மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 3 ஜூலை 2020

வெற்றியுடன் தொடங்கிய இந்தியா!

வெற்றியுடன் தொடங்கிய இந்தியா!

அறிமுக வீரரான க்ருனல் பாண்டியாவின் கடைசிக் கட்ட அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 போட்டியின் முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று (நவம்பர் 4) நடைபெற்றது. கரீபியன் பிரீமியர் லீக் தொடரிலிருந்து கிடைத்த இளம் வீரர்களைக் கொண்டு மேற்கிந்தியத் தீவுகள் அணி டி20 தொடரில் இந்திய அணிக்கு அதன் சொந்த மண்ணில் சவால் அளிக்கக் காத்திருந்தது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

பேட்ஸ்மேன்களின் சொதப்பலான ஆட்டத்தால் முதலில் ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணியால் 8 விக்கெட் இழப்பிற்கு வெறும் 109 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக ஃபபியன் ஆலன் 27 ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் அறிமுக பந்துவீச்சாளரான ஓஷானே தமாஸ் சிறப்பாகப் பந்துவீசி இந்திய டாப் ஆர்டரை சரிய வைத்தார். பின்னர் கார்லோஸ் பிராத்வெய்ட், காரி பியாரே ஆகியோரது சிக்கனமான பந்துவீச்சு இந்திய அணிக்கு மேலும் நெருக்கடியை உண்டாக்கியது. இதனால் இந்திய அணி 8 ஓவர்களுக்குள்ளாகவே 45 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக்கொண்டிருந்தது. அப்போது களத்தில் அனுபவ வீரர்களான தினேஷ் கார்த்திக், மனிஷ் பாண்டே இணைந்து அணியைச் சரிவிலிருந்து மீட்கப் போராடிக் கொண்டிருந்தனர்.

நிதானமாக ஆடி வந்த மனிஷ் பாண்டே 24 பந்துகளில் 19 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பின்னர் கடைசி கட்டத்தில் வந்த அறிமுக வீரர் க்ருனல் பாண்டியா அதிரடியாக 9 பந்துகளில் 21 ரன்கள் சேர்த்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். 17.5 ஓவர்களில் 110 ரன்கள் எடுத்து இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி நவம்பர் 6ஆம் தேதியன்று லக்னோவில் நடைபெறவுள்ளது.

இந்திய அணி இதுவரை ஒட்டுமொத்தமாக 104 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது. சொந்த மண்ணில் மட்டும் 32 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளது. நேற்றைய போட்டிதான் இந்திய அணி தனது சொந்த மண்ணில் தோனி இல்லாமல் களமிறங்கிய முதல் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 5 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon