மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 4 ஜுன் 2020

சர்கார் இசை: கேட்கக் கேட்கப் பிடிக்குமா?

சர்கார் இசை: கேட்கக் கேட்கப் பிடிக்குமா?

உதய் பாடகலிங்கம்

அதிநவீன இசை என்பது ஒலித் துணுக்குகளின் ஓங்காரம் என்று ஒரு கருத்து உள்ளது. 90களில் இந்த இலக்கணத்தின் வடிவமாகத் திகழ்ந்தன ஏ.ஆர்.ரஹ்மானின் படைப்புகள். அனிருத்களும் ஷான் ரோல்டன்களும் நிவாஸ் பிரசன்னாக்களும் ஜஸ்டின் பிரபாகரன்களும் கோலோச்சும்போதும், இந்த விமர்சனம் அவரைப் பின்தொடர்வதும், அவரது இசை சாம்ராஜ்யம் தொடர்வதும் ஆச்சரியம்தான்.

சர்கார் பாடல்கள், மக்கள் மனதில் ஆட்சி புரிகிறதா என்னும் கேள்விக்கான பதிலைச் சொல்வதற்குக் கால அவகாசம் கண்டிப்பாக வேண்டும். ஏனென்றால், டேக் இட் ஈஸி ஊர்வசியை ரீமிக்ஸ் செய்யும் காலம் இது.

பதின்பருவ விஜய் ரசிகர்களைக் குதூகலிக்க வைக்கும் நோக்கிலேயே இதில் இடம்பெற்றுள்ள ஐந்து பாடல்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று சொன்னால், அதில் ஒரு சதவிகிதம்கூட மிகையல்ல.

“என்னை மாதிரி பசங்கள பார்த்தா பிடிக்காது; பார்க்க பார்க்கத் தான் பிடிக்கும்” என்று தனுஷ் நடித்த படிக்காதவன் படத்தில் ஒரு வசனம் இடம்பெற்றிருக்கும். இதனைக் கேட்டவுடன், எனக்கு ஏ.ஆர்.ரஹ்மான் நினைவுக்கு வந்தார். இதற்குக் காரணம், “கேட்டால் பிடிக்காது; கேட்க கேட்கத்தான் பிடிக்கும்” என்று அவரது படைப்புகளைக் கிண்டல் செய்யும் வழக்கம் மீம்ஸ்கள் இல்லா யுகத்தில் நடந்ததுண்டு.

ஆனால், ரஹ்மானின் பாடல்களில் பல்வேறு அடுக்குகள் நுணுக்கமாகக் கோக்கப்பட்டிருக்கும். அடுத்தடுத்த முறைகளில் தெளிவாகக் கேட்கலாம் என்ற எண்ணத்துடன் சர்காரில் இடம்பெற்ற ‘டாப் டக்கர்’ பாடலைக் கேட்டேன். கேட்ட மாத்திரத்திலேயே மனதில் பச்செக்கென்று ஒட்டிக்கொள்கிறது இந்தப் பாடல். இல்லையென்று சத்தமாகச் சொன்னால், ‘போங்க அங்கிள், அடப் போங்க ஆன்ட்டி’ என்பது போன்ற வார்த்தைகளைக் கேட்க வேண்டியிருக்கும். ஜாக்கிரதை!

டாப் டக்கரு

110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் பங்கேற்கும் வீரனைப் போல, ரஹ்மானின் துள்ளல் இசைப் பாடல்களில் மனதை வசீகரிக்கும் இசைத் துணுக்குகள் ஆங்காங்கே மேலெழுந்து தாழும். இப்பாடலும் அதில் விதிவிலக்கல்ல. நான்கு வழிச் சாலையில் 250 கிமீ வேகத்தில் செல்லத் துடிக்கும் ஓர் இளைஞனின் மனத் துடிப்பைப் பிரதிபலிப்பது போல விர்ரென்று கடந்து செல்கிறது இப்பாடல். ‘முடிஞ்சா கை வை’ என்று ஹீரோ பஞ்ச் டயலாக் பேசுவதற்குப் பதில் இந்தப் பாடல் ஒலிக்கிறது. 3:41 மணித்துளிகளுக்கு நீளும் இந்தப் பாடலைப் பாடியவர் மோகித் சவுகான்.

“டாப் டக்கரு.. ஷார்ப் லுக்கரு.. ஸ்டண்டனக்கரு.. ஷார்ப்பு பிளிக்கரு.. போடு ஷட்டரு.. ஓட வுட்டுரு.. ரிஸ்க் நம்ம ரேடாரு.. யார்றா நீ.. அடங்கணும்யா.. மடங்கணும்யா” என்று நீள்கிறது இந்தப் பாடல். இந்த வார்த்தைகளுக்குச் சொந்தக்காரர் பாடலாசிரியர் விவேக். ஏற்கனவே, மெர்சல் பாடல்களில் இதுபோன்ற மேஜிக்கை நிகழ்த்திய அனுபவம் உள்ளவர் என்பதால், சர்கார் பாடல்களைக் கேட்கையில் எந்த ஆச்சரியமுமில்லை. படத்தில் இடம்பெற்ற ஐந்து பாடல்களையும் இவரே எழுதியுள்ளார்.

வாட்ஸ் அப் மொழி

இதனால், ‘ஓ கண்களா ஜிஆர் 8 கண்களா ஏகேஏ வெண்ணிலா சில்சிலா’ என்று தொடங்கும் ஓஎம்ஜி பொண்ணு பாடலை எழுதியவர் உங்கள் விவேக் என்று தனியாகக் குறிப்பிட வேண்டாம். அந்த அளவுக்குப் பாடற்கோர்வையில் வாட்ஸ் அப் மொழியைத் தூக்கலாகத் தூவியிருக்கிறார். OMG, ILY, ASAP, BAE, BFF, ROFL, IMO, IDK, KIT, IDK, LoL போன்ற வார்த்தைகளின் அர்த்தம் தெரியாதவர்கள் இணைய அகராதிகளைப் புரட்டிப் பார்க்கும் வாய்ப்பை உண்டாக்கியிருக்கிறார். சோம்பேறித்தனம் நீள்கிறதே என்பவர்கள், இதுபோன்ற இணையதள லிங்குகளை உடனடியாக நாடலாம். சித் ஸ்ரீராம், ஜோனிதா காந்தி குரல்களின் டெக்னோ மேஜிக்காகக் கவர்ந்திழுக்கிறது இப்பாடல்.

‘நேற்று முதல் ஏமாளி.. இன்று முதல் போராளி’ என்று தொடங்கும் ‘ஒரு விரல் புரட்சியே இருக்குதா உணர்ச்சியே’ விஜய்யின் அரசியல் பிரவேசத்துக்கான பாடல் (படத்தில்?!) என்பதைத் தனியாக விளக்க வேண்டிய தேவையில்லை. ‘எளிய மனிதன் எழுதும் விதியிலே புதிய உலகம் தொடங்காதோ’ என்பது போன்ற வரிகள் மெரினா புரட்சியில் ஒன்றிணைந்த மக்களின் உள்ள எழுச்சியை அறுவடை செய்யும் வகையில் வெளிப்படுகிறது. ‘மானம் விற்று எதை வாங்கினாய் எதிர்காலத்தைச் சூறையாடினாய்’ என்று வாக்காளர்களை நோக்கிக் கேள்வி கேட்கும் வகையில் வெளிப்படுகிறது இப்பாடல்.

மற்றுமொரு புரட்சிப் பாடல்

ஏ.ஆர்.ரஹ்மான் குரலின் பின்னணியில் இசைந்தொலிக்கும் கிடார் இசை, இப்பாடலுக்கு நடுவே பல பழைய பாடல்களை நினைவுபடுத்துகிறது. ‘ஆறரை கோடி பேர்களில் ஒருவன்’ எனும் அன்பே ஆருயிரே பாடல், ஆயுத எழுத்தில் வரும் ‘ஜன கண மன ஜனங்களை நினை’ பாடல் போன்றவற்றில் அவற்றுக்கு உயிர் கொடுத்திருக்கும் ரஹ்மானின் குரல். இப்பாடலும் அப்படியே! இந்தப் பாடலில் ரஹ்மானோடு இணைந்து பாடியிருப்பவர் ஸ்ரீநிதி வெங்கடேஷ். இருவர் படத்தில் வரும் ஆயிரத்தில் நான் ஒருவன், மெர்சல் படத்தின் ஆளப்போறான் தமிழன் ஆகிய பாடல்களின் மற்றொரு வெர்ஷனாக இப்பாடல் அமைந்துள்ளது.

ரஹ்மானின் மீதான விமர்சனத்தை வலுப்படுத்தும் வகையில், கேட்கக் கேட்கப் பிடிக்கும் பாடலாக வெளிப்படுகிறது ‘சிம்டாங்காரன் எங்கண்ணாநீ சீரன்.. நிண்டேன் பாரேன் முஷ்டு அப்டிக்கா போறேன்’ பாடல். இதுவே, முதல் சிங்கிளாக வெளிவந்து இணையத்தில் ட்ரெண்டிங் ஆனது.

பாம்பே பாக்யா, விபின் அனேஜாவை அடுத்து ஒலிக்கும் அபர்ணா நாராயணனின் குரல், நமக்குள் கிளாசிக் உணர்வைக் கிளறச்செய்துவிட்டு அடங்கிவிடுகிறது. இப்பாடலில் உள்ள இடையிசை மனக்கண்ணில் ஒரு கொண்டாட்டத்தை நிறுத்துவதை மறுக்க முடியாது.

ஆங்கில வார்த்தைகளுக்கு நடுவே..

‘சிஇஓ இன் தி ஆபீஸ்’ பாடல், கிட்டத்தட்ட நாயகன் அறிமுகப் பாடல் இதுதான் என்று கட்டியம் கூறும் வகையில் இயற்றப்பட்டது. இப்பாடலில் ஆங்கில வார்த்தைகளுக்கு நடுவே ஆங்காங்கே தமிழை நிரப்பி ராக் புரட்சியை நிகழ்த்தியிருக்கிறது விவேக் - ஏஆர்ஆர் கூட்டணி. ‘ப்ளேயடா எனை எனை.. வேண்டுமா துணை துணை.. நானொரு ஏவுகணை வேண்டாமே வினை வினை..’ என்று நீளும் இப்பாடலில், நகுல் அப்யங்கரும் பிளாசேயும் இணைந்து மிரட்டுகின்றனர்.

காசே உலகம் என்றிருக்கும் ஒரு கார்ப்பரேட் முதலாளியின் தினசரி வாழ்க்கையை, அவரது நிறுவன இலக்குகளுக்கான ஆலோசனைக் கூட்டங்களை, வெற்றிக் கொண்டாட்டங்களைத் தொகுத்து பரணி பாடுவதாக உள்ளது இப்பாடல். ‘ஆக்சிஜன் போலவே நாளைக்கு உன் பெயரை எல்லாம் இழுக்கணும்டா.. கூகுளே நாளைக்கு நம்மளைத் தேடி மலைக்கணும்டா..’ என்ற வரிகளும், ‘நிலவில் எனக்கும் ஒரு ஷேர் இருக்குமா.. ஒரு ஊர் இருக்குமா.. போகலாமா’ என்ற வரிகளும் புதிய உலகம் காட்டுகின்றன.

பொதுவாக, ஒரு ஆக்‌ஷன் என்டர்டெயினர் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு வெளியேறும் பதின்வயது ரசிகனிடம், அப்படத்தின் பாதிப்பு பல மணி நேரம் தங்கியிருக்கும். அவர்களது துடிப்புக்கு மேலும் மெருகூட்டும் வகையில் அமைந்திருக்கின்றன சர்கார் பாடல்கள்.

மாயக்கோட்டின் நடுவே ரசிகர்கள்

வழக்கமாக, விஜய் படங்களில் ஏதேனும் ஒரு பாடலாவது மெலடி மெட்டாக இருக்கும். இதில் அப்படி எந்தப் பாடலும் இல்லை. அதேபோல, ‘முன்பே வா என் அன்பே வா’ என்பது போன்ற எவர்கிரீன் ஹிட்களை இனி ரஹ்மானிடம் எப்போது காண்போம் என்ற ஏக்கத்தையும் அதிகமாக்குகிறது சர்கார் ஆல்பம்.

பொதுவாக, ரஹ்மானின் தீவிர ரசிகர்களைக் கணக்கில் கொண்டால், பல ரகமான ரசிகர்கள் பிரிந்து நிற்பார்கள். ரோஜா, புதிய முகம், ஜென்டில்மேன் என்றும், முத்து, இந்தியன், மின்சாரக் கனவு என்றும், பாபா, ஆயுத எழுத்து, பாய்ஸ் என்றும், விண்ணைத் தாண்டி வருவாயா, கடல், அச்சம் என்பது மடமையடா என்றும், பல்வேறு வகையான ரசிகர்களை அசத்தும் விதமாகப் படைப்புகளைத் தந்திருக்கிறார் ரஹ்மான். அவரது ரசிகர்களுக்கு நடுவேயுள்ள மாயக்கோட்டை அவரே பலமாக இட்டிருக்கிறார். சர்கார் மூலமாக அடுத்த தலைமுறை ரசிகர்களை உருவாக்கியிருக்கிறார். ஆனால், ரோஜாவையும் புதிய முகத்தையும் ரசித்தவர்கள் இதனை ரசிப்பார்களா என்ற கேள்விக்கு அவராலேயே பதில் சொல்ல முடியாது.

கால மாற்றத்தில் இதனைத் தவிர்க்க முடியாது என்பது இதற்குப் பதிலானால், சர்கார் பாடல்கள் இன்னும் சில ஆண்டுகள் கழித்து எந்த இடத்தில் இருக்கும் என்ற கேள்வியை எழுப்ப வேண்டியிருக்கும்.

தியேட்டரில் இருக்கும் இரண்டரை மணி நேரமும் வேறெதையும் யோசிக்கவிடாமல் செய்வதே ஒரு வணிகத் திரைப்படத்தின் வெற்றிக்கான அடிப்படை சூத்திரம் என்று யாரேனும் விதி வகுத்தால், அதற்குப் பேருதவி செய்யும் வகையில் அமைந்த பாடல்களில் சர்கார் ஆல்பத்துக்கு முக்கிய இடம் கிடைக்கும்.

செவ்வாய், 6 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon