மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 15 ஆக 2020

சிறப்புக் கட்டுரை: சமத்துவத்துக்கான ஒரு பயணம்!

சிறப்புக் கட்டுரை: சமத்துவத்துக்கான ஒரு பயணம்!

ர.ரஞ்சிதா

திரைப்படம் எடுப்பதுடன் தன் வேலை முடிந்தது என்று இல்லாமல் சமூகப் பண்பாட்டுத் தளத்தில் பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்துவரும் இயக்குநர் பா.இரஞ்சித்தின் ‘நீலம் பண்பாட்டு மையம்’ சார்பில் இளம் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களுக்காகப் பயிலரங்கு ஒன்று நடைபெற்றது. ‘சமத்துவம் அறிதல்’ என்ற தலைப்பில் திண்டிவனத்தில் மூன்று நாட்கள் (அக்டோபர் 25, 26, 27) நடைபெற்ற இந்த நிகழ்ச்சி சமூக யதார்த்தங்கள் குறித்த புரிதலை விரிவுபடுத்த உதவியதுடன் படைப்பூக்கம் மிகுந்த சிந்தனைகளையும் விதைத்தது.

அரங்குக்கு வெளியே நீல நிற பலூன்கள் மாலை போல அமைக்கப்பட்டிருந்தன. புத்தகக்கடை, துணிப்பை போன்றவை அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அரங்கின் மேடையில் ‘சமத்துவம் அறிதல்’ பேனர் இருந்தது. அனைவரும் சமம் என்பதற்கு ஏற்ப மேடையில் இருந்த நாற்காலிகளும், கீழே பங்கேற்பாளர்களுக்குப் போடப்பட்ட நாற்காலிகளும் ஒரே விதமாக அமைந்திருந்தன.

பயிலரங்கைத் தொடங்கிவைத்த இரஞ்சித், “இந்தச் சமூகம் நமக்கு இரண்டு வாய்ப்புகளைக் கொடுக்கிறது. ஒன்று இந்தச் சமுதாயத்தில் உள்ள சாதி வேற்றுமை, மத வேற்றுமை, பாலின பாகுபாடு, பெண் அடிமைத்தனம் ஆகியவை பற்றி கேள்வி கேட்காமல் இருக்கக்கூடிய வாய்ப்பு. இன்னொன்று கேள்வி கேட்கக்கூடிய வாய்ப்பு. இதில் நாம் எந்த வாய்ப்பை எடுக்கிறேமோ அதைப் பொறுத்து நம்முடைய வாழ்க்கை அமையும்” என்றார்.

எழுத்தின் வலிமை

“திரைப்படங்களில் தலித் மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்பது குறித்து தலித் செயற்பாட்டாளர் ஸ்டாலின் ராஜாங்கத்தின் மிக முக்கியமான திரை விமர்சனக் கட்டுரைகள், என்னுடைய திரைப்படங்களை வடிவமைப்பதற்கு மிகவும் உதவியாக இருந்தன. எழுத்துகள் நம்மை வடிவமைக்கும், நம்மை மாற்றும், நமக்குள் இருக்கும் சமமின்மையை அது மாற்றும். எழுத்தாளர்களுக்கு சமூகப் பொறுப்பு அவசியம். வாசித்தலும், எழுத்தும் இன்றைய காலகட்டத்தில் மிக மிக அவசியமானதாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் நாம் புதிது புதிதாகக் கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு இந்த மூன்று நாட்கள் பயிலரங்கம் மிகப் பயனுள்ளதாக இருக்கும்” என்று கூறினார்.

முதல் நாள் கருத்தரங்கில் ‘உளவியலைக் கட்டமைக்கும் உட்கூறுகள்’ என்ற தலைப்பின் கீழ் பாலினம் குறித்து வ.கீதாவும் சாதியைக் குறித்து கோ.ரகுபதியும், கடவுள்/மதத்தைக் குறித்து ச.தமிழ்ச்செல்வனும், வர்க்கம் பற்றி சி. லட்சுமணனும் உரையாற்றினார்கள்.

இந்தச் சமூகத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் பிறந்தவுடன் அடையாளப்படுத்தப்படுகிறது என்ன பாலினம் என்று. இது ஒரு குறியீடாகப் பார்க்கப்படுகிறது என்று பேசிய வ.கீதா, ஆண், பெண், திருநங்கை, திருநம்பிகள் குறித்தும் பல கருத்துகளைத் தெரிவித்தார்.

“கலை இலக்கியத்திலும் பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்று சித்திரிக்கப்பட்டுள்ளது. கற்பு, அழகு, தாய்மை ஆகியவையும் வரையறுக்கப்பட்டுள்ளன. பாலினத்தில் பாகுபாடு பார்க்கப்படும் இதே சமூகத்தில் சாதி அடிப்படையில் ஆண் உடலும் இழிவாகப் பார்க்கப்படுகிறது” என்று பெண் அடிமைத்தனத்தையும், சாதிய சமுதாயத்தையும் குறித்துத் தெளிவாக விவரித்தார் வ.கீதா. பேசிமுடித்தவுடன் அவருடனான உரையாடல் நடைபெற்றது.

சாதியின் வரலாறு

கோ.ரகுபதி, சாதி உருவானது எப்படி என்பதை விவரித்தார். பிரிட்டிஷ் காலத்தில் இருந்த சாதிகள் குறித்தும், அதற்குப் பின் உருவான சாதிகள் குறித்தும், தன்னுடைய ஆய்வுக் கட்டுரைகளையும் பற்றி விரிவாக விவரித்தார். ராஜராஜ சோழன் காலத்தில் சாதி ரீதியாக 96 உரிமைகள் வழங்கப்பட்டதாகத் தெரிவித்த கோ.ரகுபதி, கோயில் நுழைவுப் போராட்டம், சாதி மறுப்புத் திருமணம், தீண்டாமையை ஒழித்தல் குறித்தும் பேசினார்.

கடவுள் / மதம் குறித்துப் பேசினார் ச.தமிழ்ச்செல்வன். “விலங்குகளுக்குக் கடவுள் இல்லை. மனிதர்களுக்குத்தான் கடவுள். விலங்குகளைக்கூடக் கடவுளாக வணங்கும் பழக்கமும் நம் சமுதாயத்தில் இருந்து வருகிறது.

சிவன், பெருமாள், விஷ்ணு என்ற பெரிய கடவுள்கள் ஒருபுறம் இருக்க கிராமப்புற தெய்வங்கள் ஏராளமாக உள்ளன. இந்தக் கிராமப்புற தெய்வங்கள் குறித்து தெரிந்துகொள்ளத் தமிழகத்தில் உள்ள தென்மாவட்டங்களுக்கு 25 பேர் கொண்ட குழுவுடன் சென்றோம். நான்கு வருட இந்தப் பயணத்தில் கிட்டத்தட்ட 4,500 கிராமப்புற தெய்வங்களின் வரலாறுகளைப் பற்றி தெரிந்துகொண்டோம். இவற்றைத் தொகுத்து பத்து தெய்வங்களின் வரலாறுகளை மட்டும் ‘சாமியின் பிறப்பும் இறப்பும்’ என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை வெளியிட்டேன். மற்ற கதைகளையும் தொகுத்து வெளியிடவுள்ளேன். கிராமப்புற தெய்வங்கள் எப்படி உருவாகிறார்கள் என்பது முக்கியமான ஒன்று. தற்போது நடக்கும் ஆணவக் கொலையை போல அந்த காலத்தில் மக்களால் கொல்லப்பட்டவர்களை மக்களே தெய்வமாக வழிபடுகின்றனர். கொல்லப்படும் ஆதிக்கச் சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கோ, ஆண்களுக்கோதான் கோயில் உள்ளதே தவிர தலித்களுக்கு எங்குமே கோயில் இல்லை. மதுரை வீரன்போல எங்காவது ஓரிடத்தில் கொல்லப்பட்ட தலித்துகளுக்குக் கோயில் உள்ளது” என்று பேசினார்.

இது முடிந்ததும், என் கதைகள் என்ற தலைப்பில் ஆதவன் தீட்சண்யா, தன்னுடைய கதைகளை விவரித்தார். அப்போது நாற்காலிகளை வட்ட வடிவில் போட்டு, எல்லாரும் அமர்ந்து உற்சாகத்துடன் கதை கேட்க ஆரம்பித்தோம். தமிழகத்தில் உள்ள நடப்பு அரசியல் நிலவரம் பற்றி ஒரு பாலைவன தேசத்தில் நடந்தது போன்று அருமையாகச் சொன்னார். நம் நாட்டில்தான் கருத்து சொல்லுவதற்குச் சுதந்திரம் இல்லையே. பாலைவன தேசத்தில் என்றால், அங்கு யார் வேண்டுமானாலும் நம் கருத்தைப் பதிவு செய்யலாம் என்று அவர் கூறும்போது, அரங்கம் முழுவதும் சிரிப்பலைகள்.

இரவு உணவு முடிந்ததும், ரூபகம் தெருக்கூத்து நாடகம் நடைபெற்றது. மதுரை வீரனின் கதையை அருமையாக நடித்தனர் நாடக் குழுவினர்.

இப்பல்லாம் யாரு சாதி பாக்குறா?

இரண்டாவது நாள் அமர்வில் ‘கலை இலக்கியத்தில் சாதி’ என்ற தலைப்பில் பேசினார் எழுத்தாளர் பாமா. 1992இல் இவர் எழுதிய கருக்கு என்னும் புதினம் புகழ்பெற்றது.

“இந்த நவீன உலகில், அறிவியல் வளர்ச்சி காலத்தில் சாதி பற்றி பேசுவது அசிங்கம் என்றும் இப்பலாம் யாரு சாதி பாக்குறா என்றும் கூறப்படுகிறது. பிறப்பு ரீதியிலும் சமூக ரீதியிலும் அந்தஸ்து பெற்றவர்களால்தான் அவ்வாறு பேச முடியும். தலித் மக்களால் அப்படிப் பேச முடியாது. ஏனென்றால் இன்றுவரை சாதியின் விஷத்தையும் கொடுமையும் அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் தலித்துகள்தான். அதனால்தான் சாதி ஒழிப்பிற்கான தேவையும் கடமையும் தலித்துகளிடம்தான் அதிகம் இருக்கிறது” என்று கூறினார் பாமா.

கலை இலக்கியத்தில் எவ்வாறு சாதி பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பது குறித்து மிக விளக்கமாகப் பேசிய பாமா, “இந்தச் சமூகத்தில் இருக்கும் இலக்கிய வகைமைகளை நாம் முதலில் கேலி செய்ய வேண்டும். இரண்டாவது அதை எதிர்க்க வேண்டும். இலக்கியத்தில் தலித்துகள் இழிவாகக் கூறப்பட்டுள்ளதைத் தோலுரித்துக் காட்ட வேண்டும். மூன்றாவதாக, புதிய படைப்புகளை நாம் படைக்க வேண்டும்” என்றார்.

ரத்தத்தின் வாடையில் எதைத் தேடினார்களோ?

‘தமிழகத்தில் கலையும் இலக்கியமும்’ என்ற தலைப்பில் பேசினார் ந.முருகேச பாண்டியன். ஐந்திணைகளைப் பற்றியும், சங்க இலக்கியத்தில் கூறப்பட்டுள்ள கருத்துகளையும் அவர் தெரிவித்தார்.

மதிய உணவு இடைவேளை அமர்வு முடிந்த பின்னர், மறுபடியும் வட்ட வடிவில் அமர்வு அமைக்கப்பட்டது. பயிலரங்குக்கு வந்தவர்கள் தங்களைப் பற்றியும் தங்களுடைய படைப்புகளைப் பற்றியும் பேசினார்கள். தமிழ் அமுதன், ‘நீங்கள் நிர்பயாக்கள் நாங்கள் நந்தினிகள்’ என்ற தலைப்பில் உணர்ச்சிகரமான கவிதையை வாசித்தார். அதைக் கேட்ட பலருக்குக் கண் கலங்கியது

உன் சதையில் வழிந்த இரத்தத்தில்

இரக்கத்தைப் படம்பிடிக்க வந்த ஊடகங்கள்

என் இரத்தத்தின் வாடையில்

எதைத் தேடினார்களோ?

கிடைக்காததைப் போலவே

மெளனமாய் கலைந்தார்கள்"

என்ற வரிகள் தீவிரமாகச் சிந்திக்க வைத்தன.

சாதி ஒழிப்பு சமத்துவ கருத்தியலைக் கலை இலக்கிய வடிவங்களாக்குதல் குறித்து சென்னை கலைக் குழுவின் பிரளயன் பேசினார். தொடர்ந்து, சென்னை கலைக் குழுவின் வீதி நாடகங்கள் நடைபெற்றன.

கல்வி நிலையங்களின் நிலை

அழகிய பெரியவன், ஏ.பி.ராஜசேகரன், யாழன் ஆதி, மதிவண்ணன் ஆகியோர் சாதி மறுப்பு, சாதி ஒழிப்பு ஆகியவற்றின் தேவைகள், சாத்தியங்கள் பற்றி விளக்கினார்கள். “தற்போது கல்வி நிலையங்கள் சாதி வளர்ப்புக் கூடங்களாக உருவாகின்றன” என்று தன் பேச்சின்போது அழகிய பெரியவன் குறிப்பிட்டார். இவர் சாதிகளின் வரலாறு குறித்து விரிவாகப் பேசினார்.

மதிவண்ணன் உட்சாதிப் பிரிவுகள் குறித்து விவரித்தார். சந்தையூர் தீண்டாமைச் சுவர் குறித்தும், சக்கிலி என்ற சாதியைப் பற்றியும் கூறினார். “ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பிக்கும் கட்டுரையாளர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்பத் தகவல்களை மறைந்து ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடுகின்றனர். இதைப் படிக்கும் மாணவர்கள் எப்படித் தெளிவான சிந்தனையுடன், உண்மைத் தன்மையுடன் தங்களுடைய ஆய்வைச் சமர்ப்பிப்பார்கள்” என்று கேள்வி எழுப்பினார் மதிவண்ணன்.

மதிய உணவு இடைவேளை அமர்வுக்குப் பின் ‘பொதுப்புத்தியை உதிர்த்தல்’ என்ற தலைப்பின் கீழ் அ.மார்க்ஸ் பேசினார். அவரைத் தொடர்ந்து, சாதி ஒழிப்பு சமத்துவக் கருத்தியலைக் கலை இலக்கிய வடிவங்களாக்குதல் என்ற தலைப்பில் நட்ராஜ், சுகிர்தராணி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

நீலம் என்றொரு இதழையும் நீலம் பதிப்பகத்தையும் தொடங்க வேண்டும் என்ற வேண்டுகோள் இரஞ்சித்திடம் வைக்கப்பட்டது. சாதியை ஒழிக்க நாம் கலை வடிவத்தில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்தும், கவிதைகளை எப்படி எழுதுவது என்பது குறித்தும் சுகிர்தராணி விவரித்தார். தான் எழுதிய கவிதைகளை அரங்கில் வாசித்தார். மலம் அள்ளும் தொழிலாளர்கள் பற்றிய ஒரு கவிதை என்னை மிகவும் பாதித்தது.

தலையில் கனத்த கூடையுடன்

அவள் கடந்து போகையில்

தன்னுடைய முகத்தில் வழியும்

மஞ்சள் நீரைப் புறங்கையால் வழித்தபடி,

என்னை வெகு இயல்பாய் கடந்துபோகிறாள்...

அவளுக்காக என்னால் முடிந்தது

ஒரு வேளை மலம் கழிக்காமல் இருப்பது

என்னும் வரிகள் கேட்பவரின் மனங்களை உலுக்கின.

“சாதி என்பது இந்துக்கள் ஒருவரோடு ஒருவர் கலந்துவிடாமல் தடுக்கின்ற ஒரு செங்கல் சுவரோ, முள் வேலியோ அல்ல. அது ஒருமனநிலை. அது ஒரு கண்ணோட்டம். இந்தக் கண்ணோட்டத்தை புரட்சியாளர் அம்பேத்கரின் பார்வையிலிருந்து பார்க்க வேண்டும்” என்று கூறினார் சுகிர்தராணி.

நிறைவுரை ஆற்றிய இரஞ்சித், “எழுத்தாளர்களுக்கு சமூகப் பொறுப்பு அவசியம். வாசித்தலும், எழுத்தும் இன்றைய காலகட்டத்தில் மிக மிக அவசியமானதாக இருக்கிறது. புத்தகங்கள் மட்டுமே நம்மைக் கேள்விகள் கேட்டுக்கொண்டே இருக்கும். இந்தச் சமூகத்தில் இருக்கும் பாகுபாடுகள், அரசியல், வாழ்வியல் வரலாறுகளைப் புத்தகங்களே நம்மை கேள்வியெழுப்ப வைக்கும். இந்த மூன்று நாட்கள் நிகழ்வு இளம் எழுத்தாளர்களுக்குப் பெரும் பயனுள்ளதாக இருந்தது. நான் இந்த நிகழ்ச்சிக்கு ஒரு மாணவனாகத்தான் கலந்துகொண்டேன். நானும் நிறைய புதிய கருத்துகளைக் கற்றுக்கொண்டேன். பங்கேற்பாளர்கள் ஒத்துழைப்பு அளித்தால் இந்தக் கலை இலக்கிய களத்தில் தொடர்ந்து இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்துவோம்” என்று கூறினார். நீலம் பதிப்பகம் விரைவில் தொடங்கப்படும் என்றும் அதில் கன்னியப்பன் என்ற பங்கேற்பாளரின் புத்தகம் முதலில் வெளியிடப்படும் என்றும் அறிவித்தார்.

முதல் நாள் அமர்வுக்கும் மூன்றாம் நாள் அமர்வுக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் இருந்தன. அந்த வேறுபாடு பங்கேற்பாளர்களின் சிந்தனைத் தெளிவுதான். அதற்குக் காரணம் பயிலரங்கின் உரைகளும் உரையாடல்களும்தான். இந்தப் பயிலரங்கில் பார்வையாளர்கள் என்று யாரும் இல்லை, அனைவருமே பங்கேற்பாளர்கள்தான் என்னும் வகையில் நடத்தப்பட்டது. அங்கு வந்த அனைவரும் அப்படியே உணர்ந்தார்கள்.

சாதியக் கட்டமைப்பு, சாதியத்துக்கெதிரான போராட்டம் முதலான பல்வேறு விஷயங்கள் குறித்த ஆழமான சிந்தனைகளை விதைத்தது இந்தப் பயிலரங்கம். வெறும் கோஷங்களுடன் நின்றுவிடாமல் விழிப்புணர்வையும் விசாலமான அறிவையும் ஏற்படுத்தும் நோக்குடன் நடத்தப்பட்ட இந்தப் பயிலரங்கம் சமூக மாற்றத்துக்கான வழிமுறையாக அறிவுப் புரட்சியை முன்வைத்தது என்று சொன்னால் அதில் மிகை இருக்காது.

திங்கள், 5 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon