மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 3 ஜூலை 2020

சண்டையிடும் ஜோடி!

சண்டையிடும் ஜோடி!

நடிகர்களின் உறவினர்களோ, நண்பர்களோ திரையிலும் அதே கதாபாத்திரத்தில் வரும்போது நடிகர்களைப் போலவே பார்வையாளர்களும் அதை தொடர்புபடுத்திப் பார்ப்பதற்குச் சுவாரஸ்யமாக இருக்கும். அப்படியான இரு சம்பவங்கள் நாக சைதன்யாவுக்கு தற்போது நடைபெற்றுள்ளன.

திருமணத்திற்குப் பின் சமந்தா தொடர்ந்து பல படங்களில் நடித்துவந்தாலும் முதன்முறையாகத் தனது கணவர் நாக சைதன்யாவுடன் இணைந்து நடிக்கிறார். சிவா நிர்வானா இயக்கத்தில் உருவாகும் இந்த பெயரிடப்படாத படத்தில் தான் சமந்தாவுடன் இணைந்து நடிப்பது குறித்து நாக சைதன்யா டெக்கான் கிரானிக்கலுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார். “இருவரும் இணைந்து பணியாற்றுவதால் ஒரே நேரத்தில் வீட்டிற்கு செல்கிறோம். ஆனால் காலையில் எனக்கு முன்பாகவே சமந்தா சென்றுவிடுவார். அதிக நேரங்களை நாங்கள் படப்பிடிப்பு தளத்தில் செலவிடுகிறோம். இந்த படத்தில் நாங்கள் இருவரும் அதிகமாகச் சண்டை போட்டுக்கொள்வதாகக் காட்சிகள் உள்ளன. ஆனால் உண்மையில் நாங்கள் அப்படி இல்லை. இதனால் அந்த காட்சிகளில் நடிப்பது சற்று கடினமாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

நாகசைதன்யா ‘வெங்கி மாமா’ என்ற மற்றொரு படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். நடிகரும் நாகசைதன்யாவின் மாமாவுமான வெங்கடேஷ் இதில் நடிக்கிறார். தனிப்பட்ட வாழ்க்கையைப்போல இந்த படத்திலும் நாக சைதன்யாவும், வெங்கடேஷும் முதல்முறையாக மாமா, மருமகனாகவே நடிக்கவுள்ளனர். பாபி இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. பியூப்பிள் மீடியா ஃபேக்டரி, சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ், கோனா பிலிம் கார்ப்பரேஷன் இணைந்து பிரம்மாண்டமாக இந்த படத்தை தயாரிக்கின்றன.

நாகசைதன்யா நடிப்பில் கடந்த வெள்ளி (நவம்பர் 2) அன்று வெளியான ‘சாவ்யாசச்சி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுவருகிறது. சந்தூ மொன்டெட்டி இயக்கிய இந்த படத்தில் நிதி அகர்வால் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். மாதவன், பூமிகா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

திங்கள், 5 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon