மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 19 செப் 2020

மீ டூ: கேலி செய்யாதீர்கள்!

மீ டூ: கேலி செய்யாதீர்கள்!

“மீ டூ மூலமாக தைரியமாக எழ வேண்டிய குரல் எழுந்துகொண்டிருக்கிறது, அதனை யாரும் கேலி செய்ய வேண்டாம்” என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

பெண்கள் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் சீண்டல்களையும், துன்புறுத்துதல்களையும் #me too என்னும் ஹாஷ்டேக்கை பயன்படுத்தி ட்விட்டரில் வெளிப்படுத்தி வருகின்றனர். முன்னாள் மத்திய அமைச்சர் அக்பர், வைரமுத்து உள்பட ஏராளமான பிரபலங்கள் மீது புகார் எழுந்துள்ளது. இதற்கு அவர்கள் விளக்கமும் அளித்துள்ளனர். #me too விவகாரத்தில் பெண்களுக்கு ஆதரவு கூடிவரும் அதே வேளையில், இத்தனை ஆண்டுகள் பாலியல் புகார் கூறாமல் தற்போது ஏன் கூறுகிறார்கள் என்று சிலர் கேள்வியும் எழுப்பியுள்ளனர்.

இந்த நிலையில் சென்னை பெரும்பாக்கத்திலுள்ள ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில், இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்த " கெட் யூவர் ஹான்ட்ஸ் ஆப் மீ (Get your freaking hands off me)" என்ற இசை குறுந்தகடு வெளியீட்டு விழா நடைபெற்றது. இசைக் குறுந்தகட்டை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார்.

பின்னர் பேசிய கமல்ஹாசன், “மீ டூ என்று ஆங்கிலத்தில் சொல்வது நன்றாக உள்ளது. நானும் பாதிக்கப்பட்டுள்ளேன் என்பதை உள்ளடக்கிய சொல்தான் அது. தற்போது இது கோரஸாக எழுகிறது. இப்போது ஏன் அதனை சொல்கிறார்கள் என்று சிலர் கோபித்துக் கொள்கிறார்கள். எப்போது எழுந்தால் என்ன? நியாயமாக, தைரியமாக எழ வேண்டிய குரல் எழுந்து கொண்டிருக்கிறது, அது எழட்டும். அதனை கேலி செய்யாதீர்கள். உடன்கட்டை ஏறுதல் என்பதை இறுநூறு வருடங்களுக்கு முன்பு சொன்னாலும் தவறுதான், அதை தற்போது சொன்னாலும் தவறுதான்” என்று தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த கமல்ஹாசன், மக்கள் தலைவராவதற்கு தன்னிடம் நேர்மை உள்ளதெனக் குறிப்பிட்டார். முழு நேர அரசியல்வாதி என்னேரமும் அரசியல் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பார். பகுதி நேர அரசியல்வாதி அடிக்கடி சுவிட்சர்லாந்து சென்றுவருவார் என்றும் தெரிவித்தார்.

நிகழ்வுக்கு பிறகு பெரும்பாக்கம் அருகே எழில் நகரில் உள்ள தமிழக அரசின் குடிசை மாற்று வாரியை குடியிருப்பு வளாகத்துக்கு கமல்ஹாசன் சென்றார். அப்போது எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை என அங்கு வசிக்கும் குடியிருப்புவாசிகள், கமல்ஹாசனிடம் புகார் தெரிவித்தனர்.

வெள்ளி, 2 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon