மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 10 ஜூலை 2020

கோகுல இந்திராவை மாற்றியது ராஜ கண்ணப்பனா?

கோகுல இந்திராவை மாற்றியது ராஜ கண்ணப்பனா?

அதிமுகவின் இடைத்தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனத்தில் நிர்வாகிகள் இடையே ஒற்றுமை இல்லாததும், உரசல்கள் தொடர்வதும் முதல்வரை கவலை அடைய வைத்திருக்கிறது. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கத்தை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயணன் உறுதிப்படுத்தினார்.

இதையடுத்து இந்த 18 தொகுதிகள், திருவாரூர், திருப்பரங்குன்றம் ஆகியவை அடங்கிய 20 தொகுதிகளுக்கு எப்போது வேண்டுமானாலும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம் என்ற நிலை இருக்கிறது.

அதிமுக கடந்த மாதமே 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலுக்கான பொறுப்பாளர் பட்டியலை வெளியிட்டது. இதில் நவம்பர் 4 ஆம் தேதி சில மாற்றங்களும் செய்யப்பட்டது. அதன்படி மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா அங்கிருந்து மாற்றப்பட்டு சென்னை பெரம்பூர் தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இதற்குப் பின்னால் அதிமுக உட்கட்சிப் பூசல் இருக்கிறது என்கிறார்கள் தென் மாவட்ட ரத்தத்தின் ரத்தங்கள்.

“முதலில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்கு அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் பாஸ்கரன், ராஜகண்ணப்பன், கோகுல இந்திரா, செந்தில்நாதன் ஆகியோர் அடங்கிய பொறுப்பாளர்கள் குழு நியமிக்கப்பட்டது. இதில் இருந்து இப்போது கோகுல இந்திரா மாற்றப்பட்டிருக்கிறார். இந்த மாற்றத்துக்குக் காரணம் முன்னாள் அமைச்சர்களான ராஜ கண்ணப்பனுக்கும், கோகுல இந்திராவுக்கும் இடையே நடக்கும் ஈகோ யுத்தம்தான்.

கண்ணப்பன் 91-96 ஆட்சிக் காலத்தில் முக்கிய துறைகளை கவனித்தவர். பின் அதிமுக தலைமையோடு அவருக்கு முரண்பாடு ஏற்பட்டது. இந்த காலகட்டத்தில் அதே சமுதாயத்தில் இருந்து கோகுல இந்திராவை அமைச்சர் ஆக்கினார் ஜெயலலிதா. அதிலிருந்தே இருவருக்கும் ஈகோ ஆரம்பித்தது. இப்போது பொறுப்பாளர்கள் பட்டியலில் கோகுல இந்திரா பெயர் இருந்தால் நான் பணி செய்யமாட்டேன், என்னை விட்டுடுங்க என்று அமைச்சர் செங்கோட்டையனிடம் சொல்லிவிட்டாராம் கண்ணப்பன். மானாமாதுரை தொகுதிக்கு கண்ணப்பனின் பணபலம் தேவை என்பதால் அவரை கைவிட தலைமைக்கு மனமில்லை.

மேலும் கோகுல இந்திரா இப்போது ஓ.பன்னீரின் ஆதரவாளராக அறியப்படுபவர். எடப்பாடியோடு அவ்வப்போது முரண்பட்டு வருகிறார். அண்மையில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவில் கூட அவருக்கு விஐபி சீட் தரவில்லை என்று ஓர் சர்ச்சை எழுந்தது. இந்த பின்னணியில்தான் கண்ணப்பன் கேட்டதும் கோகுல இந்திராவை மானாமதுரை தொகுதியில் இருந்து மாற்றிவிட்டார்கள்” என்று கூறுகிறார்கள்.

அதேநேரம் கோகுல இந்திரா தரப்பினரோ, “அதெல்லாம் ஒன்றுமில்லை. கோகுல இந்திரா இப்போது முழுக்க முழுக்க சென்னைவாசியாகிவிட்டார். சிவகங்கை மாவட்டத்தில் அவர் அரசியல் செய்து வெகுகாலமாகிவிட்டது. அதனால்தான் அம்மாவே அவருக்கு அண்ணாநகர் தொகுதியைக் கொடுத்தார். இந்த நிலையில் அவராகவே கேட்டுதான் பெரம்பூர் தொகுதி பொறுப்பாளராக ஆகியிருக்கிறார். இதில் வேறு ஒன்றும் அரசியல் இல்லை” என்கிறார்கள்.

எடப்பாடி- பன்னீர் அணிகள் இணைந்த பின்னால் கூட இப்படி ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு ஈகோ மோதல் இருப்பதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிருப்தி அடைந்திருக்கிறாராம்.

“ஏற்கனவே திமுக, தினகரன்னு எதிர்ப்பு நமக்கு பலமா இருக்கு. நமக்குள்ளயே இப்படி மோதிக்கிட்டிருந்தா என்னாகும்?” என்று கேட்டிருக்கிறாராம் முதல்வர்.

-ஆரா

திங்கள், 5 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon