மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 15 ஆக 2020

மது குடித்தால் பரிசு:அறிவித்தவர் மீது வழக்கு!

மது குடித்தால் பரிசு:அறிவித்தவர் மீது வழக்கு!

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார் ஒன்றில் ஆயிரம் ரூபாய்க்கு மது அருந்தினால் டிவி,வாஷிங்மெஷின்,குளிர்சாதனப் பெட்டி ஆகியவற்றில் ஒன்று இலவசமாக வழங்கப்படும் என்ற சலுகையை அறிவித்த அதிமுக பிரமுகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிக பொருட்களை வாங்கினால் பரிசு வழங்கப்படும் என்ற அறிவிப்பை பண்டிகை காலங்களில் நிறுவனங்கள் வெளியிடுவது வழக்கம். அந்த அறிவிப்பையடுத்து, துணி,நகை,வீட்டு உபயோகப் பொருட்கள், பட்டாசு போன்ற பொருட்களை வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதும்.

இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கு மது விற்பனையை அதிகரிப்பதற்காக சலுகையை அறிவித்தது திருவல்லிகேணியில் உள்ள பார். இங்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல் மது அருந்தினால் பரிசு பொருட்கள் வழங்கப்படும். குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவர்களுக்கு 32 அங்குல கலர் டிவி, குளிர் சாதனப் பெட்டி, வாஷிங் மெஷின் ஆகியவற்றில் ஒன்று வழங்கப்படும் என விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டன. இதுகுறித்து நோட்டீஸ் அடிக்கப்பட்டு வினியோகிக்கப்பட்டன. .

இதுகுறித்து பொதுமக்கள் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து, விளம்பர பேனர் வைத்திருந்த பார் மேலாளர் வின்செண்ட் ராஜ், பார் உரிமையாளரின் உதவியாளர் ரியாஸ் அகமது ஆகியோரை ஜாம்பஜார் போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து பார் உரிமையாளர் முகமது அலிஜின்னா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அதிமுக கவுன்சிலரான இவர்,தற்போது சேப்பாக்கம் சிறுபான்மை பிரிவு அதிமுக மாவட்ட செயலாளராக இருக்கிறார். மது அருந்துவோருக்கு வழங்க வைக்கப்பட்டிருந்த பரிசு பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.320 கோடிக்கு மது விற்பனை செய்ய டாஸ்மாக் இலக்கு நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 5 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon