மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 13 ஜூலை 2020

தூத்துக்குடி மக்ரூனுக்கு புவிசார் குறியீடு!

தூத்துக்குடி மக்ரூனுக்கு புவிசார் குறியீடு!

தூத்துக்குடி மக்ரூன் மற்றும் கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு விரைவில் புவிசார் குறியீடு கிடைக்கவுள்ளது.

16ஆம் நூற்றாண்டிலிருந்து தூத்துக்குடியில் மக்ரூன் உற்பத்தி செய்யப்படுகிறது. அதேபோல கடலை மிட்டாய் உற்பத்திக்கு கோவில்பட்டி மிகவும் புகழ்பெற்றது. தூத்துக்குடியில் தயாரிக்கப்படும் இவையிரண்டுக்கும் தமிழகம் முழுவதும் பெரும் வரவேற்பு எப்போதும் உள்ளது. தனிச்சிறப்பு மிக்க இவையிரண்டுக்கும் விரைவில் புவிசார் குறியீடு கிடைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அறிவுசார் சொத்துரிமை சங்கத்தின் தலைவர் சஞ்சய் காந்தி இன்று (நவம்பர் 5) செய்தியாளர்களிடம் பேசுகையில், “தூத்துக்குடி மக்ரூன், கோவில்பட்டி கடலை மிட்டாய், திருவில்லிபுத்தூர் பால்கோவா, மணப்பறை முருக்கு போன்ற பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படவுள்ளது.

இது தீபாவளிக்கு கிடைத்துள்ள இனிப்பான செய்தியாகும். இதுதவிர தமிழ்நாட்டில் 30 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பித்துள்ளோம். இவற்றுக்கும் புவிசார் குறியீடு கிடைத்தால் இந்தியாவிலேயே அதிக புவிசார் குறியீடு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு இருக்கும். புவிசார் குறியீடு கிடைத்தால் குறிப்பிட்ட அந்தத் தொழிலை குடிசைத் தொழிலாக மேற்கொள்ளும் மக்களுக்கு மிகவும் பயன்படும். இனி ’தூத்துக்குடி மக்ரூன்’ என்று மற்ற ஊர்களில் தயாரித்து விற்பனை செய்ய இயலாது” என்றார்.

அதேபோல, கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கிவிட்டால் வர்த்தகம் அதிகரித்து, ஏற்றுமதி வாய்ப்புகள் கிடைக்கும் என்று கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். மேலும், இதற்காக மத்திய, மாநில அரசுகளுக்கு பல ஆண்டுகளாகக் கோரிக்கை விடுத்து வந்தோம் என்றும், தற்போது எங்கள் கோரிக்கை நிறைவேறவுள்ளது மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

திங்கள், 5 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon