மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 4 ஜுன் 2020

சிரிப்பு வெடி: பத்த வெச்சுட்டியே பரட்டை!

சிரிப்பு வெடி: பத்த வெச்சுட்டியே பரட்டை!

தீபாவளிக்குச் சுவையான பலகாரங்களை வீட்டில் ஒரு கட்டு கட்டுவார்கள் என்பது தெரிந்ததுதான். ஆனால், தின்றுகொண்டே சுவையான விஷயங்களைப் பேச வேண்டுமல்லவா? அதற்கும் அரசும் நீதித் துறையும் ஏற்பாடு செய்துள்ளன. என்ன திட்டம் என்று என் வாயைப் பார்க்காதீர்கள், அந்தப் பட்டாசு மேட்டர்தான். தீர்ப்பு நல்லதா, ஆதரிக்கலாமா, விமர்சிக்கலாமா, சுற்றுச்சூழல் சீரழியாமல் பாதுகாக்கப்படுமா, படாதா என்று மண்டையைப் பிய்த்துக்கொள்ள விரும்பவில்லை. இந்தப் பட்டாசு மேட்டரை மக்கள் எப்படிக் கொளுத்திப் போட்டுக் கொண்டாடுகிறார்கள் என்பதை மட்டும் பார்க்கலாம்.

என் வீட்டுக் கொடியில துணியைக் காயப்போட்டுட்டான், அப்பார்ட்மென்ட் செகரட்டரி என்ற கெத்தில் ஆடுகிறார், நான் காயப்போட்ட வடகத்தில் அவன் வீட்டு நாய் வாயை வைத்துவிட்டது, என் பப்பியை நாய் என்று சொல்லிவிட்டான், சத்தமாகப் பாட்டு கேட்கிறாள் என்றெல்லாம் பல காரணங்களுக்காக நமக்குச் சக மனிதர்கள் மீது கட்டுக்கடங்காத கோபம் இருக்கிறது. பக்கத்து வீட்டு மனிதர்களை அன்றாடம் நேரில் பார்த்து சிரித்துச் சென்றாலும் இதுபோன்ற கோபத்தையெல்லாம் எப்படிக் காட்டுவது என்று தெரியாமல் தவிப்பவர்களுக்கெல்லாம் இந்தத் தீர்ப்பு அபிமான நட்சத்திரத்தின் படத்துக்கு முதல் நாள் முதல் ஷோ டிக்கெட் கிடைத்த மாதிரி!

ஆமாம், உங்கள் கோபத்துக்கு இலக்கானவர்கள் வீட்டுக்குள்ளே ‘96’ படம் பார்த்துக்கொண்டிருந்தால் அவர்கள் வீட்டு வாசலில் வெடியைப் பத்தவைத்துவிட்டு வீட்டுக்குள்ளே வந்து நீங்கள் கதவைச் சாத்திக்கொள்ளலாம்.

குற்றத்தில் பங்கு

கொஞ்சம் கவனப்பிசகாக இருந்தால் நீங்களும் மாட்டிக்கொள்வீர்கள். எனக்கே அப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டது. நேற்று துவைத்த துணியை எடுத்துக்கொண்டு மொட்டை மாடிக்குப் போனேன். எங்கிருந்தோ பறந்து வந்த ராக்கெட் சரியாக என் வாளியிலேயே வந்து விழுந்தது. கையால் எடுத்தேன். அப்போதுதான் நேரம் பார்த்தேன். யாரோ செய்த குற்றத்துக்கு நான் பொறுப்பாகிவிட்டேன். அதில் என் கைரேகையும் பதிவாகிவிட்டது. என்ன செய்வதென்று தெரியவில்லை. நல்லவேளை யாரும் பார்க்கவில்லை. துணியால் கைரேகையை அழித்துவிட்டு தீபாவளியை ஒட்டி வாடகையை ஏற்றிய வீட்டு ஓனரின் தண்ணி பேரல் மேல் வைத்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் வந்துவிட்டேன்.

விசாரித்த போதுதான் தெரிந்தது. அது பக்கத்து ஏரியாக்காரர்கள் எங்கள் ஏரியா மேல் நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்காம். பதிலுக்கு இங்கிருந்தும் பல ஏவுகணைகள் அங்கு சென்று அவர்கள் மொட்டை மாடிகளைத் தாக்கியுள்ளன.

இந்த வழக்கில் சிறுவர்களை கைது செய்ய முடியாது என்று கூறிய பின்னர்தான் வெடிச் சத்தம் பலமாகக் கேட்கிறது. தீபாவளிக்கு சர்கார் படத்துக்கு டிக்கெட் வாங்கித் தர மறுத்த வீடுகளில்தான் இது அதிகம் என்கின்றனர் விஷயம் தெரிந்தவர்கள். ஏனென்றால் வெடி வெடித்த சிறுவர்களை விட்டுவிட்டு வாங்கிக் கொடுத்த பெற்றோர்களைத்தான் கைது செய்கிறார்களாம். ஏற்கெனவே பாக்கெட்டில் வைத்திருந்த பணத்தைக் காணாமல் தேடிக்கொண்டிருந்தவர்களுக்கு இது பேரதிர்ச்சியாக இறங்கியிருக்கிறது.

மக்கள் நலனே முக்கியம் பாஸ்!

தமிழ்நாட்டில் சுமார் 650 பேருக்கு ஒரு போலீஸ் என்ற விகிதத்தில்தான் காவல் துறையின் வலிமை இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் படித்தேன். அப்படியானால் தெருவுக்கு ஒரு போலீஸ் என்ற அடிப்படையில்கூட நிறுத்த முடியாத நிலை! “எங்க ஊருக்குள்ள ஸ்டேஷனே கிடையாது சார். வர்றதுக்கு நல்ல ரோடும் கிடையாது. அதனால் நாங்க வெடிக்கிறது அவங்களுக்குக் கேட்கவும் செய்யாது, அப்படியே கேட்டு அவங்க இந்த ரோட்டுல வர்றதுக்குள்ள தீபாவளி முடிஞ்சிடும் சார்” என்று பெருமையாகச் சொல்கிறார் அலுவலக நண்பர்.

ஆனால், போலீஸ் வட்டாரங்களில் இதுபற்றி விசாரித்தபோது அவர்கள் நடைமுறை யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு பேசினர். “சார் நாங்கள் பப்ளிக்கிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மக்கள் அதிகம் கூடும் இடங்களான டாஸ்மாக், பார் உள்ளிட்ட இடங்களில் யாரும் வெடி வெடிக்காமல் கவனமாகப் பார்த்துக்கொள்கிறோம். மக்கள் நலனே முக்கியம்” என்றனர்.

டூ வீலரின் முன்னால் இரண்டு கைகள் ஹேண்ட் பாரைப் பிடித்திருக்க, அதற்கு நடுவே பட்டாசுப் பெட்டிகளை அடுக்கியபடி ஒரு போலீஸ்காரர் சென்றுகொண்டிருந்தார். நேரங்கெட்ட நேரத்தில் பட்டாசு வெடித்த குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்து செல்கிறாரா அல்லது நேரம் பார்த்து வெடிக்கப் பட்டாசு வாங்கிக்கொண்டு வீட்டுக்குப் போய்க்கொண்டிருக்கிறாரா என்று கேட்க முடியாமல் போனது.

யார் குற்றவாளி?

நேற்று மதியம் பக்கத்து வீட்டுப் பையன் ஒருவன் 1000 வாலா சரவெடி ஒன்றைக் கொளுத்திப் போட்டான். மாட்டுனா எல்லாரும் மாட்டுவோம் என்பது மாதிரி பத்து வீட்டையும் சேர்த்து கவர் பண்ணி நீளமாக வைத்துவிட்டான். பக்கத்து பிளாட்டில் உள்ளவர்கள் எல்லாம் பால்கனி வழியாகத் தலையை நீட்டி யாருடா இது தேசத் துரோகி என்பது போல் பார்த்தனர். நானும் இறங்கி வந்து அது வெடித்து முடித்ததும் புகையின் நடுவே மூக்கைப் பொத்திக்கொண்டு அவனிடம் பேச்சு கொடுத்தேன்.

“என்னப்பா தம்பி அதான் சுப்ரீம் கோர்ட்டே இதுபோல வெடிக்கக் கூடாதுன்னு சொல்லியிருக்கே? இப்படிச் செய்யலாமா?” என்றேன்.

“ஆமாம் சார் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு சார். இதனால் காற்று மாசுபாடு குறையும். அதற்காகத்தான் இந்தத் தீர்ப்பை வெடி வெடித்துக் கொண்டாடுகிறேன்” என்றான்.

விடுபட்ட பட்டாசு ஒன்று என் காலின் கீழ் வெடித்தது. இதற்கு மேல் நின்றால் என் மேல் ராக்கெட் விட்டுவிடுவான் என்று நகர்ந்துவிட்டேன். அக்கம்பக்கத்து பால்கனி தலைகள் அவனை அல்ல என்னைத்தான் பார்த்துக்கொண்டிருந்தன.

இப்போது வரை எனக்கு இந்தக் கேள்விக்கு மட்டும் விடை தெரியவில்லை. அந்தப் பையன் செய்தது குற்றமென்றால் அதற்கான தண்டனை யாருக்கு? பட்டாசு வாங்கிக்கொடுத்த அப்பாவுக்கா, கொண்டாடக்கூடிய வகையில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கா?

உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்களேன்.

- பட்டாசு குமாரு

திங்கள், 5 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon