மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 3 ஜூலை 2020

காகிதத்துக்கு இறக்குமதிக் குவிப்பு வரி!

காகிதத்துக்கு இறக்குமதிக் குவிப்பு வரி!

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் விலைக் குறைவான காகிதங்கள் மீது இறக்குமதிக் குவிப்பு வரி விதிப்பதற்கு இந்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

இந்தோனேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் விலை குறைவான காகித சரக்குகளால் உள்நாட்டு நிறுவனங்களின் தொழில் பாதிக்கப்படுகிறது. வெஸ்ட் கோஸ்ட் பேப்பர் மில்ஸ், தமிழ்நாடு நியூஸ்பிரின்ட் & பேப்பர்ஸ் லிமிடெட், பல்லார்பூர் இண்டஸ்ட்ரீஸ், ஜே.கே. பேப்பர் ஆகிய நிறுவனங்கள் விலை குறைவான காகித இறக்குமதி குறித்து விசாரணை நடத்தும்படி வர்த்தகத் தீர்வுகளுக்கான பொது இயக்குநரகத்திடம் கோரிக்கை விடுத்தன. இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில், இந்தோனேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் காகித சரக்குகளின் விலை குறைவாக இருப்பதாகவும், அவற்றால் உள்நாட்டுத் தொழில் துறை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மேற்கூறிய நாடுகளிலிருந்து காகித சரக்குகள் இந்தியாவில் குவிக்கப்பட்டுள்ளதால் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளதாக வர்த்தகத் தீர்வுகளுக்கான பொது இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில், ‘குறிப்பிடப்பட்ட சரக்குகள் இந்நாடுகளிலிருந்து உற்பத்தியானாலோ அல்லது ஏற்றுமதி செய்யப்பட்டாலோ அச்சரக்குகளுக்கு மூன்று ஆண்டுகளுக்கு உறுதியான இறக்குமதிக் குவிப்பு வரி விதிக்கும்படி ஆணையம் பரிந்துரைக்கிறது’ என்று கூறப்பட்டுள்ளது. இறக்குமதிக் குவிப்பு வரி விதிக்கப்படுவதற்கான இறுதி நடவடிக்கையை மத்திய நிதியமைச்சகம்தான் எடுக்கும்.

திங்கள், 5 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon