மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 15 ஆக 2020

இடைத் தேர்தல்: அதிமுகவில் கூடுதல் பொறுப்பாளர்கள்!

இடைத் தேர்தல்: அதிமுகவில்  கூடுதல் பொறுப்பாளர்கள்!

அதிமுக தலைமைக் கழகம் சார்பில் 20 தொகுதி இடைத் தேர்தலுக்கான பொறுப்பாளர்கள் பட்டியல் அக்டோபர் 29ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

இந்தப் பொறுப்பாளர்கள் பட்டியல் பல்வேறு வகைகளில் சலசலப்பைக் கிளப்பியுள்ளது என்றும், முக்கியமான சீனியர் தலைமைக் கழக நிர்வாகிகள் இந்தப் பட்டியலில் புறக்கணிக்கப்பட்டதாக அதிமுகவுக்குள் கோபக் குரல்கள் வெடிப்பதாகவும் நமக்குத் தகவல்கள் வந்தன. அதையடுத்து, மின்னம்பலம் இதழில் அக்டோபர் 30ஆம் தேதியன்று பொறுப்பாளர்கள் பட்டியல்: அதிமுக தலைமைக் கழகத்தில் சலசலப்பு! என்ற தலைப்பில் செய்தியாக வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில் விடுபட்டிருந்த தலைமைக் கழக நிர்வாகிகளைச் சேர்த்து, நேற்று (நவம்பர் 4) கூடுதல் பொறுப்பாளர்களை அறிவித்துள்ளனர் ஓ.பன்னீரும், எடப்பாடி பழனிசாமியும்.முதலில் வெளியிடப்பட்ட பொறுப்பாளர் பட்டியலில் அனைத்துலக எம்ஜிஆர் மன்றச் செயலாளர் தமிழ் மகன் உசேன், மீனவரணிச் செயலாளர் நீலாங்கரை முனுசாமி, அமைப்பு சாரா தொழிலாளர் அணி செயலாளர் கமலக்கண்ணன், முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் உள்ளிட்ட பலரது பெயர் இல்லை என்பதும் தலைமைக் கழகத்தினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

அதிலும் அதிமுகவின் மீனவர் பிரிவுச் செயலாளரான நீலாங்கரை முனுசாமி மீனவர்கள் நிறைந்த திருப்போரூர் சட்டமன்றத் தொகுதிக்குப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டால், மீனவர்கள் வாக்குகளைப் பெறுவது இன்னும் எளிதாகும் என்று தலைமைக் கழகத்தில். நவம்பர் 3ஆம் தேதி நடந்த பொறுப்பாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், ஏற்கனவே நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் சில மாற்றங்களையும், கூடுதல் பொறுப்பாளர்களையும் சேர்த்து அறிவிப்பை நேற்று (நவம்பர் 4) வெளியிட்டனர்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில்,

“விரைவில் நடைபெற உள்ள 20 தொகுதி இடைத் தேர்தல்களில் அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக அரவக்குறிச்சி தொகுதி தமிழ்மகன் உசேன் (அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர்), திருவாரூர் தொகுதி - ஜீவானந்தம் (முன்னாள் அமைச்சர்), ஆசைமணி (முன்னாள் எம்.எல்.ஏ), பாப்பிரெட்டிபட்டி - செ.ம.வேலுசாமி (கொள்கை பரப்பு துணைச் செயலாளர்), ப.மோகன் (அமைப்பு செயலாளர்), திருப்போரூர் - நீலாங்கரை முனுசாமி (மீனவர் பிரிவு செயலாளர்), கமலக்கண்ணன் (அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர்) ஆகியோர் கூடுதல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும், “மானாமதுரை தொகுதி தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா தொகுதி மாற்றப்பட்டு பெரம்பூர் தொகுதி தேர்தல் பணிக்குழு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஒட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் பொறுப்பாளரான செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜு விளாத்திகுளம் தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். விளாத்திகுளம் தொகுதி தேர்தல் பொறுப்பாளரான முன்னாள் அமைச்சர் எஸ். பி.சண்முகநாதன் ஒட்டப்பிடாரம் தொகுதிக்குப் பொறுப்பாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்” எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முதலில் வெளியிடப்பட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் விடுபட்ட மூத்த தலைமைக் கழக நிர்வாகிகள் தமிழ்மகன் உசேன், நீலாங்கரை முனுசாமி, கமலக்கண்ணன் ஆகியோர் பற்றி மின்னம்பலம் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து அம்மூவருக்கும் கூடுதல் பொறுப்பாளர்கள் பட்டியலில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- ஆரா

ஞாயிறு, 4 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon