மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 18 ஜன 2020

சர்கார்: சரிந்ததா 'சாதனை பேனர்'?

சர்கார்: சரிந்ததா 'சாதனை பேனர்'?

சர்காருக்காக கேரளாவில் வைக்கப்பட்டிருந்த 175 அடி 'சாதனை பேனர்' குறித்த புதிய விவரம் தற்போது வெளிவந்துள்ளது.

தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் விஜய்யின் சர்கார் திரைப்படத்தை முன்னிட்டு விஜய்யின் சர்கார் பட தோற்றம் தாங்கிய 175 அடி உயர பேனர் ஒன்று கேரளாவில் கொல்லம் நண்பன்ஸ் ஃபேன்ஸ் கிளப் சார்பாக சில தினங்களுக்கு முன்னர் வைக்கப்பட்டது. இதுவே இந்திய நடிகர் ஒருவருக்கு வைக்கப்படும் உயரமான பேனர் எனவும் கூறப்பட்டது.

பிரம்மாண்ட உயரத்தில் நிற்கும் விஜய் பேனரைப் பார்க்க அந்த பகுதியில் தொடர்ச்சியாகக் கூட்டம் கூடியது. தொடர் மக்கள் வருகையால் கடந்த சில நாட்களாக மினி டூரிஸ்ட் ஸ்பாட்டாகவே அந்த ஏரியா மாறிப்போனது. தமிழகத்தில் இருந்தும்கூட பலர் அங்கு சென்று அதைப் பார்த்துவந்தனர்.

இந்நிலையில் அந்த பிரம்மாண்ட பேனர் தற்போது சரிந்து விழுந்துவிட்டதாகச் சமூக வலைதளங்களிலும் சில மீடியாக்களிலும் செய்திகள் பரவின. ஆனால் அவை உண்மையில்லை என உறுதி செய்யும் விதமாக அமைந்துள்ளது கொல்லம் நண்பன்ஸின் ட்விட்டர் பதிவு.

அதில் பேனர் விவகாரம் குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. அதன்படி, அந்த பேனர் தற்போது அங்கிருந்து அகற்றப்பட்டிருக்கிறது; ஆனால் சரிந்து விழவில்லை. மோசமான வானிலை சூழல் இருப்பதாலும் பாதுகாப்புக் காரணங்களுக்காகவும் பேனர் வைத்தவர்களாலேயே அது அகற்றப்பட்டுள்ளது. இந்த விளக்கத்தால் "பேனர் விழுந்து விட்டது" எனக் கூறி பேனர் அகற்றப்பட்ட போட்டோக்களை போட்டு சமூக வலைதளங்களில் கலாய்த்து வந்த சிலர் தற்போது கையறு நிலையில் உள்ளனர்.

பொதுவாக படங்களுக்கு வைக்கப்படும் பேனர்கள் அந்தத் திரைப்படம் வெளியான பின்னரே அகற்றப்படும். இவ்வளவு பிரம்மாண்டமாக வைக்கப்பட்ட இந்த பேனர் அவசர அவசரமாக அங்கிருந்து அகற்றப்பட்டிருப்பது ஒருவேளை அரசியல் வட்டார நெருக்கடியால்கூட இருக்குமோ என்கிற கோணத்திலும் சிலர் விவாதிக்க ஆரம்பித்துள்ளனர்.

திங்கள், 5 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon