மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020

பெண் பத்திரிகையாளர்கள் வர வேண்டாம்: போராட்டக் குழு!

பெண் பத்திரிகையாளர்கள் வர வேண்டாம்: போராட்டக் குழு!

சபரிமலைக்குப் பெண் பத்திரிகையாளர்கள் பணிக்கு வர வேண்டாம் என்று ஊடகங்களுக்குப் போராட்டக் குழு கடிதம் அனுப்பியுள்ளது.

சபரிமலைக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து கேரளாவில் பதற்றமான சூழ்நிலை நிலவிவருகிறது. தீர்ப்பு வழங்கிய பின்னரும்கூட ஐயப்பன் கோயிலுக்குப் பெண்கள் செல்ல அனுமதி மறுத்து ஆர்எஸ்எஸ், காங்கிரஸ் என பல்வேறு கட்சியினரும் போராட்டங்களை நடத்திவருகின்றனர்.

கடந்த மாதம், பெண் பத்திரிகையாளர் கவிதா மற்றும் பெண்ணியவாதி ரஹேனா ஆகியோர் சபரிமலை நோக்கிச் சென்றனர். எனினும் பலத்த போராட்டம் காரணமாக அவர்களால் கோயிலுக்குள் நுழைய முடியவில்லை. இந்தப் போராட்டத்தில் பத்திரிகையாளர்கள் சிலர் தாக்கப்பட்டனர்.

அப்போது, “போராட்டத்துக்கு ஆர்எஸ்எஸ் இயக்கம்தான் காரணம். பத்திரிகையாளர்களைத் தாக்குவது போன்ற சம்பவங்கள் எல்லாம் கேரளாவில் இதுவரை நடந்ததில்லை” என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் வருத்தம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சித்திரை ஆட்டத் திருநாள் பூஜைக்காக இன்று (நவம்பர் 5) ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படவுள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இலவங்கல், நிலக்கல், பம்பை, மற்றும் சன்னிதானம் ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள, விஸ்வ இந்து பரிஷத் (விஎச்பி) மற்றும் இந்து ஏக்யவேதி உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகளின் கூட்டு அமைப்பான சபரிமலை கர்மா சமிதி, அனைத்து ஊடகங்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், சபரிமலை கோயிலின் மரபுகள், பழக்க வழக்கங்களுக்கு எதிராக 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்களை வலுக்கட்டாயமாகக் கொண்டுவருவதில் மாநில அரசு பிடிவாதமான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. இந்த வயதினரைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர்கள் தங்கள் வேலையின் ஒரு பகுதியாக அங்கு நுழைவதுகூடச் சூழ்நிலையை மோசமாக்க வாய்ப்புள்ளது. எனவே, மேற்கூறிய வயதினரைச் சேர்ந்த பெண்கள் பத்திரிகையாளர்களை சபரிமலைக்கு அனுப்புவதைத் தவிருங்கள்” என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திங்கள், 5 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon