மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 நவ 2018

எடப்பாடி, ஸ்டாலின் ஏன் செல்லவில்லை?

எடப்பாடி, ஸ்டாலின் ஏன் செல்லவில்லை?

-திருமாவளவன் கேள்வி

தீபாவளி பண்டிகை கொண்டாடும் தருணத்தில் பல கட்சிகள் போராட்டத்தைத் தவிர்த்துவிடும் நிலையில்... சேலம் மாநகரில் ஆயிரக்கணக்கான தொண்டர்களைத் திரட்டி, தலித் சிறுமி ராஜலட்சுமி படுகொலைக்கு நீதி கேட்டு இன்று (நவம்பர் 5) ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன். கொலைக்கு நீதி கேட்டதோடு ஆர்ப்பாட்ட மேடையிலேயே ராஜலட்சுமி குடும்பத்துக்கு நிதி திரட்டியும் கொடுத்தார் திருமாவளவன்.

சேலம் கோட்டை மைதானத்தில் இன்று பகல் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ராஜலட்சுமியின் தாய், தந்தையர், அவரது அக்கா அருந்ததி, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளின் மாவட்டச் செயலாளர்கள் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் இறுதி உரையாக கொளுத்தும் வெயிலில் ஒரு மணி நேரம் பேசிய திருமாவளவன் அதிமுக அரசு, திமுக, பாமக, பாஜக என்று சகலரையும் விமர்சித்துப் பேசினார். அவரது பேச்சு இதோ...

தீபாவளி நேரமாக இருக்கிறதே போராட்டத்தை சில நாள் தள்ளிவைத்துக் கொள்ளலாமா என்று சில நிர்வாகிகள் என்னிடம் கேட்டனர். பண்டிகையைக் கொண்டாடிவிட்டு போராடுவதற்கு நாம் சராசரி அரசியல்வாதிகள் அல்லர். அதேபோல இன்னும் சில நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தை ஆத்தூரில் வைத்துக் கொள்ளலாமா என்றும் கேட்டார்கள். முதல்வருக்குச் சொந்த மாவட்டமான சேலம் என்பதால் சேலம் மாநகரத்திலேயே ஆர்ப்பாட்டத்தை வைக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். மூன்று நாள் முன்புதான் ஆர்ப்பாட்டத்தை முடிவு செய்தோம். விடிந்தால் தீபாவளி என்ற நிலையிலும் என் வேண்டுகோளை ஏற்று குறுகிய கால இடைவெளியில் இப்படி ஒரு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தமைக்கு பாராட்டியே ஆக வேண்டும்.

முதல்வர் மாவட்டத்தில் சாதிக்கொடுமைகள்

முதல்வரின் சேலம் மாவட்டத்தில் ஏராளமான சாதிக் கொடுமைகள் தலைவிரித்தாடுகின்றன.ராஜலட்சுமியின் அக்கா அருந்ததி இங்கே பேசியதை நாம் கவனிக்க வேண்டும்.“நான் ராஜலட்சுமியின் அக்காவாக பேசவில்லை. ஒரு பெண்ணாக பேசுகிறேன்” என்று குறிப்பிட்டார். இதை சாதிப் பிரச்னையாக மட்டுமல்ல, பெண்ணுக்கு எதிரான ஆணாதிக்கமாகவும் பார்க்க வேண்டும்.

சாதி என்பது தலித்துகளுக்கு எதிராக மட்டுமல்ல... ஒவ்வொரு சாதிக்கும் எதிராக இருக்கிறது என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும். ஒவ்வொரு சாதிக்கு இடையிலும் தீண்டாமை இருக்கிறது.

வாழப்பாடி பூங்கொடி என்ற வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை, ஐந்தாறு பேர் பாலியல் வல்லுறவு செய்து கொன்று தூக்கில் மாட்டிவிட்டனர். கால்வழியே ரத்தம் வழிந்திருக்கிறது. இந்தச் செயலை செய்தது அதே சாதியைச் சேர்ந்தவர்கள். இதை நான் சொன்னால் என் மீது ஆத்திரப்படுவார்கள். அவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள். அன்று பூங்கொடிக்காக போராடியது பாமக அல்ல. போராடியது விடுதலைச் சிறுத்தைகள்தான். நான் வெறும் சாதி அடிப்படையில் இதை அணுகவில்லை.

எல்லாவற்றுக்கும் பின்னால் சனாதனம்

இந்த எல்லா செயலுக்கும் பின்னணியில் ஒரு கோட்பாடு இருக்கிறது. ஆணாதிக்கம், சாதி ஆதிக்கம் தாண்டி பின்னால் ஒரு கோட்பாடு இருக்கிறது. அதுதான் சனாதனக் கோட்பாடு., இந்துத்வ கோட்பாடு. இந்துமதம் சிறுவர்களை சிறுமிகளைத் திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கிறது. அது இந்துவத்தின் கோட்பாடு. அம்பேத்கர் அரசியல் அமைப்பு சட்டத்தில் அதை குற்றமாக்கிவிட்டார். மக்களிடம் சாதி உணர்வை ஆரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்துவது என்பது சனாதனம். சாதி ஆதிக்கம் என்பது ராமதாஸை எதிர்ப்பது அல்ல. சனாதனத்தை அல்ல. ராமதாஸ் மட்டும்தான் சாதி வெறியர் அல்ல. சனாதனத்தை நம்பும் எல்லாருமே சாதி வெறியர்கள்தான். அவர்களுக்குத் தலைமை தாங்குவது ஆர்.எஸ்.எஸ், பாஜக. அதனால்தான் நாம் சனாதனத்திடம் இருந்து நாட்டைக் காப்பாற்ற திருச்சியில் தேசம் காப்போம் மாநாட்டை நடத்த இருக்கிறோம்.

தினேஷ் குடும்பத்தையே கைது செய்ய வேண்டும்!

சனாதனக் கொடுமைக்கு பலியாகியிருக்கிறாள் பச்சிளம் குழந்தை ராஜலட்சுமி. தினேஷ்குமார் என்ற சாதி வெறியர் குடும்பம் மட்டும்தான் அந்த காட்டுக்கொட்டாய் கிராமத்தில் மிக மோசமான தீண்டாமையைக் கடைபிடித்து வருகிறது. இந்தக் கொலை திட்டமிட்டு நடந்திருக்கிறது.அதனால் தினேஷை மட்டும் கைது செய்தது போதாது. அவன் மனைவியையும், அண்ணனையும் கைது செய்ய வேண்டும்.

முதல்வர், எதிரக்கட்சித் தலைவர் ஏன் சந்திக்கவில்லை?

முதல்வரின் சொந்த மாவட்டத்தில் இது நடந்திருக்கிறது. அதனால், அவர் மீது குற்றம் சுமத்த வேண்டுமென்று நான் சொல்லவில்லை. தன் மாவட்டத்தில் முதல்வருக்கு கூடுதல் அக்கறை, கூடுதல் கவனம் இருக்க வேண்டும். கொலையான அந்த குழந்தையின் குடும்பத்தினரை முதல்வர் சந்தித்து ஆறுதல் சொல்லியிருக்க வேண்டாமா? அவருக்கு அதிக பணிகள் இருக்கலாம். அவரது பிரதிநிதிகளாவது சந்தித்து ஆறுதல் சொல்லியிருக்க வேண்டாமா? ஆளுங்கட்சிக்கு ஒடுக்கப்பட்டவர்கள் வாக்களிப்பதே இல்லையா? திருமாவளவனுக்கு வாக்களிப்பதை விட அதிமுகவுக்கு வாக்களிப்பவர்கள்தானே அதிகம்? ஏதோ ஒரு நம்பிக்கை. அம்பேத்கரை ஆதரித்ததை விட காந்தியை ஆதரித்த தலித்துகள்தானே அதிகம். ஆக தலித்துகளின் ஓட்டு மட்டும் வேண்டும். ஆனால் அவர்களின் கண்ணீரை துடைத்துவிட ஒரு நிமிடம் உங்களால் செலவழிக்க முடியாதா?

சரி... ஆளுங்கட்சிக்கு எதிராக இந்தக் கொலையைப் பயன்படுத்தலாம் என்ற அடிப்படையில் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் அந்த வீட்டுக்குப் போய் ஆறுதல் சொல்லியிருக்கக் கூடாதா? இடது சாரிகளைத் தவிர வேறு யார் அங்கே வந்துபோயிருக்கிறார்கள்?

அரசியல் அதிகாரமே வழி

இப்படிப்பட்ட வலிகளை எல்லாம் வைத்துக் கொண்டு எப்படி அந்த எதிர்க்கட்சியோடு இணைந்திருக்கிறீர்கள் என்று நீங்கள் கேட்கலாம். இந்த ஒற்றை பிரச்னையை வைத்துக் கொண்டு தேர்தல் களத்தில் முடிவெடுத்துவிட முடியாது. அரசியல் அதிகாரத்தில் இருந்து நாம் தொடர்பில்லாமல் இருந்துவிடக் கூடாது. நாம் அதிகார வலிமையில்லாமல் இருப்பதுதான் இந்தக் கொடுமைகள் தொடரக் காரணம். ஆட்சி அதிகாரத்தை நோக்கிய பயணத்தில் இத்தகைய முரண்பாடுகளைக் கடந்து செல்ல வேண்டிய தேவை இருக்கிறது.

முதல்வருக்கு கோரிக்கைகள்

தமிழக முதல்வரை விரைவில் ராஜலட்சுமியின் குடும்பத்தினரோடு சென்று சந்திக்க இருக்கிறேன். இன்று காலையில் அவர்களின் குடும்பத்தினருக்கு 50 லட்சம் அளிக்க வேண்டும் என்று கோரினேன். ஆனால் அந்தக் குடும்பத்துக்கு எத்தனை கோடிகள் வேண்டுமானாலும் அரசு அளிக்கலாம். எனவே அவரது குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் அரசு நிதியுதவி அளிக்க வேண்டும், ராஜலட்சுமியின் அக்கா அருந்ததி நர்ஸிங் படித்திருக்கிறார். அவருக்கு அரசு வேலை அளிக்க வேண்டும்.

வன்கொடுமை வழக்கு என்றால் பொதுவான ஒரு டி.எஸ்.பி. புலனாய்வு அதிகாரியாக இருப்பார். இந்த வழக்கில் ஒரு பெண் டி.எஸ்.பி.யை புலனாய்வு அதிகாரியாக நியமிக்க வேண்டும். இது மாதிரியான வழக்குகளில் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் நேர்மையாக இருப்பார்கள் என்று கூற முடியாது. ஏனெனில் நீதித்துறைக்குள்ளும், வருவாய் துறைக்குள்ளும், காவல்துறைக்குள்ளும் சாதியம் இருக்கிறது. எனவே இந்த வழக்கை நேர்மையாக நடத்துவதற்கு ஏதுவாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் முன்மொழியும் வழக்கறிஞரை ஸ்பெஷல் பப்ளிக் பிராசிகியூட்டராக நியமிக்க வேண்டும்.

அடுத்த கோரிக்கை... குற்றப் பத்திரிகை செய்வது காலதாமதமானால் குண்டர் தடுப்புச் சட்டத்தில் இருப்பவர்கள் கூட வெளியே வந்துவிட முடிகிறது. அந்த தினேஷ்குமாரை பிரேமானந்தா சாமியார் போல சிறைக்குள் வைத்தே வழக்கை நடத்த வேண்டும். உடனடியாக குற்றப் பத்திரிகை நடத்தி, விசாரணையை விரைந்து முடித்து தண்டனையை விரைந்து வழங்க வேண்டும்” என்று கோரிக்கைகள் வைத்து பேசி முடித்தார் திருமாவளவன்.

நிதி 2 லட்சம்

ராஜலட்சுமி குடும்பத்தினருக்காக மேடையில் இருந்தபடியே திருமாவளவன் விடுத்த வேண்டுகோளை ஏற்று விடுதலைச் சிறுத்தைகள் நிதி அளித்தனர். 500 ரூபாயில் இருந்து 5 ஆயிரம் ரூபாய் வரை அவர்கள் அளித்த பணம் 2 லட்சத்து 5 ஆயிரம் ரூபாயை ராஜலட்சுமியின் பெற்றோரிடம் வழங்கினார் திருமாவளவன்.

சேலம் நிகழ்ச்சியை முடித்துவிட்டு நாளை ஆந்திராவுக்குச் செல்கிறார் திருமாவளவன். ஏற்கனவே முதல்வரை சந்திக்க அவர் சார்பில் நேரம் கேட்கப்பட்டிருக்கிறது. எனவே நாளை மறுநாளுக்குப் பின் அவர் முதல்வரை சந்திக்கக் கூடும் என்கிறார்கள் சிறுத்தைகள் வட்டாரங்களில்.

-ஆரா

சென்னை - வேலூர் இடையே முன்பதிவில்லாத ரயில்!

3 நிமிட வாசிப்பு

சென்னை - வேலூர் இடையே முன்பதிவில்லாத ரயில்!

ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது: சென்னை மாநகராட்சி!

4 நிமிட வாசிப்பு

ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது: சென்னை மாநகராட்சி!

கோவிட் காலத்தில் 81% அதிகரித்த தங்க நகைக்கடன்!

6 நிமிட வாசிப்பு

கோவிட் காலத்தில் 81% அதிகரித்த தங்க நகைக்கடன்!

திங்கள் 5 நவ 2018