மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 26 செப் 2020

இந்தியாவுடன் சமாதானம்: பாகிஸ்தானுக்கு சீனா பாராட்டு!

இந்தியாவுடன் சமாதானம்: பாகிஸ்தானுக்கு சீனா பாராட்டு!

இந்தியாவுடன் பேச்சுவார்த்தை மூலம் சமாதானம் ஏற்படுத்த வேண்டும் என்ற பாகிஸ்தானின் வேட்கைக்கு ஆதரவளிப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக கடந்த நவம்பர் 1ஆம் தேதி சீனாவுக்குச் சென்றுள்ளார். இரு நாடுகளுக்கு இடையே 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இரு நாடுகளும் வனம், பூமி அறிவியல், விவசாயம், தொழில் உள்ளிட்ட துறைகளில் இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டுள்ளன.

சீன அதிபர் ஜி ஜின்பிங்கையும் இம்ரான் கான் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இது தொடர்பாக இரு நாடுகளும் இணைந்து கூட்டறிக்கையை நேற்று (நவம்பர் 4) வெளியிட்டுள்ளன. அதில், அமைதியான, உறுதியான, கூட்டுறவு மற்றும் வளமான தெற்காசியாவே அனைவரின் விருப்பமாக உள்ளது. பிராந்திய ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கும், நீடித்த அமைதி, ஸ்திரத்தன்மை ஆகியவற்றின் குறிக்கோள்களில் முன்னேறுவதற்குமான பேச்சுவார்த்தையின் முக்கியத்துவம் குறித்து இரு தரப்பும் வலியுறுத்தியுள்ளன.

பேச்சுவார்த்தை மூலம் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்ற பாகிஸ்தானின் வேட்கைக்குப் பாராட்டு தெரிவிப்பதாக சீனா கூறியுள்ளது. இந்தியாவுடனான உறவை மேம்படுத்த மற்றும் நிலுவையுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண பாகிஸ்தான் எடுத்துவரும் முயற்சிகளுக்கு சீனா ஆதரவு தெரிவித்துள்ளது.

ஆப்கான் விவகாரத்தில் ஒத்துழைப்பைப் பலப்படுத்த இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன.

இதேபோல், சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உறுப்பினரானதற்காக பாகிஸ்தானுக்கு பாராட்டும் தெரிவித்துள்ளது. சீனாவின் பெல்ட் மற்றும் சாலை திட்டத்தில் சீனா - பாகிஸ்தான் பொருளாதார பாதை முக்கிய பங்காற்றும் என்று பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஞாயிறு, 4 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon