மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 4 ஜுன் 2020

ஹைதராபாத் அணியிலிருந்து தவன் வெளியேற்றம்!

ஹைதராபாத் அணியிலிருந்து தவன் வெளியேற்றம்!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வந்த ஷிகர் தவன் தற்போது அந்த அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவன் கடந்த ஐபிஎல் ஏலத்தின்போது அந்த அணியால் தக்கவைக்கப்படவில்லை. அப்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அவரை ரூ.5.2 கோடிக்கு விலைக்கு வாங்கியது. இருப்பினும் RTM (right to match) விதிமுறைப்படி அதே தொகைக்கு ஹைதராபாத் அவரை மீண்டும் தக்கவைத்துக்கொண்டது. இந்நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து ஹைதராபாத் அணிக்காக விளையாட தவன் மேலும் சம்பளத்தை உயர்த்திக் கேட்டுள்ளார். இதனால் வேறு வழியின்றி ஹைதராபாத் அணி தற்போது அவரை விடுவித்துள்ளது. டெல்லி டேர்டெவில்ஸ் அணி தவனை எடுத்துக்கொண்டு அவருக்குப் பதிலாக விஜய் ஷங்கர், ஷபாஸ் நதீம், அபிஷேக் ஷர்மா ஆகியோரை ஹைதராபாத் அணிக்கு அனுப்பியுள்ளது.

தவனின் இந்த அணி மாற்றம் குறித்து ஹைதராபாத் அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த முறை ஏலத்தில் RTM (right to match) முறைப்படி ஷிகர் தவனை சன் ரைசர்ஸ் அணி எடுத்தது சிறப்பான ஒன்றாகும். இந்த முறை அவரது சம்பளத்தில் நிலைத்தன்மை இல்லாத காரணத்தால் அவரை வேறு வழியின்றி விடுவிக்கிறோம்" என்று தெரிவித்துள்ளது.

2013ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடிவரும் தவன் இதுவரை 91 இன்னிங்ஸில் விளையாடி 2,768 ரன்களைக் குவித்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் 4,058 ரன்களுடன் ஆறாவது இடத்திலும் இருக்கிறார்.

ஐபிஎல் பயணத்தை டெல்லி அணியில் தொடங்கிய தவன் தற்போது மீண்டும் டெல்லி அணிக்காக விளையாடவுள்ளார். 2013ஆம் ஆண்டு ஹைதராபாத் அணியில் இணைவதற்கு முன்பு மும்பை இந்தியன்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியிருந்தார். தற்போது இவரது வரவால் டெல்லி அணி உற்சாகமடைந்துள்ளது. டெல்லி அணியில் ப்ரித்வி ஷா, ஜேசன் ராய், காலின் முன்ரோ, கவுதம் கம்பீர் ஆகியோரும் உள்ளதால் அந்த அணியின் டாப் ஆர்டர் மேலும் வலுவடைந்துள்ளது.

இதுகுறித்து டெல்லி அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அடுத்த ஐபிஎல் சீசனில் தவன் டெல்லி அணியின் ஜெர்சி அணியவிருப்பதை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. தவன் இதுவரை சிறப்பான பல ஐபிஎல் தொடர்களைக் கண்டுள்ளார். அனுபவம் கொண்ட அவரது வரவு டெல்லி அணிக்கு மேலும் வலு சேர்த்துள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

செவ்வாய், 6 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon