மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 4 ஜுன் 2020

தீபாவளி: தலைவர்கள் வாழ்த்து!

தீபாவளி: தலைவர்கள் வாழ்த்து!

தீபாவளி பண்டிகை (நவம்பர் 6) கொண்டாட்டத்துக்கு ஆளுநர், முதல்வர் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்: தீபாவளி திருநாள் தமிழக மக்கள் வாழ்வில் மகிழ்ச்சியையும், ஒளியையும் ஏற்படுத்தட்டும்; இத்திருநாளில் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூட்டாக வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “மக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் சிறப்புமிக்க பண்டிகையாம் தீபாவளி திருநாளை, நாடு முழுவதும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் அன்பிற்கினிய மக்கள் அனைவருக்கும் எங்களது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள். இந்தத் திருநாள் இருளை நீக்கி ஒளியை ஏற்றிடும் தினமாகவும், தீமைகள் அகன்று நன்மைகள் பெருகும் நாளாகவும் விளங்குகிறது.”

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி: தீபாவளி பண்டிகை இந்தியாவில் மட்டுமல்லாது உலகெங்கிலும் உள்ள இந்தியர்களால் கொண்டாடப்படுகிறது. தீபாவளி நன்னாள், ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் வளத்தையும் ஏற்றிவைக்கட்டும்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி: மக்களுக்குத் தீபாவளி வாழ்த்துகள். லட்சுமி தேவியின் ஆசீர்வாதம் உங்களுக்கு, உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு நல்ல ஆரோக்கியம், வளம் மற்றும் மகிழ்ச்சியை வழங்கட்டும்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்: அநீதி அழிந்து, நீதி தழைத்து மக்களுக்கு நல்வாழ்வு அமைய வேண்டும். ஆடை, வெடி விலை அதிகமாக இருந்தாலும் இருப்பதைக்கொண்டு தீபாவளியை மகிழ்ச்சியாகக் கொண்டாடுவோம்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: ஒளிகள் சிந்தும் உவப்பான திருவிழாவான தீப ஒளித் திருநாளைக் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த தீப ஒளித் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்: தீபாவளி பண்டிகையில் அனைவர் வாழ்வும் செழிக்க வேண்டும். பட்டாசு தொழிலில் ஈடுபட்டிருக்கும் பாட்டாளியின் வாழ்வும் ஒளிர வேண்டும்.

பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்: தீப ஒளித் திருநாள் என்றாலே மகிழ்ச்சியும், கொண்டாட்டமும் தான் நினைவுக்கு வரும். புத்தாடை அணிந்து, மத்தாப்புக் கொளுத்தி, பிற மத நண்பர்களுக்கும், அண்டை வீட்டாருக்கும் இனிப்பு வழங்கும் வழக்கம் நட்பை வலுப்படுத்துவதுடன், நல்லிணக்கத்தையும் தழைக்கச் செய்கிறது. தமிழக மக்களின் வாழ்வை ஒளிமயமாக்க உழைப்பதற்கு உறுதி ஏற்க வேண்டும்.

அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: தமிழகத்துக்கு விரைவில் விடிவுகாலம் பிறக்க வேண்டும் என்ற மக்கள் விருப்பம் நிறைவேறவும், மக்கள் மனதில் அமைதியையும், அன்பையும் அளித்து சமுதாயம் முன்னேற்றமடையும் சூழலை இந்தத் தீப ஒளித் திருநாள் நமக்கு ஏற்படுத்தித் தர வேண்டும். புராண கால நரகாசுரன் அழிக்கப்பட்டாலும், ஜனநாயகம் என்னும் போர்வையில் உலாவரும் சில அரசியல் நரகாசுரர்கள், ஜனநாயக ரீதியாக அழிக்கப்பட வேண்டும் என்ற உறுதியை இந்நாளில் ஏற்போம்.

திங்கள், 5 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon