மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 நவ 2018

காந்தி - 150: காந்தி பயன்நிலை அழிந்துவிட்டதா?

காந்தி - 150: காந்தி பயன்நிலை அழிந்துவிட்டதா?

விவேக் கணநாதன்

காந்தியின் 150ஆவது ஆண்டை ஒட்டி, காந்தியைப் பற்றிய மாற்றுப் பார்வைகளை மீளாய்வு செய்யும் குறுந்தொடர் - பகுதி 4

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உருவாகிய புதிய காலனியம் அடுத்த 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் கடுமையான விளைவுகளையும், விவாதங்களையும் ஏற்படுத்தியது. இந்தியாவில் நேரு, புள்ளியியல் அறிஞர் மகலோனபிலஸ் போன்றோரின் சிந்தனையால் கலப்புப் பொருளாதாரம் நடைமுறைக்கு வந்திருந்தது.

புதிய காலனியத்தின் நீட்சியாக உருவாகிய உலகமயம் 1950களிலிருந்தே பரவத் தொடங்கியது. உலகமயமாக்கல் புத்தகத்தில் மான்ஃபிரட் பி.ஸ்டெகர், இரண்டாம் உலகப் போரின் இறுதியில் இங்கிலாந்தில் பிரட்ஸ்வுட் நகரில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் உருவாக்கப்பட்ட புதிய சர்வதேச பொருளாதார ஒழுங்கமைப்பில்தான் இன்றைய உலகமயமாக்கல் தொடங்குகிறது என்கிறார்.

காந்தியச் சிந்தனையின் புத்துருவாக்கம்

இந்தியாவில் நேருவின் கொள்கைகளை காந்திய நோக்கில் விமர்சித்து காந்திய பொருளாதாரக் கோட்பாட்டாளர் ஜே.சி.குமரப்பா ஆய்வறிக்கைகளும் விமர்சனக் கட்டுரைகளும் எழுதிவந்தார். இந்தியாவின் நடைமுறைப் பயன்பாட்டிலிருந்து காந்தி துண்டிப்பு தீவிரமடைந்திருந்த சூழலில், உலக அரங்கில் காந்தி சிந்தனை மீண்டும் முக்கியத்துவம் பெற்றுக்கொண்டிருந்தது.

ஜே.சி.குமரப்பா 1948ல் 84 நாடுகள் பங்கேற்ற உலக சமாதான மன்றத்தில் உரையாற்றினார். தொடர்ந்து பாரிஸ், ஜெர்மனி, ஸ்டாக்ஹோம் என உலகின் முக்கியமான பொருளாதார நாடுகளில் குமரப்பா பயணம் செய்து காந்திய சர்வதோயம் குறித்து உரையாற்றி வந்தார்.

1960களின் மத்தியில் இந்தியாவில் காந்தி அடையாள முகமூடியால் இந்துத்துவம் வளர்ந்தது. இந்தியா காந்தியைச் சிதைத்துக்கொண்டிருந்தபோது, உலக அரங்கில் காந்தியச் சிந்தனைகளிலிருந்து நிலைத்து நிற்கக்கூடிய பொருளாதாரம் (Sustainable economics), சூழலியல் பொருளாதாரம் போன்றவை தீவிரமடைந்து கொண்டிருந்தன. தொடர் விவாதத்தின் வடிவமாக வெளியான இ.எப்.ஷுமாஸரின் சிறியதே அழகு புத்தகம் வெளியாகி அடுத்த சில ஆண்டுகளில் பெரும் கவன ஈர்ப்பைப் பெற்றது. மனிதனின் சூழலியலுடன் கூடிய மெட்டா எக்கனாமிக்ஸ், புத்த மதம் சார்ந்த பொருளாதாரம் என மாற்றுப் பொருளாதாரம் குறித்த சிந்தனைகளைத் திறந்தது.

சிறியதே அழகு நூலில் ஷுமாஸர் கணித்த முக்கியமான விஷயங்கள் அடுத்த சில ஆண்டுகளில் கண்கூடாக நடந்தன. எரிபொருள் தேவைக்கான யுத்தம், ஆற்றல் மூலங்கள் கொண்ட நாடுகளை அழிக்கத் துவங்கியதை உலகம் கண்டது.

உலகை விழுங்கிய உலகமயமாக்கல்

ஆனால், நடைமுறையில் தவிர்க்க முடியாத கைக்கொள்ளலாக மாறிய உலகமயமாக்கல் 1970களில் தொடங்கி, 80களில் விரிவடைந்து, 90களில் உலகம் முழுவதும் நிலைபெற்றது.

உலகமயமாக்கலின் எதிர்ப்புகூட, உலகமயமாக்கலுக்குள் உட்பட்ட, உலகமயமாக்கல் வடிவத்திலேயே இன்று நடக்கிறது. 2001ஆம் ஆண்டு அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலின் போது, வீடியோ வெளியிட்ட ஒசாமா பின்லேடனின் கையில் டைமெக்ஸ் கடிகாரம் இருந்ததைப் பற்றி அமெரிக்க பத்திரிகைகள் தீவிரமாக எழுதின. உலகின் அதிநவீனத் தொழில்நுட்பங்களை உலகமயத்தின் வழியாகவே பெற்றுக்கொண்டு, உலகமயமாக்கலை எதிர்ப்பதாக ஒசாமா சொல்கிறார் என அமெரிக்கப் பத்திரிகைகள் எழுதின. நவீனத்தன்மையை எதிர்க்கும் இம்மாதிரி குரல்கள்கூட, உலகமயமாக்கலின் செயல்பாடுகளிலிருந்து விடுவித்துக்கொள்ள முடியாது என அமெரிக்கா முழங்கியது.

ஒசாமாவின் கையிலிருந்த கடிகாரத்தைப் புரிந்துகொண்டால், இன்றைக்கு காந்தி விரும்பிய, ஜே.சி.குமரப்பா வடிவமைத்த முழு மனிதன் எல்லையிலா தூரத்துக் கனவாகியிருக்கிறது.

ஆன்மிகம் என்பது மனிதனுக்கு மிக நிச்சயமான தேவை என்பதே காந்தியின் முடிவாக இருந்தது. உலகமயமாக்கலும் மனிதனுக்கு ஆன்மிகத்தை வழங்குகிறது. இன்றைக்கு உலகம் முழுவதும் பல்லாயிரம் கோடி வணிகமாக ஆன்மிகச் சுற்றுலாக்கள் மாறியிருக்கின்றன. குறிப்பாக இந்தியாவில் தாராளமயமாக்கமும் உலகமயமாக்கலும் வெகுஜன இந்துத்துவத்தை வளர்த்திருக்கிறது. வெகுஜன இந்துத்துவ நெருக்கடியால், தன்முனைப்பாலும், வணிக நோக்கத்தாலும் சிறுபான்மை மதங்களுக்குள் அடிப்படைவாதத்தை நிலைநிறுத்தும் முயற்சிகளை நாம் பார்க்கிறோம். ஆன்மிகத் தீவிரவாதம் உலகின் மாபெரும் சவாலாகியிருக்கிறது.

காந்தியைக் கைக்கொள்வது எப்படி?

காந்தி பேசிய ராம ராஜ்ஜியம், காந்தி கடைப்பிடித்த சனாதனம், காந்தி புரிந்துகொண்ட இந்து மதம், காந்தி வலியுறுத்திய சமதர்மம், காந்தி எதிர்த்த சாதியம், காந்தி விரும்பிய மத நல்லிணக்கம், காந்தி வலியுறுத்திய மொழிவழிக் கல்வி, மொழி தேசிய அடையாளம் எல்லாமே இன்றைக்குத் திரிக்கப்பட்டுள்ளன. இந்துத்துவச் செரிமானத்தால் காந்தியம் வெகுஜன தளத்தில் சிக்கலுக்குள்ளாகியிருக்கிறது. காமம், ஒழுக்கம், உடல் பராமரிப்பு, உணவுக் கட்டுப்பாடு, நவீன மருத்துவ நிராகரிப்பு, அதிமெய்யியல் அறத்தால் உருவகிக்கப்பட்ட மனிதனின் தேவை எல்லாமே சிதைந்திருக்கின்றன. எனில், காந்தியின் பயன்நிலை அழிந்துவிட்டதா? காந்தியை எப்படிக் கைக்கொள்வது?

நவகாந்தியக் கோட்பாட்டாளர் மகரந்த் பரஞ்சபேவின் கூற்று இதற்கான விடையை அளிக்கிறது. “காந்தி நம்மை விட்டு மறைந்துவிட்டார். இப்போது அவரும் நம் மரபின் ஒரு பகுதியாகிவிட்டார். நாமும் அவரை அப்படித்தான் அணுக வேண்டும். அவருடைய சிந்தனைகளுடன் தீவிரமாக உரையாடி, அதை மறுஆக்கம் செய்து நம் காலத்து வாழ்க்கை முறைக்கு ஏற்ப அதன் பொருளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவையே இப்போதைக்கு அவசர தேவை. காந்தியை வரிக்கு வரி வாசிப்பதும், அப்படியே போலி செய்வதும் அல்ல. காந்தியைப் போல் ஆக வேண்டும் என்றால், நம் செயல்களுக்கு நாமே பொறுப்பேற்க வேண்டும். உண்மையில் நமக்கு மட்டுமல்ல, நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும், நம் ஒட்டுமொத்த உலகுக்காகவும் நாம் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். நாம் இன்னும் அதிக நம்பிக்கை கொண்டவர்களாக, அதிக தற்சார்பு கொண்டவர்களாக இருக்க வேண்டும்” என்கிறார் மகரந்த் பரஞ்சபே.

நடைமுறையில் பயன்படுத்தாமல் காந்தியின் படைப்புகள் மற்றும் அவருடைய வாழ்வு குறித்து விற்பன்னராக இருந்து என்ன பயன் என்று கேள்வி எழுப்புகிறார் பரஞ்சபே. இக்கேள்வியே காந்தி தன்னுடைமை முயற்சிகளை, காந்தி வெறுப்பை, காந்தி நிராகரிப்பை முறித்துவிட்டு காந்தி மறுஆக்கம் நோக்கி நகர்வதற்கான தொடக்கம். எப்போதும், எங்கெங்கும் பரவிக் கிடக்கும் காந்தி வைஃபையை, 5ஜி தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் வழி.

*

கட்டுரையாளர் விவேக் கணநாதனைத் தொடர்புகொள்ள: [email protected], ஃபேஸ்புக், ட்விட்டர்

பகுதி 1

பகுதி 2

பகுதி 3

சென்னை - வேலூர் இடையே முன்பதிவில்லாத ரயில்!

3 நிமிட வாசிப்பு

சென்னை - வேலூர் இடையே முன்பதிவில்லாத ரயில்!

ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது: சென்னை மாநகராட்சி!

4 நிமிட வாசிப்பு

ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது: சென்னை மாநகராட்சி!

கோவிட் காலத்தில் 81% அதிகரித்த தங்க நகைக்கடன்!

6 நிமிட வாசிப்பு

கோவிட் காலத்தில் 81% அதிகரித்த தங்க நகைக்கடன்!

திங்கள் 5 நவ 2018