மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 10 ஜூலை 2020

ஸ்டாலின்- தினகரன் பலமுறை சந்திப்பு: ஓ.பி.எஸ்

ஸ்டாலின்- தினகரன் பலமுறை சந்திப்பு: ஓ.பி.எஸ்

திமுக தலைவர் ஸ்டாலினும் டிடிவி தினகரனும் பலமுறை ரகசியமாக சந்தித்துப் பேசியுள்ளதாகத் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.

முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையில் பங்கேற்பதற்காக மதுரை சென்றிருந்த திமுக தலைவர் ஸ்டாலினும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் ஒரே ஓட்டலில் தங்கியதாகவும், இருவரும் சந்தித்து ஆலோசனை நடத்தியதாகவும் அதிமுகவின் நமது அம்மா நாளிதழில் செய்தி வெளியானது.

இதற்கு மறுப்பு தெரிவித்த தினகரன், “மு.க.ஸ்டாலின் அந்த ஓட்டலில் தங்கியிருந்து சென்ற பிறகு தான் நாங்கள் ஓட்டலுக்கே சென்றோம். இதெல்லாம் தேவையில்லாத ஒன்று. ஜி.கே.வாசன் கூட அந்த ஓட்டலில் தங்கியிருந்தார். ஒரே ஓட்டலில் பல தலைவர்கள் தங்கியிருப்பது புதிதல்ல, வழக்கமான ஒன்று தான்” என்று கூறியிருந்தார்.

இதேபோது திமுக பொருளாளர் துரைமுருகனும், இரு வேறு கட்சியை சேர்ந்தவர்கள் ஒரே விமானத்தில் பயணிக்கக் கூடாதா, ஒரே விடுதியில் தங்கக் கூடாதா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் இன்று (நவம்பர் 5) செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் பன்னீர்செல்வம், “தினகரனும் ஸ்டாலினும் பலமுறை ரகசியமாக சந்தித்து பேசியுள்ளனர். கடம்பூர் ராஜுவை அதிமுகவின் ஸ்லீப்பர் செல் என்று முன்னாள் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கூறியுள்ளது தொடர்பான முழுவிவரம் இரு தரப்பில் இருந்தும் கேட்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

மேலும், “திருவாரூர், திருப்பரங்குன்றம் உட்பட 20 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில் அதிமுக சார்பில் நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்கள் தங்கள் பணியை செய்து வருகின்றனர். நிச்சயமாக அதிமுக வெற்றிபெறும். 8 தொகுதிகளில் வெற்றிபெற்றாக வேண்டும் என்று நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் தெரிவிக்கவில்லை. 20 தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும் என்ற கருத்தைத்தான் அவர் பதிவு செய்தார்” என்று தெரிவித்த பன்னீர்செல்வம், பருவமழை பாதிப்புகளை சமாளிக்கும்வகையில் அரசு சார்பில் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

அழைப்பு விடுத்தும் தினகரன் தரப்பில் இருந்து யாரும் அதிமுகவிற்கு வரவில்லையே என்ற கேள்விக்கு, “அழைப்பு விடுப்பது எங்கள் பெருந்தன்மை. அதை ஏற்றுக்கொள்வது, ஏற்றுக்கொள்ளாததும் அவர்களின் மனநிலை” என்று பதிலளித்தார்.

தேர்தலில் தனித்து நின்று வெற்றிபெற வேண்டும் என்ற முடிவை ஜெயலலிதா ஏற்கனவே எடுத்து உள்ளார். அதிமுகவின் கொள்கையோடு இணைந்து வருகின்ற கட்சிகள் வந்தால் அவர்களுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவோம் என்றும் பன்னீர்செல்வம் கூறினார்.

திங்கள், 5 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon