மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 1 நவ 2018

சிறப்புக் கட்டுரை: சமூக உதாசீனம் எனும் பனிக்கட்டி!

சிறப்புக் கட்டுரை: சமூக உதாசீனம் எனும் பனிக்கட்டி!

பெருந்தேவி

பாலியல் வன்முறை பற்றிப் பேசும்போது மனித சமத்துவம் குறித்த அக்கறையுள்ளவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல் ஒன்றிருக்கிறது. இது மிகப் பெரிய சமூக அவலம் என்பதைப் பொதுவெளியில் கவனத்துக்குக் கொண்டுவருவதோடு தொடர்புடைய சிக்கல் இது. பலசமயம், பாதிக்கப்பட்டவர்களின் தற்கதையாடல்களை, தற்சான்றுகளை முன்னிலைப்படுத்தியே இதைக் கவனப்படுத்தல் நடக்கிறது, நடக்க வேண்டியிருக்கிறது. அதேநேரத்தில், தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்களின் தற்கதையாடல்களை முன்வைத்துப் பேசுவது, ‘நிஜத்தில் ஆண் வலியவன்’ என்ற ஒரு புனைவைக் கட்டமைத்துவிடுகிறது; ஆணின் ‘உயரிய’ இடத்தை, நாம் எண்ணாமலேயே அல்லது நமக்கு விருப்பமில்லாமலேயே வியந்தோதுவதாக அமைந்துவிடுகிறது.

மேலும், தற்கதை கூறுபவர்களிடம் “அப்போது என்ன செய்தாய்?”, “உன்னால் ஏன் தடுக்க முடியவில்லை?”, “நீ ஏன் அவரைச் செருப்பால் அடிக்கவில்லை?” போன்ற கேள்விகள் திரும்பத் திரும்பக் கேட்கப்படுகின்றன; பாதிக்கப்பட்டவரை துன்புறுத்தல் நிகழ்வுக்கு உடந்தையானவராக வைப்பதில் காட்டப்படுகிற மும்முரம், பாதிக்கப்பட்டவரின் வலியை, துயரத்தைக் கடந்துவிடுவதாக அல்லது மறுப்பதாகவும் ஆகிவிடுகிறது.

பொதுச் சமூகம் இதை மறுக்க, மறுக்க, அதை எப்படி நம்பவைப்பது என்றொரு கேள்வி வருகிறது. இதற்கு முகம்கொடுப்பதுபோல மேலும் மேலும் பாதிக்கப்பட்டவர்களின் தற்கதையாடல்கள் பெருகுகின்றன. “பாலியல் வல்லுறவுப் பண்பாடு” (rape culture) என்பதை எதிர்த்துப் போராடும் வகையாக இத்தகைய தற்கதையாடல்களின் பெருக்கம் நடக்கிறது.

விளக்கங்களின் சுழல் வட்டம்

யோசித்துப் பார்த்தால் இது ஒரு சுழல்வட்டம். திரும்பத் திரும்ப பெண்கள் அவர்களின் பாதிப்புக் கதையாடல்களை வைக்கக் கோரப்படுகின்றனர். அவர்கள் மாட்டிக்கொண்டது, பயங்கரத்தை எதிர்கொண்டு மீண்டது என்று இத்தகைய நிகழ்வின் ஒவ்வொரு கட்டத்தையும் அவர்கள் விளக்க வேண்டியிருக்கிறது. பாதிக்கப்பட்டவருக்கு உள் அழுத்தம் தரும் கூடுதல் பணி இது. ஆனாலும் பொதுச் சமூகத்துக்கு இந்தப் பாதிப்பின் பொருண்மையும் தீவிரமும் சரிவரப் புரிந்தால், இதெல்லாம் தடுக்கப்பட்டுவிடும் என்கிற ஒரு நம்பிக்கை உள்ளிடையாக உள்ளது. இந்தத் தற்கதையாடல்கள், பாதிக்கப்பட்டவர்கள், இனி பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு உதவும் சில சட்டத் திருத்தங்கள், சமூகப் பண்பாட்டு மதிப்பீடுகளில் சின்னச் சின்ன மாற்றங்கள் போன்றவை நடக்க உதவும் என்ற ஒரு நம்பிக்கை. இந்த நம்பிக்கையோடுதான் தற்கதையாடல்கள் வெளிவருகின்றன.

மேற்சொன்ன திருத்தங்கள், சீர்திருத்தங்கள் எல்லாம் நத்தை வேகத்திலாவது நடக்கக்கூடும்தான். ஆனால், பனிக்கட்டி போல் உறைந்திருக்கும் பொதுச்சமூக உதாசீனத்தை உடைக்கும் வகையில், வெளிவரும் பாதிக்கப்பட்டவர்களின் கதையாடல்கள், இன்னொரு தளத்தில் இங்கே நிலவும் பால் சமமின்மையை மீட்டுருவாக்கம் செய்துவிடுகின்றன. அதுதான் பிரச்சினை. அடிநாதமான இந்தப் பிரச்சினையைப் பேசும் எலைன் ஸ்கேரி (1975) போன்ற பெண்ணியலாளர்கள் நவீன அரசின் அதிகாரத்துக்கும் நவீனச் சித்திரவதை அனுபவங்களுக்கும் இருக்கும் தொடர்பு பற்றி செய்திருக்கும் ஆய்வைச் சுட்டி இதை விளக்குகிறார்கள். ‘சித்திரவதை அனுபவச் சொல்லாடலால் பாதிக்கப்பட்டவரின் துயரத்தை, வலியை வார்த்தைகளில் கொண்டுவர முடியும்’ என்ற புரிதல் எத்தனை குறைவுபட்டது என்பதை எடுத்துக் கூறும் ஆய்வு அது. ஒருவர் அனுபவித்த சித்திரவதை வலியை, துயரத்தை வார்த்தைகளில் கொண்டுவருவது, பகிர்வது இயலாத காரியம் என்பதே ஸ்கேரியின் கருத்து. ஒப்பிடுதல், சுட்டிப் பேசுதல், விவரித்தல் போன்ற எந்த வகை தொடர்புறுத்தல் உத்திகளுக்கும் அப்பாற்பட்டதாக ஒருவர் அனுபவிக்கும் வலியின் தன்மை உள்ளது என்பது அவர் வாதம்.

அனுபவித்து உணர்தலும் கேட்டு அறிதலும்

இருந்தாலும் ஊடகத்துக்கு முன்னால், மனித உரிமைப் போராளிகளின் முன்னால், நீதிமன்றங்களில், சித்திரவதை அனுபவித்தவரின் வலி பற்றிய தற்கூற்றுகளைக் கேட்கிறோம். வலியைப் பிரதிநிதித்துவப்படுத்த (represent) இத்தகைய முயற்சிகள் கைகொள்ளப்பட்டாலும், வலி என்பதை அடுத்தவர் உணரும் வகையில் ஒருவர் கடத்திவிட முடியாது என்பதையே ஸ்கேரி கூறுகிறார். ஏனெனில், வலி என்பது நேரடியாக அனுபவிக்கும் ஒருவருக்கு நிச்சயமான ஓர் அனுபவமாக இருக்கும்போது, அதைக் கேட்டறியும் இன்னொருவருக்கு, அவர் எத்தனை பரிவோடு இதைப் பார்த்தாலும், அந்த அனுபவம் சந்தேகத்தின் சாயையோடுதான் கிடைக்கும் என்கிறார் அவர். எனவே, இதன் விளைவாக, நவீன சித்திரவதை குறித்த சொல்லாடல்கள், சித்திரவதை அனுபவத்துக்கு ஆளானவரின் வலியைக் கடத்தச் செய்யும் முயற்சிகள் எல்லாமே, இந்த முயற்சிகளில் வெற்றிபெற முடியாமல் வேறொன்றைச் செய்துவிடுகின்றன; அரசின் அதிகாரத்தை (state power) மக்கள் வாழ்வின் எதார்த்தமென, மீளமுடியாத எதார்த்தமென, நிறுவிவிடுகின்றன. அதாவது கடத்தமுடியாத, மௌனித்திருக்கும் வலியின் துயரம், நவீன அரசு அதிகாரத்தின் ‘உண்மையை,’ ‘யதார்த்தத்தை’ நிறுவக்கூடியதாக உருமாறிவிடுகிறது.

வலிக்கும் அதிகாரத்துக்கும் இடையில் ஊடுபாவும் இந்தச் சிக்கலான தொடர்பு, பாலியல் வன்முறை பற்றிய சொல்லாடல்களின் தளத்திலும் நடக்கிறது. பாலியல் வன்முறையால் உண்டான வலியை விவரிக்கும் சொல்லாடல்கள் மூலம் ஒரு வகையில் ஆண்மை என்பது ஏதோ ‘உண்மையான’ அதிகாரம் மிக்கதாக, இயல்பாகவே ‘வலிமை’ மிகுந்ததாக, வாழ்வில் உறுதிப்படுத்தப்பட்ட எதார்த்தமாக நிறுவப்படுதலும் நடக்கிறது. “அப்போது என்ன செய்தீர்கள்?” “ஏன் எதிர்க்கவில்லை?” என்ற கேள்விகளுக்கான பதில்கள் பல சமயம், சூழலின் காரணமாக, பாதிக்கப்பட்டவர்களின் கையறு நிலையை விளக்கும் அதே சமயத்தில், அதையும் மீறி ஆண்மையின் சமூக அதிகாரத்தைப் பறைசாற்றுவதாகவும் ஆகிவிடுகின்றன.

சித்திரவதையின் காட்சித் தன்மை

இங்கே பிரச்சினை பதில்களிடமோ, அவற்றைக் கூறுபவர்களிடமோ அல்ல. இந்தச் சமூக அவலத்தை, உள்ளுணர்வின் மூலமாக, நியாய உணர்வைத் தூண்டுவதன் மூலமாக எப்படியோ கடத்திவிட முடியும் என்ற நம்பிக்கையோடுதான் அவர்கள் விளக்கங்களை, பதில்களைத் தந்தபடி இருக்கிறார்கள். ஆனால், வலியின் கடத்த முடியாத தன்மை காரணமாக, பாதிக்கப்பட்டவரின் சொல்லாடல்கள், சித்திரவதையின் காட்சிச் சித்திரத்தன்மையோடு கூடியதாக மாறிவிடுகின்றன, இந்தச் சொல்லாடல்கள் ஆண்மை, பெண்மை என்கிற இருமைக் கட்டமைப்புகளை மேலும் ஸ்திரப்படுத்தி விடுகின்றன. இவற்றைப் படிப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் ஆண்மையின் அதிகாரம் ஒரு கல் தூணைப் போல தகர்க்கமுடியாத தோற்றத்தைத் தந்துவிடுகிறது.

எந்த அளவுக்கு பாலியல் துன்புறுத்தல் அல்லது வன்முறை என்கிற சமூக அவலத்தை உணர்த்த எடுக்கும் முயற்சிகள் அவசியமோ, அதை விட முக்கியம் வலியது என்று நிறுவப்பட்டிருக்கும் ஆண்பால் தன்னிலையின் உடைபடக்கூடிய தன்மையை எடுத்துக்காட்டுவது. ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ நாவல் போன்ற இலக்கிய ஆக்கங்கள் இந்த உடைக்கும் வேலைக்கு உதவக்கூடும்.

இந்த நாவலின் பாலின உறவுத்தளம் பற்றி இரண்டு குறிப்பிடத்தகுந்த கட்டுரைகளை வாசித்திருக்கிறேன். ஒன்று ஜெயமோகன் எழுதியிருப்பது, இன்னொன்று சுரேஷ்குமார இந்திரஜித் இந்த நாவலின் காலச்சுவடு கிளாசிக் எடிஷனுக்காக எழுதியிருக்கும் முன்னுரை. மரபுக்கும், லௌகீக அற்பத்தனத்துக்கும், சுயசிந்தனை அற்ற பெண் இருப்புக்கும் இடையே அல்லாடும் கங்கா என்கிற ஒரு நவீன பெண்ணின் தனித்தன்மை, அவளது பாலியல் உரிமை, மற்றும் தேடல் சார்ந்த பிரதியாக ஜெயமோகன் இந்த நாவலை வாசித்திருக்கிறார். சுரேஷ்குமார இந்திரஜித் கங்காவின் உளவியலை ஒரு புதிராக, அடக்கப்பட்ட பாலியல் உணர்வுகள் என்ற ஃப்ராய்டியப் பின்னணியில் வாசிக்கலாம் என்ற பார்வையை வாசகர்களுக்கு நகர்த்துகிறார்.

ஒரு செழுமையான இலக்கிய ஆக்கம் காலந்தோறும் மாறுபட்ட வாசிப்புகளுக்குத் தன்னைத் தரக்கூடியது. பாலியல் துன்புறுத்தல், வன்முறை பற்றிய சொல்லாடல்கள் பெருகியிருக்கும் இன்று, இந்த நாவல் எனக்குப் பெண்ணின் பாலியல் வேட்கை, பெண் உளப்புதிர் என்பவற்றுக்கு அப்பால், பாலியல் துன்புறுத்தல் என்பது பிற சமூகச் செயற்பாடுகளோடு கொண்டிருக்கும் தொடர்பையும், அடையாளத்தையும் எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது. இத்தோடு, பாலியல் விவகாரத்தில் ‘சம்மதம்’ போன்ற கருத்தாக்கங்களின் ஆண்மையத் தன்மையைப் பேசுவதாக உள்ளது. தவிர, ஆண்மை, பெண்மை என்று இங்கு பொதுவாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கும் குணாம்சங்களை, பால் கட்டமைப்புகளை சில கதைக்கட்டங்களில் நாவல் கலைத்து ஆடவும் செய்கிறது.

என் முந்தைய கட்டுரையில் குறிப்பிட்டதைப் போல, கங்காவுக்கு பஸ் பயணத்தில் நேரும் விருப்பமில்லாத அனுபவம் தனித்த நிகழ்வாக வைக்கப்படவில்லை. அதே பஸ் பயணத்தின்போது அவள் தனது கதையை (போல ஒன்றை) ஆர்.கே.வியின் எழுத்தில் படிக்கிறாள். பஸ் பயணத்தின்போது வெளியே மழை பெய்கிறது. தன்மேல் சாய்பவனிடமிருந்து தப்பித்து அவள் அமர்கையில் இடி இடிக்கிறது. அப்போது அவள் வாசிக்கும் கதையிலும் ‘வானம் கிழிந்து அறுபட்டது! இடியோசை முழங்கி வெடித்தது!’ அதே சமயத்தில் அந்த மழையும் இடியும் பல வருடங்களுக்கு முன்னான ஒரு மழைத்தருணத்தை நினைக்க வைக்கிறது. அப்போது அவள் தலையில் விழுந்த ‘இடியோசை.’ அந்த இடியோசையோடு நாவலின் முதல் அத்தியாயம் முடிகிறது; முதல் அத்தியாயத்தில் கங்கா வாசிக்கும் ஆர்,கே.வியின் கதையும் முடிகிறது.

இடி என்கிற motif நாவலின் கதையாடலில் எவ்வகையில் பங்குபெறுகிறது? இதிலிருந்து தொடங்கலாம்.

(அலசல் தொடரும்)

கட்டுரை மற்றும் நூல் சுட்டிகள்

Heberle, Renee. “Deconstructive Strategies and the Movement against Sexual Violence.” Hypatia, Vol. 11, No.4, Women and Violence (Autumn, 1996), pp. 63-76.

Scarry, Elaine. 1985. The Body in Pain: The Making and Unmaking of the World. London: Oxford University Press.

ஜெயமோகன். “சில நேரங்களில் சில மனிதர்கள்: ஒரு கழுவாய்.” மே 12, 2017. https://www.jeyamohan.in/98338#.W9hpu3tKjIU

சுரேஷ்குமார இந்திரஜித். “ஒரு பெண்ணின் உளவியல்.” சில நேரங்களில் சில மனிதர்கள். ஜெயகாந்தன். காலச்சுவடு: நாகர்கோயில், 2014.

#MeToo குறித்த பெருந்தேவியின் இதர கட்டுரைகள்:

ஆண்மையச் சமூகக் கொள்ளை நோய்!

காமத்தின் பேரம்!

#MeToo மேட்டுக்குடிப் போராட்டமா?

பாலியல் வன்முறையை எப்படி வரையறுப்பது?

பாலியல் துன்புறுத்தல் இயல்பாக்கப்படும் விதம்!

பாலியல் வன்முறைகளின் அடிப்படை எது?

வியாழன், 1 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon