மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 5 ஜூலை 2020

சிறப்புத் தொடர்: கபாடிவாலாக்களைக் கண்டுபிடியுங்கள்!

சிறப்புத் தொடர்: கபாடிவாலாக்களைக் கண்டுபிடியுங்கள்!

நரேஷ்

சென்னைக்குச் செய்ய வேண்டியது என்ன? - 14

சென்னை மாநகராட்சியில் கொட்டப்படும் குப்பைகளில் மறுசுழற்சி செய்யக்கூடிய குப்பைகளைச் சேகரிப்பவர்கள் முதல் நிலை செயலாளர்கள் (Level 0 aggregates).

இவர்களால் மூட்டைகளில் சேகரிக்கப்பட்டு கொண்டுவரப்படும் மறுசுழற்சி செய்யக்கூடிய குப்பைகளைக் காசு கொடுத்து வாங்குபவர்கள் கபாடிவாலாக்கள். இவர்கள்தான் இரண்டாம் நிலைச் செயலாளர்கள் (Level 1 aggregates).

பேப்பர் கடைகளாகவும் காயலான் கடைகளாகவும் இரும்புச் சாமான் கடைகளாகவும் வெவ்வேறு பெயர்களில் பரந்து விரிந்திருக்கும் இவர்கள், தாங்கள் சேகரித்த பொருட்களை ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் இருக்கும் கொள்முதல் நிலையமான மூன்றாம் நிலைச் செயலாளர்களிடம் கொண்டு சேர்ப்பார்கள். இவர்கள்தான் கடைநிலைச் செயலாளர்கள். (Level 2 aggregates). இங்குதான் சேகரிக்கப்பட்டு எடுத்துவரப்பட்ட குப்பைகள் 45 வகைகளாகப் பிரிக்கப்பட்டு, அவற்றின் தன்மைக்கேற்றவாறு பல்வேறு நிலைகளில் மறுசுழற்சி செய்யப்படும்.

இந்த மூன்று நிலைச் செயலாளர்களைத் தாண்டினால், குப்பை என்பது செல்வமாக மாறிவிடும். மூலப் பொருளாக(Raw source) பரிணாமம் அடைந்து மறுபயன்பாட்டிற்குத் தயாராகிவிடும். அதன் பிறகு அவை சிறு குறு தொழிலாளர்கள் மற்றும் இதர தொழிற்சாலைத் தேவைகளுக்குச் சென்றுவிடும்.

இந்த மூன்று நிலைகளிலும் வேலை செய்பவர்களை ‘Informal Sector workers' என்றழைப்பார்கள். அதாவது, அரசின் அதிகார வரம்பிற்குட்படாது மாநகராட்சி பணிகளில் செயல்படுபவர்கள் இவர்கள். முறைசாராத் துறைகளின் தொழிலாளர்கள்.

அதிர்ச்சியான செய்தி என்னவென்றால், அரசாங்க சுகாதாரத் துறையின் கீழ் பணி செய்யும் துப்புரவுத் தொழிலாளர்கள் முதல் கழிவு மேலாண்மை பேராசிரியர்கள் வரை உள்ள முறைசார் கட்டமைப்பைவிட (Formal sector employees), முறைசாராத் தொழிலாளர்கள்தான் அதிகமான சுகாதாரப் பணிகளைச் செய்கின்றனர். ஒரு வருடத்திற்கு ஒரு லட்சத்து முப்பதாயிரம் டன் குப்பைகளை மறுசுழற்சி செய்கிறார்கள் இத்தொழிலாளர்கள். இதற்கான ஆதாரத்தை இங்கே காணலாம்.

‘kabadiwalla connect' செயலி கைகொடுக்குமா?

தீர்வை எட்டுவதற்கு இவர்களை எட்டும் தூரத்தில் வைக்க வேண்டும் என்கிறார் சித்தார்த் ஹாண்டெ. தொழில்முறையாகத் தகவல் ஆய்வு (Data analyst) வல்லுநராகப் பணியாற்றும் இவர், சென்னைக்காக ஒரு முக்கியமான பணியைச் செய்திருக்கிறார். குப்பை சேகரிப்பவர்களுக்குக் குப்பைகள் தேவை. குப்பையை உருவாக்குபவர்களுக்குக் குப்பையை அப்புறப்படுத்தச் சரியான வழிமுறை தேவை. இவர்களை இணைப்பதுதான் திட்டம். அதற்காக இணைந்த நண்பர்கள் உருவாக்கிய செயலிதான் ‘kabadiwalla connect'.

இந்தச் செயலி என்ன செய்யுமென்றால், உங்கள் பகுதியில் உள்ள கபாடிவாலாக்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அவர்களைத் தொடர்புகொண்டு உங்கள் குப்பைகளைச் செல்வமாக மாற்ற வேண்டியதுதான். மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்கள் எவை என்பதை அவர்களே பட்டியலிட்டுப் பாடம் எடுப்பார்கள். அதன்படி குப்பைகளை முறையாகப் பிரித்துக் கொடுப்பது மட்டுமே நம் வேலை.

இந்த முறைசாராத் துறையில் முதல் நிலையில் இருப்பவர்கள் மிகவும் சுகாதாரமற்ற முறையில்தான் குப்பைகளைத் தோண்டித் திரிந்து சேகரித்து வருகிறார்கள். நாம் தூக்கி எறிந்த குப்பையைத் திரும்பத் தொடுவதற்கே தயங்கும்போது, நம் குப்பைகளைப் பிற மனிதர்கள் அப்புறப்படுத்துவதை அனுமதிப்பது அறமற்ற செயல் அல்லவா? நம்முடைய வேலை மிகவும் எளியது. வீட்டில் சேகரமாகும் குப்பைகளில் மறுசுழற்சி செய்யத் தகுந்தவற்றை மட்டும் தனியாக சேகரித்து, அச்சாதாரண மக்களுக்குப் பரிசளிக்க வேண்டும். அக்குப்பை அவர்களுக்கான பரிசுதான்.

“அவர்கள் நமக்காகச் செய்யும் சேவை மிகவும் மகத்தானது. அவர்களை நாம் அங்கீகரிக்க வேண்டும். கொண்டாட வேண்டும். அவர்கள் நம் எதிர்காலத்தைப் பாதுகாக்க வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நம் நன்றியைத் தெரிவிக்க எளிய வழி - அவர்களுக்கு இக்குப்பைகளைப் பரிசளிப்பதுதான்” என்கிறார் சித்தார்த்.

இதை அவர்களுக்கான சேவையாக நீங்கள் கருதினாலும் சரி. உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கான முன்னேற்பாடாகக் கருதினாலும் சரி. சுயநலமோ, பொது நலமோ இந்தச் சின்ன செயலால் மிகப்பெரிய மாற்றங்கள் நடக்கும். https://www.kabadiwallaconnect.in/ என்ற முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களைச் சேமித்து உங்கள் பகுதியில் உள்ள கபாடிவாலாக்களைக் கண்டுகொள்ளுங்கள்.

அடுக்குமாடிக் குடியிருப்புகளாக இருந்தால், ஒரு குழுவாக இணைந்து மறுசுழற்சி செய்யக்கூடிய குப்பைகளை மொத்தமாகச் சேகரித்து அவர்களுக்குப் பரிசளியுங்கள். இந்த இணையதள முகவரியில் உங்கள் பகுதி கபாடிவாலாக்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், நேரடியாகச் சென்று தேடுங்கள். எப்படியும் இரண்டு தெருக்கள் தள்ளியாவது இருப்பார்கள் இவர்கள்.

நல்ல திரையரங்கையும், உணவகத்தையும் தேட நாம் எடுத்துக்கொள்ளும் சிரமங்களைப் பொருட்படுத்துவதில்லை. இவற்றைவிட மிக முக்கியமான தேவைக்காகக் கொஞ்சம் மெனக்கெடலாமே?

கபாடிவாலாக்களைக் கண்டுபிடியுங்கள்! அவர்களுக்குப் பரிசளியுங்கள். தீப ஒளித் திருநாள் சிறப்பாக இந்தச் செயலை செய்யுங்கள். வரும் நாட்கள் தித்திப்பானதாக அமையும்!

(தீர்வுக்கான தேடல் தொடரும்...)

பகுதி 1

பகுதி 2

பகுதி 3

பகுதி 4

பகுதி 5

பகுதி 6

பகுதி 7

பகுதி 8

பகுதி 9

பகுதி 10

பகுதி 11

பகுதி 12

பகுதி 13

சனி, 3 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon