மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 26 செப் 2020

நமக்குள் ஒருத்தி: எப்போதும் பாதிப்பு பெண்ணுக்குத்தான்!

நமக்குள் ஒருத்தி: எப்போதும் பாதிப்பு பெண்ணுக்குத்தான்!

நவீனா

தேவதாசி முறையை முற்றிலும் ஒழித்துவிட்டதாகப் பாடப் புத்தகம் முதல் மேடைப் பேச்சுகள் வரை அனைத்திலும் அனைவரும் குறிப்பிடக் கேள்விப்பட்டிருப்போம். தேவதாசி முறையை ஒழித்தது ஒருபுறமிருந்தாலும் தேவதாசிகளாகப் பொட்டுக்கட்டிவிடப்பட்ட பெண்கள் அனுபவித்துவரும் துயரங்களை ஒழித்துவிட முடியாது என்பதே நிதர்சனம். அவர்களின் மறுவாழ்வுக்கு எந்த முனைப்பும் காட்டப்படாத நிலையில், இங்கிலாந்தின் லிவர்பூல் அருங்காட்சியகத்தின் (Liverpool) சார்பில், தென்னிந்தியாவில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் தேவதாசி முறை ஒழிந்தாலும், தேவதாசிகளாக்கப்பட்டவர்களின் அவலநிலையை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கின்றனர்.

1988இல் இந்த முறை ஒழிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும், 2015ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் மட்டும் சுமார் 80,000 ஜோகினிக்கள் அதாவது தேவதாசிகள் இருப்பதாக அறியப்பட்டிருக்கின்றனர். தமிழ்நாட்டிலும் 'வாழும் தேவதாசிகள்' அடையாளம் காணப்பட்டுப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. ஏறத்தாழத் தங்களின் ஐந்தாம் வயதிலேயே பொட்டுக்கட்டி விடப்பட்ட இவர்கள் அனைவரும் இன்று பணி ஏதுமின்றி, பிச்சையெடுப்பதும், பாலியல் தொழில் செய்வதுமாகக் காலம் கடத்திவருகின்றனர். பாலியல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் இதில் அடங்குவர். இவர்களை 'ஜோகினி, தேவதாசி, மாதம்மா' என்று பல பெயர்களில் அழைத்துவருவதோடு, அவர்களின் பிரத்யேக நடனம் ஒன்றையும் 'ஜதாரஸ், பொனாலு, உஸ்தவாலு' போன்ற விழாக்களில் அவர்களை ஆடச்செய்து வருகின்றனர்.

அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது குறித்து ஆந்திர அரசாங்கமும், பல ஆவணப் படங்களை வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் ஜோகினி சியாமளாதேவி நடித்த ஜோகினிக்களின் வாழ்க்கை குறித்த முழு நீள திரைப்படம் ஒன்றும் தெலுங்கில் 'வீராங்கம்' (Veerangam) என்னும் பெயரில் வெளிவந்தது. இந்தத் திரைப்படம் குறித்து 'தி ஹிந்து' நாளிதழுக்கு சியாமளா அவர்கள் அளித்த பேட்டியில், தான் ஒன்பது வயதுக் குழந்தையாக இருந்தபோது, ஜோகினி ஆக்கப்பட்டதாகவும், ஜோகினியானபின் முதல் முறை 21 ரூபாய் சம்பளம் பெற்றதாகவும் குறிப்பிடுகிறார். ஒன்பது வயதுக் குழந்தையான தன்னைப் பாரம்பரியம், கலாச்சாரம் என்று சொல்லி வலுக்கட்டாயமாகப் பாலியல் தொழிலுக்குள் தள்ளியதையும் அவர் நினைவுகூர்கிறார்.

இப்படியான மூடநம்பிக்கைகள் ஒருபுறம் பெண்களைப் பாதிக்கின்றன என்றால், அறிவியல் வளர்ச்சிகளும் பெண்களையே குறிவைக்கின்றன. உதாரணமாக குடும்பக் கட்டுப்பாடு மற்றும் கருத்தடை யுக்திகள் அனைத்தும் இருபாலருக்கும் பொதுவானது என்றாலும், அதை பெரும்பாலும் பெண்கள் மீதே திணிக்கின்றனர். குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை என்று வரும்போது குழந்தைப் பேற்றின் வலியோடு சேர்த்து, அந்த வலியையும் பொறுத்துக்கொள்ள வேண்டியதாகிறது. ஆண்கள் பெரும்பாலும் அதற்கு முன்வருவதில்லை, ஏனெனில் குழந்தைப் பேற்றை ஆண்கள் அவர்களின் முதன்மை சக்தியாக நினைக்கின்றனர். அதைத் தங்கள் ஆண்மையின் அளவுகோலாகக் கருதுகின்றனர். எனவே அதை விட்டுத் தருவதற்கு இயல்பாகவே அவர்கள் தயாராக இருப்பதில்லை.

உண்மையில் மனைவிக்குக் கருத்தடை அறுவை சிகிச்சை செய்த பின், கணவன் மட்டும் குழந்தை பெறும் திறனை வைத்துக்கொண்டு சாதிக்கப் போவது என்ன என்று சிந்தித்தால் அது பயனேதுமற்றது என்கிற அர்த்தம் விளங்கும். பயன் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, சமூகத்தின் பார்வையில் 'ஆண்' என்கிற தனக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு நிலையிலிருந்து இறங்குவதற்கு பெரும்பாலான ஆண்கள் தயாராக இல்லை என்பதே அவர்களின் எண்ணங்கள் தெரியப்படுத்துகின்றன.

இவ்வாறான மூடப் பழக்கவழக்கங்களோ, அறிவியல் முன்னேற்றங்களோ, பெண்களைச் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல் உளவியல் ரீதியாகவும் பாதிக்கின்றன. அதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாய் புச்சி எமசேட்டாவின் (Buchi Emecheta) 'த பிரைடு பிரைஸ்' (The Bride Price) எனும் நாவலை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். பிரைடு பிரைஸ் என்பது தமிழ் வழக்கில் நடைமுறையில் இருக்கும் வரதட்சணையே ஆகும். ஆனால் ஆப்பிரிக்கர்களின் வழக்கப்படி, பெண் வீட்டாருக்கு மாப்பிள்ளை வீட்டார் ஒரு குறிப்பிட்ட தொகையை வரதட்சணையாகக் கொடுத்துப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்வார்கள்.

ஆப்பிரிக்கப் பழங்குடிகள் மூடநம்பிக்கையில் திளைத்தவர்கள். அவர்களின் கட்டமைப்பை 'சொசைட்டி ஆஃப் ஆர்க்கிடைப்ஸ்' (Society of Archetypes) என்று குறிப்பிடும் அளவுக்கு அவர்களிடம் மூடநம்பிக்கைகள் மலிந்து கிடக்கும். அவர்களின் நம்பிக்கைப்படி, பெண் வீட்டாருக்கு அளிக்கப்படும் வரதட்சணையை மாப்பிள்ளை வீட்டார் தர மறுத்தாலோ அல்லது பெண் வீட்டார் திருமணத்தில் விருப்பமின்றி வரதட்சணையை ஏற்க மறுத்தாலோ, அதனால் கடவுளின் கோபத்துக்கு அந்தத் திருமண ஜோடி ஆளாவதோடு, அது அந்தப் பெண்ணின் வாழ்வைச் சீரழித்து விடும் என்பது அவர்களின் நம்பிக்கை. இப்படி இருக்க அக்குன்னா (Akunna) என்னும் உயர் சாதியைச் சேர்ந்த பெண், சிக்கி (Chike) என்னும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஓர் ஆணை, குடும்ப எதிர்ப்புகளையும் மீறித் திருமணம் செய்துகொள்கிறாள். தகப்பன் இல்லாத பெண்ணான அக்குன்னாவின் வரதட்சணைப் பணத்தை, சிக்கி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பலமுறை கொடுத்தும், அக்குன்னாவின் சித்தப்பா அதை வாங்க மறுப்பதோடு, அவளை வீட்டை விட்டு ஒதுக்கி வைத்து, அவளைப் போல் ஒரு பிண்டம் செய்து அவர்களின் வழக்கப்படி அக்குன்னாவிற்கு சாபமிட்டுவிடுவார்கள்.

இந்த நிகழ்வானது அவளை மனதளவில் கடுமையாகப் பாதித்து, குழந்தைப்பேற்றின்போது தான் குடும்பத்தின் சாபம் காரணமாக இறந்துவிடுவேன் என்று முழுமையாக நம்ப ஆரம்பித்து விடுவாள். அந்த எண்ணங்கள் அவள் மனதை அழுத்தி கடைசியில், ஒரு பெண் குழந்தையைப் பிரசவித்துவிட்டு, அவள் இறந்தும் விடுவாள். இந்த நாவல் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்டது என்று எசேட்டாவும் குறிப்பிட்டிருப்பார்.

பகுத்தறிவு சரிவர இல்லாத காலத்தில் உருவான மூடப் பழக்க வழக்கங்களாகட்டும், மெத்தப்படித்தவர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளும் முன்னேற்றங்களுமாகட்டும், எதுவாயினும் அவற்றில் இருந்து புறப்படும் அம்புகள் முதலில் பெண்களையே குறிவைப்பது இன்றுவரை நீடித்துவரும் பெண்களுக்கான முதன்மைப் பிரச்சினைகளில் ஒன்றாகவே இருக்கிறது.

இன்னும் பறக்கலாம்!

(தொடரின் அடுத்த பகுதி வரும் வெள்ளியன்று வெளியாகும் - ஆசிரியர்)

(கட்டுரையாளர் நவீனா, ஆங்கிலப் பேராசிரியர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர். சமூகப் பிரச்சினைகள், பெண்ணியம், இலக்கியம் சார்ந்த படைப்புகளை எழுதிவருகிறார். இவரைத் தொடர்புகொள்ள: [email protected])

தொடரின் முதல் பகுதி

பகுதி 2

பகுதி 3

பகுதி 4

பகுதி 5

பகுதி 6

பகுதி 7

பகுதி 8

பகுதி 9

பகுதி 10

பகுதி 11

பகுதி 12

பகுதி 13

பகுதி 14

பகுதி 15

திங்கள், 5 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon