மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 3 ஜூலை 2020

மீன்வளத் துறைக்கு கூடுதல் மானியம்!

மீன்வளத் துறைக்கு கூடுதல் மானியம்!

கடந்த ஆண்டில் மீன்வளத் துறைக்கான மானியம் 23 விழுக்காடு அளவுக்கு அதிகரித்துள்ளது. இது சர்வதேச விதிகளை மீறுவதாக இருப்பதாக சர்வதேச வர்த்தக சங்கம் கூறியுள்ளது.

2017-18ஆம் நிதியாண்டில் தமிழ்நாடு, குஜராத் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் மீன் உற்பத்தித் துறைக்கு கூடுதலான அளவில் செலவளித்துள்ளன. டீசலுக்கான விற்பனை வரி தள்ளுபடி, மீன்பிடித் தடைக்காலத்தில் கூடுதல் நிதி உதவிகள் போன்ற சலுகைகளை இம்மாநிலங்கள் வழங்கியிருப்பதாக சர்வதேச வர்த்தக சங்கம் (டபள்யூ.டி.ஓ.) தெரிவித்துள்ளது.

சர்வதேச வர்த்தக சங்கம் இதுகுறித்து மேலும் கூறுகையில், ‘புதிய வலைகள் மற்றும் மீன்பிடி படகுகள் வாங்கவும், பாதுகாப்பு ஜேக்கெட்டுகள் வாங்கவும், நேவிகேசன் வசதிகளை மேம்படுத்தவும், உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தவும் இந்த மாநிலங்கள் அதிகளவில் செலவழித்துள்ளன. சர்வதேச விதிகளை மீறி அளவுக்கு அதிகமான மானியத்தை இந்தியா வழங்கியுள்ளது’ என்று கூறியுள்ளது.

ஒட்டுமொத்தமாக 2017-18ஆம் நிதியாண்டில் இந்தியா 750 கோடி ரூபாயை மீன்வளத் துறைக்கு மானியமாக வழங்கியுள்ளது. இதில் கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் 227.06 மில்லியன் ரூபாயை மானியமாக வழங்கியுள்ளது. இந்தத் தகவலை சர்வதேச வர்த்தக சங்கத்துக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் இந்தியா தெரிவித்துள்ளது. 2016-17ஆம் நிதியாண்டில் ரூ.605 கோடி மட்டுமே செலவாகியிருந்த நிலையில், 2017-18ஆம் ஆண்டில் 23 விழுக்காடு அதிகரித்துள்ளது.

மாநிலங்களின் வாரியாகப் பார்த்தால் 2017-18ஆம் நிதியாண்டில் தமிழ்நாட்டில் ரூ.228.5 கோடியும், ஆந்திராவில் ரூ.54.62 கோடியும், கோவாவில் ரூ.10.85 கோடியும், குஜராத்தில் ரூ.211.42 கோடியும், கர்நாடகாவில் ரூ.148.57 கோடியும், கேரளாவில் ரூ.18.7 கோடியும், மகாராஷ்டிராவில் ரூ.29.97 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. அந்தமான் & நிக்கோபர் தீவுகளில் ரூ.9.93 மில்லியனும், டாமன் & டையூ ரூ.29.65 கோடியும், லட்சத்தீவுகளில் ரூ.12.5 மில்லியனும் செலவிடப்பட்டுள்ளது.

திங்கள், 5 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon