மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 4 ஜுன் 2020

சிறப்புத் தொடர்: புதிய நிதிக் கதைகள்!

சிறப்புத் தொடர்: புதிய நிதிக் கதைகள்!

சி.முருகேஷ் பாபு

டெலிபோன் மணி அடித்தது. சமையலறையில் வேலையாக இருந்த சந்திரா சேலை முந்தானையில் கையைத் துடைத்தபடி வந்து டெலிபோனை எடுத்து காதில் வைத்தாள். அடுத்த கணம் அவள் முகம் வெளிறியது.

‘‘என்ன சொல்றீங்க..?’’ என்றபடி அப்படியே சரிந்து உட்கார்ந்துவிட்டாள். அவள் போனை எடுப்பதையும் பேசுவதையும் பார்த்துக்கொண்டிருந்த மரகதம்மாள் ஓடிவந்து தாங்கிப் பிடித்துக்கொண்டாள்.

‘‘என்ன சந்திரா… என்னாச்சு… போன்ல யாரு என்ன சொன்னாங்க..?’’ அதே பதற்றத்தோடும் படபடப்போடும் கேட்டாள்.

அழுகையோடு சொன்னாள் சந்திரா.

‘‘உங்க மகன் கம்பெனில ஆக்ஸிடெண்ட்ல மாட்டிகிட்டாராம்… ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிருக்காங்களாம்… நான் என்ன செய்வேன்…’’ என்று அழுதவள், கண்ணைத் துடைத்துக்கொண்டு வேகமாகப் புறப்பட்டாள்.

மரகதம்மாள் முந்தானையால் வாயைப் பொத்திக்கொண்டு விசும்பினாள்.

‘‘கோயில் கோயிலாச் சுத்தி தவமிருந்து பெத்த புள்ள… அவனுக்கு என்னாச்சுனு தெரியலையே…’’ என்று அழுதவள் எழுந்து சென்று விளக்கு மாடத்தில் இருந்த விபூதியை எடுத்துப் பூசிக்கொண்டாள். சந்திராவை அழைத்து அவளுக்கும் பூசிவிட்டாள்.

‘‘நான் கும்பிடுற மதுரகாளி நமக்கு ஒரு குறையும் வைக்க மாட்டா… இந்த அஞ்சு ரூபாய உன் கையால முடிஞ்சு காணிக்கையா வை… அவன் நல்லாகி வீட்டுக்கு வந்ததும் குடும்பத்தோட கோயிலுக்கு வந்து வெறும் வயித்தில மாவிளக்கு போடுறேன்னு வேண்டிக்கோ…’’ என்ற மரகதம்மாளின் வார்த்தைகள் கொஞ்சம் ஆறுதல் தர, சந்திரா கிளம்பினாள்.

‘‘நான் வர்றேன் அத்த… கார்த்திக்கும் செல்வியும் ஸ்கூல் விட்டு வந்ததும் பால் ஆத்திக் குடுங்க… நான் போயிட்டு போன் பண்றேன்…’’ என்ற சந்திராவுக்குத் தலையாட்டி விட்டு மரகதம்மாள் கதவை மூடினாள்.

வேகவேகமாக நடந்து வந்த சந்திரா தெரு முனையில் வந்த ஆட்டோவை மடக்கினாள்.

‘‘அண்ணே… ஆரோக்கியா ஆஸ்பத்திரி வரைக்கும் போகணும்… அவசரம்ணே… வர்றீங்களா..? வியர்வையைத் துடைத்துக்கொண்டு கேட்ட சந்திராவை ஆட்டோ டிரைவர் பாவமாகப் பார்த்தார்.

‘‘ஏறிக்கோம்மா… யாருக்கு என்னம்மா…?’’

‘‘என் வீட்டுக்காரர்ணே… ஆக்ஸிடெண்ட்னு போன் வந்துச்சு… போனாத்தான் என்னன்னு தெரியும்… வேலைல ரொம்ப கவனமா இருப்பாருண்ணே…’’ ஆட்டோவில் ஏறிக்கொண்டே சொன்னாள் சந்திரா.

ஆட்டோவின் முகப்பில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி படம் இருந்தது. கைகளைக் கூப்பிக் கண்களை ஒரு கணம் மூடி வேண்டிக்கொண்டாள்.

‘‘பதறாதீங்க சிஸ்டர்… உங்க வீட்டுக்காரருக்கு எதுவும் ஆகாது…’’ என்றவர் ஆட்டோவை வேகமாக விரட்டினார்.

சாலைகளில் வேகமாக ஓடிய ஆட்டோ ஆரோக்கியா மருத்துவமனை வாசலில் நிற்க கையில் எடுத்து வைத்திருந்த பணத்தைக் கொடுத்துவிட்டு இறங்கி உள்ளே ஓடினாள் சந்திரா. ஆஸ்பத்திரி வாசலிலேயே கம்பெனி ஆட்கள் நின்றுகொண்டிருந்தார்கள்.

‘‘என்னாச்சுங்க… என்ன சொல்றாங்க டாக்டர்ஸ்..?’’ என்றாள் சந்திரா.

‘‘கிருஷ்ணமூர்த்தி கீழே விழுந்துட்டான்… உடனே கொண்டாந்துட்டோம்… ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணிட்டாங்க… ஐசியூவுல இருக்கான்… நீங்க போய்ப் பாருங்க…’’ என்று வழிவிட்டார்கள்.

ஐசியூவில் எக்கசக்க டியூப்களுக்கு மத்தியில் கிருஷ்ணமூர்த்தி கண்களை மூடிப் படுத்திருந்தான். சந்திராவுக்கு மளுக்கென்று கண்ணீர் வந்தது.

‘‘நீங்க இவரோட வொய்ஃபா… உங்களை டாக்டர் பார்க்கணும்னாரு…’’ என்று நர்ஸ் சொல்ல, டாக்டர் அறை நோக்கி நடந்தாள் சந்திரா.

‘‘கிருஷ்ணமூர்த்தியோட மிஸ்ஸஸா… அவருக்குப் பயப்படும்படியா ஒண்ணுமில்லம்மா… ஆனா, அடிபட்டதுல கை எலும்பு நொறுங்கிருச்சு… கட்டு போட முடியாது… ஆபரேஷன் பண்ணி பிளேட்தான் வைக்கணும்… அப்படியே தலைல ரத்தம் க்ளாட் ஆகியிருக்கானு பார்க்கணும்… நீங்க ஒரு லட்ச ரூபாய் கட்டிட்டீங்கன்னா ஆபரேஷனை பிளான் பண்ணிடலாம்… நாளைக்கே பணத்தைக் கட்டிருங்க…’’ என்று சொல்லிவிட்டு போனை எடுத்து யாருடனோ பேசத் தொடங்க, லட்ச ரூபாய்க்கு என்ன செய்வது என்ற யோசனையோடு வெளியே வந்தாள்.

வாசலில் நின்ற கம்பெனி ஆட்களிடம் விவரம் சொல்ல, ‘‘ஹெச்ஆர்கிட்டே வேணா பேசிப் பாருங்களேன்…’’ என்று யோசனை சொன்னார்கள். கிருஷ்ணமூர்த்தியின் கம்பெனிக்குப் புறப்பட்டாள் சந்திரா.

‘‘ஆக்சுவலி கிருஷ்ணமூர்த்தி கம்பெனி கேம்பஸ் உள்ளே ஆக்ஸிடெண்ட்ல மாட்டியிருந்தா நாங்களே முழு மெடிக்கல் செலவையும் பார்த்திருப்போம். ஆனா, கம்பெனி காம்பவுண்ட் மேல ஏறுன கிருஷ்ணமூர்த்தி தவறி வெளியே விழுந்திருக்காரு… அதுதான் சிக்கல்… அதோட அவரோட டியூட்டி டைம் முடிஞ்ச பிறகு நடந்திருக்கு இந்த ஆக்ஸிடெண்ட்… பர்சனலா ரொம்ப கஷ்டமா இருக்கு… ஆனா, கம்பெனி ரூல்ஸ்… என்னால எதுவும் செய்ய முடியல… ஸாரி…’’ என்று தலையைக் குனிந்துகொண்ட ஹெச்ஆரிடம் எதுவுமே சொல்லாமல் வெளியேறினாள் சந்திரா.

கிருஷ்ணமூர்த்தி கண்களைத் திறக்காமல் படுத்திருக்க, அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் சந்திரா. அவளுடைய மொபைல் அடிக்க, போனை எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள். செல்விதான் பேசினாள்.

‘‘அப்பாவுக்கு என்னாச்சும்மா… ஆச்சி என்னவெல்லாமோ சொல்றாங்க… பயமா இருக்கு எனக்கு…’’ என்று அழுத செல்வியைச் சந்திரா சமாதானப்படுத்தினாள்.

‘‘ஒண்ணுமில்லைம்மா… டாக்டர்கிட்டே பேசிட்டேன்… அப்பாவுக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லைனு சொல்லிட்டார்… நாளைக்கு அப்பாகிட்டே பேசலாம் நீ… அம்மா கணேசன் மாமாவ பார்த்துட்டு வீட்டுக்கு வர்றேன்னு ஆச்சிகிட்டே சொல்லிடு… நீங்க சாப்டுட்டு படுங்க… அம்மா வந்துடறேன்…’’ என்று சொல்லிவிட்டு போனை வைத்தாள்.

பெரிய மளிகைக் கடை உள்ளே படியேறினாள் சந்திரா. கணேசன் கணக்குகளைப் பார்த்துக்கொண்டிருக்க, நாலைந்து பையன்கள் லிஸ்ட் வைத்து சாமான்களை எடுத்து வைத்துக்கொண்டிருந்தார்கள்.

‘‘வாம்மா சந்திரா… இந்நேரம் கடைக்கு வந்திருக்க..?’’ என்றார் கணேசன்.

‘‘அவருக்கு ஆக்ஸிடெண்ட் ஆகிடுச்சு அண்ணாச்சி… பெருசா இல்லைன்னாலும் ஆபரேஷன் பண்ணணுமாம்… பிளேட் வைக்கணுமாம்… லட்ச ரூபாய் கட்டுங்கனு சொல்றாங்க… என்ன பண்றதுனு தெரியல…’’ சந்திரா தயங்கித் தயங்கிச் சொல்ல, கணேசன் பின்னால் திரும்பி குரல் கொடுத்தார்.

‘‘டேய்… லிஸ்ட் போடுறது சரி… அந்த கமலா அம்மாவுக்கு சாமானை டெலிவரி குடுத்துறாதீங்க… ஏற்கனவே குடுக்க வேண்டிய பாக்கி கிடக்கு… மேல மேல குடுத்துட்டு தலைல துண்டப் போட வெச்சிறாதீங்க…’’ என்று சொல்லிவிட்டு சந்திரா பக்கம் திரும்பினார்.

‘‘சந்திரா… நம்ம நூறடி ரோட்ல ஒருத்தர் புத்தூர் கட்டு சூப்பரா போடுறாரு… இந்த ஆஸ்பத்திரிகாரங்க காசு புடுங்க என்ன வேணா சொல்வாங்க… ஏமாந்துராதம்மா… அப்புறம் ஸ்கூல் ஃபீஸுக்கு வாங்குன காசை கொஞ்சம் கொஞ்சமா குடுத்துரும்மா… ஏய்… கடையை எடுத்து வையுங்கடா…’’ என்று புறப்பட ஆரம்பிக்க சந்திரா ஏமாற்றத்தோடு வெளியே வந்தாள்.

அரைகுறையாக எரியும் தெருவிளக்கின் வெளிச்சத்தில் இருளும் ஒளியுமாக சந்திராவின் முன்னால் பாதை நீள்கிறது.

அப்படியே காட்சி உறைய தொடரும் என்று எழுத்துகள் தோன்றுகின்றன.

சட்டென்று டிவியை நிறுத்துகிறாள் கனகா.

‘‘சாப்பாட்டைப் போடு கனகா… என்ன இழவு உலகம் இது… காலம்பூரா கம்பெனிக்கு உழைக்கிறான்… அவனுக்குக் கடனாவாச்சும் தர்றேன்னுகூட அந்த ஆபீசர் சொல்ல மாட்டேங்கறான்… இந்தக் கடைக்காரன் மூஞ்சில அடிச்ச மாதிரி அடுத்தவங்க கிட்ட ஜாடை பேசறான்… இந்த சந்திரா புள்ள என்னதான் செய்யுமோ..?’’ என்று அங்கலாய்த்தபடி வாஷ்பேசினில் கைகளைக் கழுவிவிட்டு டைனிங் டேபிளுக்கு வருகிறாள் வடிவு.

‘‘தோசை ஊத்தியிருக்கேன் அத்தை…’’ என்று கனகா சொன்ன நொடியில் டெலிபோன் ஒலித்தது. புடவைத் தலைப்பால் முகத்தைத் துடைத்தபடி போனை எடுத்த கனகா முகம் வெளிறினாள். தொடர்ந்து தீர்மானமான குரலில் பேசினாள்.

‘‘இன்னும் அரைமணியில் அங்கே இருப்பேன்… நீங்க ட்ரீட்மெண்டை ஆரம்பிச்சுடுங்க… அவருக்கு மெடிக்கல் இன்ஷூரன்ஸ் இருக்கு… கார்டை எடுத்துட்டு வந்துட்டே இருக்கேன்…’’ என்று சொல்லிவிட்டு போனை வைத்தாள்.

‘‘அத்தை… அவருக்கு வண்டியில வர்றப்ப ஏதோ ஆக்ஸிடெண்ட் ஆகிடுச்சாம்… நான் என்னன்னு பார்த்துட்டு போன் பண்றேன்… நீங்க சாப்டுட்டு படுங்க…’’ என்று சொல்லிவிட்டு பீரோவைத் திறந்து மெடிக்கல் இன்ஷூரன்ஸுக்கான கார்டை எடுத்துக் கொண்டு வெளியேறினாள் கனகா!

*

மெடிக்கல் இன்ஷூரன்ஸ்..!

1) ஆபத்து நேரத்தில் நோயாளியின் நலன் பற்றி மட்டுமே கவலைப்பட வேண்டும். பணத்தைப் பற்றிக் கவலைப்படக் கூடாது என்றால் மெடிக்கல் இன்ஷூரன்ஸ் அவசியம்.

2) இளம் வயதிலேயே மெடிக்கல் இன்ஷூரன்ஸ் எடுப்பதால் எல்லா நோய்களுக்குமான கவரேஜைப் பெற முடியும்.

3) ஒருவேளை பாலிசி காலத்தில் ஏதும் மருத்துவச் செலவு நிகழாவிட்டால் பாலிசி பணம் வீண்தானே என்று எண்ணாதீர்கள். செலவென்று வந்துவிட்டால் மொத்தச் சேமிப்பும் காணாமல் போய்விடும்.

4) மெடிக்கல் இன்ஷூரன்ஸுக்காகச் செலுத்தும் பணத்துக்கு வரிச் சலுகை பெறலாம் என்பதால் அதையும் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

5) மொத்தக் குடும்பத்துக்குமான ஒட்டுமொத்த பாலிசியை எடுக்கும்போது எல்லோருக்கும் மெடிக்கல் கவர் கிடைக்கும். ஒருவருக்கே பெரிதான செலவு வந்தாலும் பயன்படுத்திக்கொள்ளும் வசதி உண்டு.

6) நிறுவனங்கள் மொத்தமாக மெடிக்கல் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது குறைவான பிரிமியத்தில் நிறைவான பலனை அடையலாம்.

7) மெடிக்கல் இன்ஷூரன்ஸ் பாலிசியோடு பலவிதமான ரைடர்கள் என்னும் துணை பாலிசிகள் சலுகை விலையில் கிடைக்கும். அதையும் தெரிந்துகொண்டு பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

8) பாலிசி எடுக்கும்போது எந்த நோய்க்கெல்லாம் க்ளைம் கிடைக்காது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

9) அரசு தரும் மருத்துவக் காப்பீடு தரும் வாய்ப்புகளை அறிந்து உடனடியாகச் செயலில் இறங்குங்கள்.

10) எந்த நிறுவனத்தில் எடுக்கலாம், எந்தத் தொகைக்கு எடுக்கலாம் என்பது பற்றித் தகுதி வாய்ந்த ஆலோசகர்களிடம் கேட்டுத் தெளிந்து பாலிசியைப் பெறுங்கள்.

(அடுத்த கதை அடுத்த செவ்வாயன்று…)

(கட்டுரையாளர் சி.முருகேஷ் பாபு முதுகலை பொருளாதாரப் பட்டதாரி. பத்திரிகைத் துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம். நிதி தொடர்பான கட்டுரைகளைப் பல்வேறு பத்திரிகைகளில் எழுதிவருபவர். நிதித் திட்டமிடல் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து பல நூல்கள் எழுதியிருக்கிறார். பல சிறுகதைகளை எழுதியிருக்கும் இவர், தற்போது திரைத்துறையில் எழுத்துப் பணியில் ஈடுபட்டுவருகிறார்.)

செவ்வாய், 6 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon