தீபாவளி பண்டிகைக்கு மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக சிறப்பு பேருந்துகளில் முன்பதிவு செய்ததன் மூலம் தமிழக போக்குவரத்து துறைக்கு ரூ. 6 கோடியே 84 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.
தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னை போன்ற பிற மாவட்டங்களிலிருக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு கடந்த 2ஆம் தேதி முதலே செல்ல ஆரம்பித்துவிட்டனர். மக்கள் தங்கள் ஊர்களுக்கு செல்வதற்கும், திரும்புவதற்கும் வசதியாக தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கடந்த 3 நாட்களில் சென்னையிலிருந்து 5 லட்சத்து 16 ஆயிரம் பேர் அரசு பேருந்துகள் மூலம் வெளியூர் சென்றுள்ளனர். கடந்த 3ஆம் தேதியிலிருந்து 5ஆம் தேதி வரை தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 807 பேர் முன்பதிவு செய்துள்ளனர். சென்னையிலிருந்து செல்வதற்காக 81,730 பேர் முன்பதிவு செய்துள்ளனர். 7ஆம் தேதியிலிருந்து வெளியூர்களிலிருந்து சென்னை வருவதற்காக 55,000 பேர் வரை முன்பதிவு செய்திருப்பதாக தமிழக போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக கட்டண புகார் தொடர்பாக 1431 ஆம்னி பேருந்துகளில் பரிசோதனை நடத்தப்பட்டு, 31 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டதாகவும், நான்கு ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் நேற்று(நவம்பர் 4) அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
கடந்தாண்டு முன்பதிவு மூலம் 9 கோடியே 66 லட்சம் வருவாய் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.