மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 10 ஜூலை 2020

பட்டாசுக் கட்டுப்பாடு: சட்டம் சிறுவர்களுக்கு பொருந்தாதா?

பட்டாசுக் கட்டுப்பாடு:  சட்டம் சிறுவர்களுக்கு பொருந்தாதா?

தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள கால அட்டவணை உத்தரவு தமிழகம் உட்பட பல மாநில மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை ஒவ்வொரு தெருவுக்கும் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பும், அதை அமல்படுத்த வேண்டிய கடமையும் காவல்துறையினரையே சாரும் என்று உத்தரவிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.

தீபாவளி அன்று மட்டும் தமிழகத்தில் காலை 6 மணி முதல் 7மணி வரை மற்றும் மாலை 7 மணி முதல் 8 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நேரக் கட்டுப்பாடுகளை மக்களிடம் கொண்டு சென்று பின்பற்றுமாறு தமிழக போலீஸுக்கு டிஜிபி அலுவலகம் உத்தரவிட்டது. ஒவ்வொரு காவல்நிலையத்துக்கும் இது தொடர்பான சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது.

இதன்படி குறிப்பிட்ட நேரம் தாண்டி பட்டாசு வெடிப்பவர்கள் மீது ஆணையை மீறிய சட்டப் பிரிவு 188ன் படி அதிபட்சம் ஆறு மாதம் சிறையும், ஆயிரம் ரூபாய் அபராதம் என்றும் இருப்பதாக போலீஸ் தரப்பில் சொல்கிறார்கள்.

ஆனால் வழக்கறிஞர்கள் வட்டாரத்தில் கேட்டால், “சட்டப் பிரிவு 188 என்பது பொது உத்தரவுக்கு மதிப்பளிப்பது பற்றியானது. பொது உத்தரவை அறிந்தே மீறினால் அதற்கு தண்டனை, ‘சிம்பிள் இம்பிரிசன்மென்ட்’ என்றுதான் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சிம்பிள் என்பதற்குப் பொருள் மிகக் குறைந்த பட்சம் என்பதாகும். அது இரண்டு மாதமாக இருக்கலாம், ஒரு மாதமாக இருக்கலாம். அதுவும் இந்த பிரிவை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மீதுதான் பயன்படுத்த முடியுமா என்பதும் இப்போது கேள்வியாகியிருக்கிறது.

தீபாவளியை ஒட்டி பட்டாசு வெடிப்பவர்களில் 90 சதவிகிதம் பேர் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள்தான். எனவே இவர்கள் மீது சிறார் நீதிமன்றத்தில்தான் வழக்குப் போட முடியும். 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே சிம்பிள் இம்பிரிசன்மென்ட் தான் என்கிறபோது, சிறுவர்களுக்கு இந்த சட்டப் பிரிவை பயன்படுத்த முடியுமா என்பதும் கேள்விக்குறிதான்” என்கிறார்கள்.

அதனால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மாறாக சிறுவர்கள் வெடிவெடித்தால் அவர்கள் மீது, வழக்குப் பதிய முடியுமா என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது.

சட்டமே இப்படி இருக்கும் நிலையில்தான், டெல்லி போலீஸார் மகன் வெடி வெடித்ததற்காக தந்தை மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். நவம்பர் 1ஆம் தேதி டெல்லி காசிப்பூர் பகுதியைச் சேர்ந்த சிறுவன், தன் தந்தை வாங்கிகொடுத்த பட்டாசுகளை வெடித்துக் கொண்டிருந்தான். அப்போது அதிகமான சத்தம் தரக்கூடிய பட்டாசுகளையும், புகை எழுப்பக்கூடிய பட்டாசுகளை வெடித்தாக கூறப்படுகிறது. இதன்காரணமாக பக்கத்து வீட்டு நபர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து அங்கு வந்த போலீசார் சிறுவனிடம் இருந்த பட்டாசுகளை பறிமுதல் செய்து, பட்டாசுகளை வாங்கிக் கொடுத்த குற்றத்திற்காகச் சிறுவனின் தந்தையைக் கைது செய்தனர். இதுவும் சட்டப்படி தவறுதான். சிறுவனின் தந்தை பட்டாசு வெடிக்காத பட்சத்தில், அவர் பட்டாசு வாங்கிக் கொடுத்ததே குற்றமா என்ற கேள்வி எழும். எனவே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்துவதில் பெரிய குழப்பம் இருக்கிறது என்கிறார்கள் வழக்கறிஞர்கள் தரப்பில்.

காவல்துறையினர் தீவிரம்

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, பட்டாசு வெடிப்பதற்கான நேரக் கட்டுப்பாடு பற்றியும் அதை மீறினால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றியும் ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனில் இருந்தும் ஆட்டோ மூலமாக தெருத் தெருவாக பிரசாரம் செய்யப்பட்டிருக்கிறது. கடலூரில் திருபாதிரிப்புலியூர் துணை ஆய்வாளர் பரணி, பொதுமக்கள் மத்தியில் மைக் பிடித்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பற்றி விளக்கி, ‘தயவு செய்து குறித்த நேரத்துக்குள் வெடி வெடித்துக் கொள்ளுங்கள் என்று பணிவோடு வேண்டிக் கொள்கிறோம்” என்று பேசி வருகிறார்.

நம்மிடம் பேசிய போலீஸார், “மாநகரங்களில் சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து என்று இரண்டு பிரிவுக்கும் தனித் தனி காவலர்கள் இருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலான மாவட்டங்களில் இவை இரண்டுக்கும் தனித்தனி போலீஸ் பிரிவு கிடையாது. இந்நிலையில் பண்டிகை காலங்களில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடி, பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் திருடர்களைப் பிடிக்க வேண்டிய பணி , மதுக் கடத்தலைத் தடுக்கும் பணி, சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றும் பணி என்று பல்வேறு பணி நெருக்கடிகளில் இருக்கிறோம். இவற்றுக்கான போலீசார் எண்ணிக்கையும் பற்றாக்குறையாகவே இருக்கிறது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் பட்டாசுக் கட்டுப்பாட்டை அமல்படுத்த வேண்டிய பெரும் பொறுப்பும் காவல்துறையினரின் தோள்களில் விழுந்துள்ளது. உத்தரவை அமல்படுத்த வேண்டியது பெரும் சவாலானது” என்கிறார்கள்.

திங்கள், 5 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon