மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 13 ஜூலை 2020

காய்ச்சல்: கோவையில் அமைச்சர்கள் ஆய்வு!

காய்ச்சல்: கோவையில் அமைச்சர்கள் ஆய்வு!

டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகத் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் நேற்று (நவம்பர் 4) ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து, அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர் அமைச்சர்கள். கோவை அரசு மருத்துவமனையில் 67 பேர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. அதில், டெங்கு காய்ச்சலுக்கு இரண்டு பேரும், பன்றிக் காய்ச்சலுக்கு 17 பேரும் சிகிச்சை பெற்று வருவதாகவும் அமைச்சர்கள் தெரிவித்தனர்.

“கடந்த ஆண்டைவிட நடப்பாண்டு டெங்கு, பன்றிக் காய்ச்சல் 90 சதவிகிதம் அளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. சுகாதாரத் துறையும் உள்ளாட்சித் துறையும் இணைந்து முழுமையான கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது.

அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகளும், மருத்துவர்களும் தயாராக உள்ளனர். தனியார் மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுபவர்களின் விவரங்களைச் சேகரித்து வருகிறோம். இனி காய்ச்சலால் உயிரிழப்புகள் இருக்கக் கூடாது என்பதில் அரசு தீவிரமாக உள்ளது” என்று தெரிவித்தனர் அமைச்சர்கள்.

ஞாயிறு, 4 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon