மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 டிச 2019

பிரமாண்டத்தையே பின்னுக்குத் தள்ளிய ‘ஜீரோ’!

பிரமாண்டத்தையே பின்னுக்குத் தள்ளிய ‘ஜீரோ’!

இந்திய சினிமாவில் 600 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டுள்ள முதல் பிரமாண்டமான படைப்பு எனச் சொல்லப்பட்டுவரும் 2.O படம் எதிர்பார்ப்புகளை ஈடு செய்யும் அளவில் இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

300 கோடி ரூபாய் பட்ஜெட் என்று சொல்லி ஆரம்பிக்கப்பட்ட இந்தப் படம் தற்போது 600 கோடி ரூபாய் செலவாகியுள்ளது என ரஜினிகாந்த் மூலம் சொல்ல வைத்திருக்கிறார்கள். இவ்வளவு செலவு செய்து எடுக்கப்பட்ட படத்தின் டீசர், ட்ரெய்லர் சாதனையைப் படைக்காமலிருப்பது ரஜினிகாந்த் ரசிகர்களிடம் மட்டுமல்ல, படக்குழுவினரிடமும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகுபலி 2 படத்தின் ட்ரெய்லர் ஏற்படுத்திய சாதனையைக்கூட 2.O ட்ரெய்லர் ஏற்படுத்தவில்லை. மேலும், அதைவிட செலவு குறைவில் எடுக்கப்பட்ட படங்கள் டீசர், ட்ரெய்லரில் பெரிய சாதனைகளை ஏற்படுத்தி வருவதையும் பார்க்கிறோம்.

தமிழில் சர்கார் டீசர் ஏற்படுத்திய சாதனையை 2.O பட டீசர், ட்ரெய்லரால் முறியடிக்க முடியவில்லை. 2.O ட்ரெய்லர் வெளியான 24 மணி நேரத்தில் தமிழில் 77 லட்சம் பார்வைகளையும், தெலுங்கில் 35 லட்சம் பார்வைகளையும், இந்தியில் 1 கோடி பார்வைகளையும் பெற்றுள்ளது.

இதற்குக் காரணம் 2.O ட்ரெய்லருக்குப் போட்டியாக ஷா ருக் கான் நடித்துள்ள ஜீரோ ட்ரெய்லர் அமைந்துவிட்டது. அந்த ட்ரெய்லர் 24 மணி நேரத்தில் 6 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

டிரென்டிங்கிலும் ஜீரோ படத்துக்கு அடுத்து இரண்டாவது இடத்தில்தான் 2.O உள்ளது. இந்தி ஹீரோவான அக்‌ஷய் குமார் நடித்திருந்தும், இந்தியாவின் சூப்பர் ஸ்டார், ஆசியக் கண்டத்தில் அதிக சம்பளம் வாங்குபவர் என குறிப்பிடப்படும் ரஜினிகாந்த் நடித்திருந்தும் ஷா ருக் கான் படத்துக்குப் பிறகே அவரது படம் உள்ளது. ட்ரெய்லருக்கு இவ்வளவுதான் வரவேற்பு என்றால் படத்துக்கு எப்படிப்பட்ட வரவேற்பு இருக்கும் எனப் படக்குழு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.

ஞாயிறு, 4 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon