைப் பெரியாறு அணையைக் கண்காணிக்க குழு!

முல்லைப் பெரியாறு அணையைக் கண்காணிக்க குழு!

முல்லைப் பெரியாறு அணையைக் கண்காணிக்க பொதுப்பணித் துறை முதன்மை செயலாளர் தலைமையில் பத்து பேர் கொண்ட துணைக் குழுவை அமைத்துள்ளது தமிழக அரசு.

கேரளாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த கனமழையின் காரணமாக முல்லைப் பெரியாறு அணை அதன் முழு கொள்ளளவான 142 அடியை எட்டியது. இதையடுத்து, அணையின் பாதுகாப்புக் கருதி, 139 அடியைத் தேக்கி வைக்க அனுமதி அளிக்குமாறு கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

அப்போது, இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், பேரிடர் மேலாண்மை துறையின் கீழ் துணைக் குழு ஒன்றை அமைத்து, அணையில் தேக்கி வைக்க வேண்டிய நீரின் அளவை முடிவு செய்யுமாறு உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து, தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையானது, பொதுப்பணித் துறை முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் தலைமையில் பத்து பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்தக் குழுவானது அணையின் நீர் மட்டம், நீர்வரத்து மற்றும் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள் உள்ளிட்டவற்றைக் கண்காணிக்கும் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இக்குழுவின் தலைவராக பொதுப்பணித் துறையின் முதன்மை செயலாளரும், துணைத் தலைவராக தேனி மாவட்ட ஆட்சியர் இருப்பார்கள் என்றும் உறுப்பினர்களாகத் தேனி மாவட்டத்தின் வருவாய் அதிகாரி, நீர்வளத் துறை மதுரை மண்டல தலைமை பொறியாளர், நீர்வளத் துறை பெரியார் வைகை வட்டத்தின் கண்காணிப்பு பொறியாளர், காவல் கண்காணிப்பாளர், தலைமை வனத் துறை அதிகாரி, சுகாதாரத் துறை துணை இயக்குநர், மாவட்ட தீயணைப்புத் துறை தலைமை அதிகாரி ஆகியோர் இருப்பார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் துணைக் குழுவின் ஒருங்கிணைப்பாளராகக் கம்பம் நீர்வளத் துறை செயற்பொறியாளர் இருப்பார் எனவும் கூறப்பட்டுள்ளது.

வெள்ளி, 19 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon