மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 15 ஆக 2020

கோயம்பேடு: தீபாவளி க்ளைமாக்ஸ்!

கோயம்பேடு: தீபாவளி க்ளைமாக்ஸ்!

இன்று தீபாவளி. தமிழகம் முழுவதும் அரசு விதித்த கட்டுப்பாடுகளுடனும் போலீசாரின் கண்காணிப்புக் குழுக்களுடனும் தீபாவளி கொண்டாட்டம் சிறப்பாகவும், கொஞ்சம் வெறுப்பாகவும் தொடர்கிறது அனைத்து மக்களுக்கும்.

தீபாவளி என்றாலே நம் நினைவுக்கு உடனே வருவது வெடி வெடிப்பதுதான். இன்று இந்த வெடியை வெடித்து மகிழ்ச்சியுடன் தீபாவளி கொண்டாடுவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்போல் உள்ளதாக நினைக்கிறார்கள் மக்கள்.

தீபாவளிக்குத் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை நாட்களாக அமைந்துள்ளதால், சென்னையிலிருந்து தங்களுடைய சொந்த ஊருக்குச் செல்லும் மக்கள் கடந்த 2ஆம் தேதி முதலே சென்னையிலிருந்து செல்ல ஆரம்பித்துவிட்டனர். மக்கள் தங்கள் ஊர்களுக்குச் செல்வதற்கும், திரும்புவதற்கும் வசதியாக தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கடந்த மூன்று நாட்களில் சென்னையிலிருந்து 5 லட்சத்து 16 ஆயிரம் பேர் அரசு பேருந்துகள் மூலம் வெளியூர் சென்றுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.

வெறிச்சோடி காணப்பட்ட கோயம்பேடு

தீபாவளிக்குச் சில நாட்களுக்கு முன்பே பேருந்து மற்றும் ரயிலில் பயணம் செய்வதற்கான முன்பதிவுகள் தொடங்கிவிடும். ஆனால், நீங்கள் என்னதான் முன்பதிவு செய்ய சொன்னாலும், வேண்டாம் என்று பண்டிகைக்கு முதல்நாள் சாதாரண பேருந்துக்காகக் காத்திருக்கும் மக்களும் இங்கு அதிகம்தான்.

இரவு 10 மணி ஆன நிலையிலும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்களின் கூட்டம் சற்று குறைந்தே காணப்பட்டது நேற்று. பேருந்து முன்பதிவு செய்தவர்கள் அதற்கான நடைமேடையை நோக்கிச் சென்றனர். முன்பதிவு செய்யாதவர்கள் சாதாரண பேருந்து நிறுத்தம் நடைமேடை பகுதிக்குச் சென்றனர். பண்டிகை தினங்களுக்கு முந்தைய நாள் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்குள் செல்வதற்கே இப்பவே கண்ணக்கட்டுதேனு நினைப்பதுண்டு.

ஆனால், தீபாவளிக்கு முதல் நாள் கூட்டமே இல்லாமல் காணப்பட்டது கோயம்பேடு பேருந்து நிலையம். கண்டக்டர்கள் பேருந்தின் வெளியே நின்றுகொண்டு கூவிக்கூவி அழைக்கின்றனர், சிதம்பரம், சீர்காழி, மாயவரம் அப்படின்னு சொல்றதுபோல, திருச்சி, பெரம்பலூர், கன்னியாகுமரி, பாண்டிச்சேரி என்று அந்தளவுக்கு இருந்தது பேருந்து நிலையத்தில் மக்களின் கூட்டம்.

சென்னையிலிருந்து திருச்சி செல்லும் அரசு பேருந்தின் ஓட்டுநர் ராஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரிடம் மின்னம்பலம் சார்பாகப் பேசியபோது, அவர் தெரிவித்த தகவல்கள்:

லட்சக்கணக்கான மக்கள் தீபாவளி பண்டிகையைக் குடும்பத்துடன் கொண்டாடுவதற்கு இங்கிருந்து செல்கின்றனர். ஆனால், இங்கு தொடர்ந்து நான் உட்பட என்னை போன்ற ஊழியர்கள் நான்கு நாட்களாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறோம். எங்களுக்கும் குடும்பம் உள்ளது. நாங்களும் குடும்பத்துடன் தீபாவளி கொண்டாட வேண்டும் என்று நினைப்போம். ஆனால், முடியாது. எங்களுடைய வேலை அப்படி இருக்கிறது.

வெள்ளி, சனிக்கிழமைகளில் மக்கள் கூட்டம் இங்கு அலைமோதியது. நேற்று முன்தினம் கூட ஓரளவுக்குக் கூட்டம் இருந்தது. தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை என்பதால் சொந்த ஊருக்குச் செல்லும் மக்கள் முன்கூட்டியே சென்றுவிட்டனர். அதனால்தான் இந்த முறை பேருந்து நிலையமே வெறிச்சோடி காணப்பட்டது.

தீபாவளி கடைசிகட்ட ஷாப்பிங்

வழக்கமாகச் சென்னையில் இருக்கும் டிராபிக் கூட நேற்று இல்லை. நேற்று இரவு 9 மணியளவிற்கு தி.நகருக்குச் சென்றபோது, தீபாவளி பண்டிகையின் கடைசிகட்ட ஷாப்பிங் களைகட்டிக் கொண்டிருந்தது. அங்கு ஏராளமான கூட்டம் அலைமோதியது. அதற்கேற்ப கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர் போலீசார். அங்கு தீபாவளி ஷாப்பிங் வந்த மக்களில் ஒரு குடும்பத்திடம் பேசியபோது, அவர்கள் முதலில் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

"தீபாவளியையொட்டி புத்தாடை வாங்குவதற்காக ஏராளமான மக்கள் தி.நகரில் குவிந்துள்ளனர். புத்தாடைகளில் நிறைய புது டிசைன்ஸ் வந்திருக்கு. எங்கள் குடும்பத்தில் உள்ள ஐந்து பேருக்கு புதிய ஆடை எடுக்க வந்தோம். தேவையான அளவு போலீசார் இங்கு பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். நேற்று கடைசி நாள் என்பதால் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் நேரம் கொஞ்சம் அதிகமாக ஆனது" என்றனர் கீதா குடும்பத்தினர்.

- ர.ரஞ்சிதா

செவ்வாய், 6 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon