மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 9 ஜூலை 2020

கதைத் திருட்டைக் கண்டறிவது சவாலானது: பா.இரஞ்சித்

கதைத் திருட்டைக் கண்டறிவது சவாலானது: பா.இரஞ்சித்

கதைத் திருட்டு என்பது மிகவும் சிக்கலானது, அதைத் தெளிவாக வரையறுப்பது கடினம் என்று இயக்குநர் பா.இரஞ்சித் கருத்து தெரிவித்துள்ளார்.

நேற்று (நவம்பர் 4) சென்னை ஆழ்வார்பேட்டையில் குழந்தைகள் வரைந்த ஓவியக் கண்காட்சியைத் திறந்து வைத்தபோது இரஞ்சித் கதைத் திருட்டு பற்றிய தன் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் உதயநிதி ஸ்டாலின், கிருத்திகா உதயநிதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பா.இரஞ்சித், திரைத் துறையில் கதைத் திருட்டு விவகாரம் பற்றி பேசினார். அதில், “இதில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அதில் உண்மை பொய் இரண்டுமே இருக்கிறதா, இல்லையா என்பதைக் கண்டுபிடிப்பதே மிகப்பெரிய சவாலான விஷயம்.

படைப்பாளி என்பவன் யார், உண்மையிலேயே அங்கிருந்து திருடினாரா என்ற கேள்வி இருக்கிறது. அப்படி திருடிய பின்பும் அதை எப்படி நிரூபிக்க வேண்டும் என்ற கேள்வியும் இங்கிருக்கிறது. தான் எழுதிய கதையைப் பதிவு செய்ய வேண்டும் என்றெல்லாம் திட்டமிடல் தமிழ்ச் சூழலில் யாரிடமும் இல்லை. ஆனால், தற்போது அந்தச் சூழல் உருவாகி எல்லோருக்கும் பயம் வந்திருக்கிறது. இனி கண்டிப்பாகப் பதிவு செய்வார்கள் என்று நினைக்கிறேன்” என்றார்.

மேலும், சேலம் சிறுமி ராஜலட்சுமி படுகொலை பற்றி பேசும்போது, “சேலம் ராஜலட்சுமி கொலை வழக்கில் முதல் தகவல் அறிக்கை மேலோட்டமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சுவாதி, நிர்பயா விவகாரத்தில் இருந்த அரசியல் அழுத்தம் ராஜலட்சுமி கொலை வழக்கில் இல்லை” என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து “மீ டூ விவகாரம் வரவேற்கக்கூடிய ஒன்று, அது சரியா, தவறா என்பதைப் பின்னர் பார்க்க வேண்டும். பொதுவெளிகளில் பணி செய்யும் பெண்களின் பிரச்சினை குறித்துப் பேசக்கூடிய ஒரு தளமாக மீ டூ பயன்படுகிறது” என்றார்.

திங்கள், 5 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon