மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 15 ஆக 2020

சிறப்புக் கட்டுரை: குடிபெயர்வதால் விவசாயம் வளர்கிறதா?

சிறப்புக் கட்டுரை: குடிபெயர்வதால் விவசாயம் வளர்கிறதா?

தீபன்விதா கீதா நியோகி

கடந்த நூறாண்டுகளாகவே மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தைச் சிறப்பாக்கிக் கொள்ள அல்லது அதிகபட்ச தேவைக்காக குடிபெயர்வதை மேற்கொண்டு வருகின்றனர். பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டில் முக்கியக் காரணியாகவே குடிபெயர்வு உள்ளது. 2018ஆம் ஆண்டுக்கான உணவு மற்றும் வேளாண் நிலை (SOFA) அறிக்கை உணவு மற்றும் வேளாண் அமைப்பால் (FAO) வெளியிடப்பட்டுள்ளது. வேளாண் குடும்பங்களில் கிராமப்புற குடிபெயர்தல் அடிக்கடி நிகழ்வதாக இந்த அறிக்கை கூறுகிறது. குடிபெயர்தலும், வேளாண்மையும் எப்படி ஒன்றோடு ஒன்று நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ளது என்பது குறித்து SOFA பப்ளிகேஷனின் ஆசிரியரும், FAOவின் பொருளாதாரவியலாளருமான ஆண்டிரியா கெத்தானியோ டவுன் டூ எர்த் ஊடகத்திடம் பேசியுள்ளார். அதன் தமிழாக்கத்தைக் காணலாம்.

உணவு மற்றும் வேளாண் அமைப்பு வெளியிட்ட உணவு மற்றும் வேளாண் நிலை அறிக்கையில் உணவுப் பொருட்கள் உற்பத்திக்குப் போதுமான தண்ணீர் இல்லாமையும் குடிபெயர்தலுக்கான ஒரு காரணியாகக் கூறப்பட்டுள்ளது. இந்தியாவிலும் நிலத்தடி நீர்மட்டம் வேகமாகக் குறைந்து வருகிறது. எனவே இந்தியாவும் அரிசி, கோதுமை, தானியங்கள் போன்றவற்றிலிருந்து பயிர் முறையை மாற்றிக்கொள்ள வேண்டுமென்று கருதுகிறீர்களா?

ஒரு நாட்டின் அல்லது சில பகுதிகளில் பயிர் முறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்குத் தண்ணீர் இருப்பை மட்டுமே ஒரு காரணமாகக் கூற இயலாது. இது மிகவும் சிக்கலான முறையாகும். இதில் பல்வேறு பொருளாதார, சமூக, அரசியல் காரணிகள் நிறைந்துள்ளன. பயிர் தேர்வு நாட்டின் ஆழமான மற்றும் குறிப்பிட்ட மதிப்பீட்டினால் தொடர்ந்து நீட்டிக்கப்பட வேண்டும் என்பதுதான் FAOவின் ஆலோசனையாக இருக்கும். இந்தக் காரணிகளைக் கணக்கில்கொண்டு எந்தவொரு நாடும் பயிரிடலாம். அதேபோல அரிசி மற்றும் கோதுமைக்குப் பயன்படுத்தப்படும் தண்ணீரின் அளவையும் ஆய்வு செய்து கொள்ளலாம். எந்தவொரு பயிருக்கும் தண்ணீர் இருப்பு என்பது மிகவும் அவசியமானது.

அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வின்படி வறட்சி மற்றும் பருவநிலைகள் குடிபெயர்தலில் ஆதிக்கம் செலுத்தும் காரணிகளாக உள்ளன. இந்த அறிக்கையில் கிழக்கில் உள்ள சில நாடுகளை ஆய்வு செய்தோம். 2007 முதல் 2009 வரையில் இந்தப் பகுதிகளில் கடுமையான வறட்சி நீடித்தது. இதனால் அந்தப் பகுதிகளில் உணவுப் பாதுகாப்பின்மையும், இடப்பெயர்வும் நிகழ்ந்தது.

சிரிய அரபுக் குடியரசில் இயற்கை வளங்களைச் சீரழிப்பதில் பொது தலையீட்டுக் கொள்கைகள் முக்கியப் பங்காற்றின. நெருக்கடிக்கு முன்னர், சிரிய அரசாங்கம் தானிய வளர்ப்பை மேய்ச்சல் நிலங்களுக்குத் தீங்கு விளைவிப்பதாக ஊக்குவித்தது. வறண்ட அல்லது அரை வறண்ட பகுதிகளில் பயிர் விரிவாக்கம் செய்தது. ஆனால், அங்கு 200 மில்லி மீட்டருக்கு மேல் மழைப்பொழிவு இல்லை. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து சாகுபடி பரப்பு குறைந்தது.

அதுமட்டுமின்றி கூடுதலாக, பாசன - தீவிரமான பயிர்கள் (கோதுமை மற்றும் பருத்தி) நிலத்தடி நீர் அளவைக் குறைக்கும் வகையில் இருப்பதும், அதற்கேற்றவாறு அரசாங்கக் கொள்கைகள் எவ்வாறு சாதகமாக இருந்தன என்பதையும் பல ஆய்வுகள் காட்டுகின்றன. இதனால் வறட்சியை எதிர்கொள்ளும் திறன் சிரிய விவசாயிகளிடம் குறைந்தது. 2007-09 வரையிலான ஆண்டுகளில் கடுமையான வறட்சி அங்கு ஏற்பட்டது.

பெண்கள் குடிபெயர்வு அதிகரித்ததைத் தூண்டியது எது? பெண்கள் இன்னமும் விவசாயத் துறையில் அதிகாரம் பெற்றவர்களாக இல்லை என்பதைத்தான் இது காட்டுகிறதா?

2001ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, அதற்கு முந்தைய மக்கள் தொகைக் கணக்கெடுப்பிலிருந்து நடந்த 65 விழுக்காடு பெண்கள் குடிபெயர்தலுக்குத் திருமணமே காரணமாக இருந்துள்ளது. அதிலும் 78 விழுக்காட்டினர் கிராமங்களிலிருந்து கிராமங்களுக்கே குடிபெயர்ந்துள்ளனர். வெறும் 3 விழுக்காடு பெண்கள் மட்டுமே வேலைகளுக்காகக் குடிபெயர்ந்துள்ளனர். ஆண்களைப் பொறுத்தவரையில் வேலைகளுக்காகவே அதிகளவில் குடிபெயர்ந்துள்ளனர். அதில் 38 விழுக்காடு ஆண்கள் கிராமங்களிலிருந்து கிராமங்களுக்கும், 50 விழுக்காடு ஆண்கள் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கும் குடிபெயர்ந்துள்ளனர். ஆனால் 2 விழுக்காடு ஆண்கள் மட்டுமே திருமணங்களுக்காகக் குடிபெயர்ந்துள்ளனர்.

திருமணத்திற்காகப் பெண்கள் குடிபெயர்தல் என்பது இந்தியாவில்தான் அதிகமாக உள்ளது. அதுமட்டுமின்றி பொருளாதாரக் காரணங்களுக்காகப் பெண்களும் கிராமப் பகுதிகளிலிருந்து வெளியேறத் தொடங்கியுள்ளனர். வேலைவாய்ப்புகள் மற்றும் ஊதியத்தில் காணப்படும் பெரும் வேற்றுமையே கிராமப்புறத்திலிருந்து வெளியேறுவதற்கு முக்கியக் காரணமாக உள்ளது. இவ்வாறு வெளியேறுவதால் அவர்களின் பொருளாதார நிலையில் மேம்பாடு ஏற்படுகிறது. கிராமங்களை விட்டு வெளியேறிய பின்னர் பெண்களின் திறன் மேம்படுவதாகவும் கூறுகின்றனர்.

இந்த அறிக்கையில் உள்நாட்டு இடம்பெயர்வில் உள்ள பாலின மாறுபாடுகள் மற்றும் அதிகரிக்கும் நகரமயமாக்கல் அளவுகளைப் பற்றியும் விரிவாகக் கூறியுள்ளோம். வேளாண் துறையில் பெண்கள் மேற்கொள்ளும் பணிகளைப் பொறுத்தே அவர்களுக்கு அது நேர்மறையானதா அல்லது எதிர்மறையானதா என்று கூற இயலும். அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறதா அல்லது பாலின சமத்துவமின்மை நிலவுகிறதா என்பதையும் அவர்கள் மேற்கொள்ளும் பணி நிலையைப் பொறுத்தே அமைகிறது.

சீனா போன்ற நாடுகளில் குடிபெயர்தல் வேளாண் இயந்திரமயமாக்கலை அதிகரித்ததா? பெர்மாகல்ட்சர் அடிப்படையிலான முறைகளை இந்தியாவில் தனிப்பட்ட இயக்கங்கள் முன்னெடுப்பதில் எவ்வாறு சரிசெய்ய இயலும், அது இயந்திரமயமாக்கலுக்கு ஊக்குவிப்பதைத் தடுக்கிறதா?

சிலர் இதனை வேளாண் ஊழியர்கள் தேவையைக் குறைப்பதாகக் கூறுகின்றனர். கிராமப்புறங்களிலிருந்து குடிபெயர்தல் அதிகரிக்க அதிகரிக்க வேளாண் மேம்பாடும் படிப்படியாக அதிகரிக்கும். இந்தப் போக்குதான் சீனாவிலும் நிலவியது. அங்கு 1993 முதல் 2009 வரையில் வேளாண் தொழிலாளர்களின் எண்ணிக்கை குடிபெயர்தலால் குறைந்துகொண்டே வந்தது. வேளாண் தொழில் பங்கெடுத்த குடும்பங்களின் எண்ணிக்கையும், வேளாண் தொழிலில் ஈடுபடும் நேரமும் குறைந்துகொண்டே வந்தது. ஆனால், தேசிய புள்ளிவிவரங்களின்படி, இந்தக் காலகட்டத்தில் வேளாண் உற்பத்தி 297 மடங்கு அதிகரித்துள்ளது. தானிய விளைச்சல் 19.5 விழுக்காடு அதிகரித்துள்ளது. சீன விவசாயத்தில் காணப்பட்டுள்ள இந்த மூலதனத்திற்கு ஊழியர்கள் வெளியேற்றம்தான் தொடக்கம் என்பதைத்தான் இந்தப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

கொள்கை ரீதியாகப் பார்த்தால், இயந்திரமயமாக்கல் வேளாண் உற்பத்தியை ஊக்குவிக்க ஒரு கருவியாகவே உள்ளது. இதனால் மற்ற தொழில்களை நோக்கி விவசாயத் தொழிலாளர்கள் செல்கின்றனர். இதன்மூலம் உணவு அமைப்புகள் விரிவடைவதோடு மட்டுமின்றி வேளாண் சாராத மற்ற தொழில்களும் கிராமப்புறங்களில் உருவாகின்றன. கிராமப்புறங்களில் மற்ற தொழில்களும் உருவானால் குடிபெயர்தல் ஒருவேளை குறையலாம். இது அவர்கள் இருக்குமிடத்திலேயே ஊதியத்தை அதிகரித்துக்கொள்ளவும், வாழ்க்கையைப் பரவலாக்கிக் கொள்ளவும் பயன்படுகிறது. இந்தச் சூழலில், சமூக மற்றும் வேலைவாய்ப்பு கொள்கைகள்தான் இடம்பெயர்வுகளைப் பாதிக்கின்றன. ஆனால், இது இடம் மற்றும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப வெவ்வேறு தாக்கங்களை ஏற்படுத்தலாம்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தக் கூடுதல் கருவியாகப் பெர்மாகல்ட்சர் முறைகள் அமையலாம். குடிபெயர்தலைப் பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கும்போது, பல லட்சக்கணக்கான சிறு நிலவுடைமையாளர்களுக்கு பெர்மாகல்ட்சர் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதையும் அறிய வேண்டும். இது வேளாண் தொழிலாளிகளுக்கு நன்மை பயக்கும் ஒன்றாகும். இருப்பினும், விவசாயிகள் உற்பத்தி செய்வதற்கு அது மதிப்பு சேர்க்கிறதா, இல்லையா என்பதுதான் பிரச்சினை. இந்தச் செயலாக்கத்தின் மூலம் மதிப்பைச் சேர்ப்பது வேளாண் வாழ்வாதாரத்திற்கு நிலையான வளர்ச்சியை அளிப்பதாக உள்ளது. இது நடக்கவில்லையென்றால் குடிபெயர்தல்தான் விவசாயிகளுக்குச் சிறந்த தேர்வாக இருக்கும்.

தமிழில்: ர.பிரகாசு

முந்தைய கட்டுரை: மலம் அள்ளும் அவலம் - புதிய தொழில்நுட்பம்!

மின்னஞ்சல் முகவரி: [email protected]

ஞாயிறு, 4 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon