மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 4 ஜூலை 2020

பாபநாசம்: ரஜினி நடிக்காதது ஏன்?

பாபநாசம்: ரஜினி நடிக்காதது ஏன்?

த்ரிஷ்யம் தமிழ் ரீமேக்கில் ரஜினிகாந்த் நடிக்காதது ஏன் என்பது பற்றி இயக்குநர் ஜீத்து ஜோசப் இப்போது விளக்கமளித்துள்ளார்.

மோகன்லால், மீனா, எஸ்தர் அனில், ஆஷா சரத், சித்திக் உட்படப் பலர் நடித்த மலையாளப் படம் த்ரிஷ்யம். ஜீத்து ஜோசப் இயக்கியிருந்த இந்தப் படம் அங்கு மெகா ஹிட் ஆனது. இதையடுத்து தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னட மொழிகளில் ரீமேக் ஆனது. இந்தி ரீமேக்கில் அஜய் தேவ்கானும், தெலுங்கில் வெங்கடேஷும், கன்னடத்தில் ரவிசந்திரனும் நடித்திருந்தார்கள். அந்த மொழிகளிலும் இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

இதன் தமிழ் ரீமேக்கில் கமல் ஹாசன், கவுதமி நடித்திருந்தனர். தமிழில் பாபநாசம் என்ற பெயரில் உருவான இந்தப்படத்தை மலையாளத்தில் இயக்கிய ஜீத்து ஜோசப்பே இயக்கியிருந்தார். இதன் தமிழ் ரீமேக்கில் நடிக்குமாறு முதலில் ரஜினியுடம் கேட்டதாக, ஜீத்து தெரிவித்திருந்தார். ரஜினிக்கு கதை பிடித்திருந்தாலும் சில காட்சிகளை தனது ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா? என்ற சந்தேகம் ஏற்பட்டதாகவும் அதனால்தான் அவர் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை என்றும் இதற்கு முன் சொல்லியிருந்தார் ஜீத்து.

இந்நிலையில் எதற்காக ரஜினி இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கை நிராகரித்தார் என்பதை ஜீத்து ஜோசப் சமீபத்தில், மனோரமா ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். “த்ரிஷ்யம் படத்தின் ஒரு காட்சியில் போலீஸ்காரர்கள், மோகன்லாலை அடிப்பார்கள். இந்தக் காட்சியை மலையாள ரசிகர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்களோ என்று பயந்தேன். ஆனால், அந்தக் காட்சியை, ரசிப்பார்கள் என்று மோகன்லாலும் வலியுறுத்திச் சொன்னார். அது போலவே நடந்தது. ஆனால், தமிழில் ரஜினி, அந்தக் காட்சியை தனது ரசிகர்கள் ஏற்க மாட்டார்கள் என்று நம்பினார். அதனால்தான் கதைப் பிடித்திருக்கிறது என்ற அவர், இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவில்லை” என்று கூறியுள்ளார் ஜீத்து ஜோசப்.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் 2007ஆம் ஆண்டு வெளியான சிவாஜி படத்தில் ரஜினி போலீஸ்காரர்களிடம் அடிவாங்குவது போன்ற காட்சி அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 5 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon