மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 10 ஜூலை 2020

குரூப் 2 தேர்வு: நவ.11இல் நடைபெறும்!

குரூப் 2 தேர்வு: நவ.11இல் நடைபெறும்!

குரூப் 2 தேர்வு வினாத்தாள் கண்டிப்பாக தமிழ் மொழியில் இருக்கும் என்றும் திட்டமிட்டபடி வரும் 11ஆம் தேதி தேர்வு நடைபெறும் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள உதவிப் பிரிவு அலுவலர், கூட்டுறவுச் சங்கங்களின் ஆய்வாளர் உள்ளிட்ட 23 வகையான பணிகளில் காலியாக உள்ள 1,199 இடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 தேர்வு வரும் 11ஆம் தேதி நடைபெறவுள்ளது.

குரூப் 2 பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் சிலவற்றை நடப்பாண்டில் தமிழில் நடத்த முடியாது என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்ததாகக் கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தி வெளியானது. இந்நிலையில் குரூப் 2 தேர்வுகளுக்கான வினாத்தாள் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் இருக்கும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்திருந்தது. தொழில்நுட்ப தேர்வுகளுக்கும் தமிழ், ஆங்கிலம் மொழிகளில் வினாத்தாள் தயாரிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது டிஎன்பிஎஸ்சி.

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஆங்கில மொழியை மட்டுமே பயிற்று மொழியாகக் கொண்ட சில பாடங்களுக்கு மட்டுமே ஆங்கிலத்தில் வினாத்தாள்கள் தயாரிக்கப்படுவதாக கூறியுள்ள டிஎன்பிஎஸ்சி, பயிற்று மொழி தமிழில் இருந்தால் வினாத்தாள்களும் கண்டிப்பாக தமிழில் தயாரிக்கப்படுவது வழக்கம் என்று குறிப்பிட்டுள்ளது.

நவ.11ஆம் தேதியன்று நடைபெறவுள்ள குரூப் 2 தேர்வுக்கு முதனிலை தேர்வு தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் கேள்விகள் கேட்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

குரூப் 2 தேர்வு திட்டமிட்டபடி, நவம்பர் 11ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவித்துள்ள தேர்வாணையம், தேர்வர்கள் இதுகுறித்து வெளியாகும் ஆதாரமற்ற, தவறான செய்திகள் குறித்துக் கவலைப்படாமல் தேர்வுக்குத் தயாராகுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தமிழ் மொழியில் போட்டித் தேர்வுகளை நடத்த முடியவில்லை என்று கூறுவதற்கு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெட்கப்பட வேண்டும் என்றும் தமிழில் வினாத்தாள்களைத் தயாரிக்க முடியாவிட்டால் தேர்வாணையத்தையே மூடிவிடலாம் என்று நேற்று கண்டனம் தெரிவித்தார், பாமக நிறுவனர் ராமதாஸ். தமிழ்நாடு தேர்வாணைத்தில் தமிழில் தேர்வு நடத்தப்படாது என்ற அறிவிப்புக்கு இந்திய மாணவர் சங்கத்தினர் கண்டம் தெரிவித்துள்ளனர்.

திங்கள், 5 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon