மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 4 ஜூலை 2020

சபரிமலை சன்னிதானத்தில் பெண் போலீஸ்!

சபரிமலை சன்னிதானத்தில் பெண் போலீஸ்!

இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படவுள்ள நிலையில், சன்னிதானத்தில் பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின், இரண்டாவது முறையாக இன்று(நவம்பர் 5) சபரிமலை கோயில் நடை திறக்கப்படுகிறது. கடந்த மாதம் கோயில் நடை திறக்கப்பட்டபோது, பெண்கள் சபரிமலை கோயிலுக்குள் செல்ல முயற்சி செய்தனர். ஆனால், இந்துத்துவ அமைப்பு மற்றும் ஐயப்ப பக்தர்களின் தொடர் போராட்டத்தினாலும், எதிர்ப்பினாலும் பெண்களால் கோயிலுக்குள் செல்ல முடியவில்லை.

இந்நிலையில், சித்திரை ஆட்டத் திருநாள் பூஜைக்காக இன்று மாலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படவுள்ளது. இந்தமுறையும் போராட்டம் எதுவும் நடைபெறலாம் என்பதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கமாண்டோ படையினர்,100 பெண் போலீசார் உள்பட 2,300 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வரலாற்றில் முதன் முறையாக சன்னிதானம் பகுதியில் 50 வயதுக்கு மேற்பட்ட 15 பெண் போலீசார்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இலவங்கல், நீலக்கல்,பம்பை,மற்றும் சன்னிதானம் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நீலக்கல்லில் அதிகளவிலான போலீசார்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மாலையிலிருந்து நாங்கள் காத்து கொண்டிருக்கிறோம். இன்று காலை 6 மணிக்கு எங்களை அனுமதிப்பதாக தெரிவித்திருந்தனர். தற்போது, பேருந்துகள் அனைத்தும் மதியம் 12 மணிக்கு மேல் அனுமதிக்கப்படும் என போலீசார் கூறுகின்றனர். தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லையென்றால்,கேரள மாநில போக்குவரத்து பேருந்துகளை இயக்க வேண்டும் என பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.

பக்தர்கள் மலைக்கு செல்வதை நாங்கள் கட்டுப்படுத்தவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கள், 5 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon