மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 4 ஜுன் 2020

தேர்தல் ஆணையரை மாற்ற வேண்டும்: மிசோரம் முதல்வர்

தேர்தல் ஆணையரை மாற்ற வேண்டும்: மிசோரம் முதல்வர்

மாநில தேர்தல் ஆணையரை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு மிசோரம் மாநில முதல்வர் லால் தன்காவ்லா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மிசோரம் மாநிலத்தில் வருகிற 28ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் திரிபுராவிற்குள் அகதிகளாக இடம்பெயர்ந்த மிசோர வாழ் பீரு இன மக்கள் வாக்களிக்கும் வகையில் வாக்குச்சாவடி அமைக்க மாநில தேர்தல் ஆணையர் எஸ்.பி.சஷாங் முடிவெடுத்திருந்தார். ஆனால் இதற்கு அரசாங்க தரப்பிலும், மக்கள் தரப்பிலும் கடுமையான எதிர்ப்பு எழுந்தது.

இதனை தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 3) மிசோரம் உள்துறை முதன்மை செயலாளர் லால்நன்மியா சாகுங்கோவை நீக்கிட வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் மிசோரம் அரசாங்கத்திற்கு அறிவுறுத்தியது. இதனால் அரசாங்கத்திற்கும், மாநில தேர்தல் ஆணையருக்கும் மோதல் உருவாகின. மேலும், தேர்தல் ஆணையர் நவம்பர் 5ஆம் தேதிக்குள் அம்மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டும் என தன்னார்வல அமைப்புகளும், மாணவர் இயக்கங்களும் வலியுறுத்தத் தொடங்கின.

அன்றே இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு மிசோரம் முதல்வர் கடிதம் எழுதியிருந்தார். அதில் "திரிபுரா அகதிகள் முகாமில் இருக்கும் பிரூ இன மக்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் முழு ஆதரவு தருகிறது. அவர்கள் மிசோரம் மாநிலத்திற்குள் அமைக்கப்பட்டிற்கும் வாக்கு சாவடிகளில் தங்களின் வாக்குகளை செலுத்த வேண்டும் என்பதை நாங்கள் ஆதரிக்கிறோம்" என தெரிவித்திருந்தார்.

ஆனாலும் தேர்தல் ஆணையர், பீரு மக்களுக்கு திரிபுராவில் வாக்குச்சாவடி அமைக்கும் தனது முடிவில் தீவிரமாக உள்ளதால், மோதல் உச்சம் அடைந்தது. இதனால் மாநில தேர்தல் ஆணையரை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு மிசோரம் மாநில முதல்வர் லால் தன்காவ்லா பிரதமருக்கு நேற்று (நவம்பர் 5) கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், எஸ்.பி.சஷாங் தனது சக ஊழியர்களைக் கூட நம்பிக்கையுடன் செயல்பட வைப்பதில் தோல்வி அடைந்து, அனைவரையும் சோர்வடைய செய்துவிட்டார். அவருடைய செயல்பாடுகள் மற்றவர்களின் செயல்களுக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது. இதனால் மிசோரம் மக்கள் மன்றம், கிறிஸ்துவ கூட்டு நடவடிக்கை குழு மற்றும் தன்னார்வ அமைப்புகளின் கோபத்தை தூண்டியுள்ளார். மக்கள் இவர் மீதிருந்த நம்பிக்கையை முழுவதுமாக இழந்துவிட்டனர். தற்போது சட்டசபை தேர்தல் சுமூகமாக நடைபெற வேண்டும் என்றால் மிசோரம் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.பி.சஷாங்கை உடனடியாக அவரது பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும். புதிய நியமனம் செய்ய முடியாவிட்டாலும், கூடுதல் தலைமை தேர்தல் ஆணையரிடம் இவரது பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

இதுகுறித்து மிசோரம் மாநில தேர்தல் ஆணையர், எஸ்.பி.சஷாங் தெரிவிக்கையில், தனக்கு இந்த கடிதத்தை பற்றி ஒன்றும் தெரியாது. இந்த தேர்தல் நடைபெறத் தேவையான பாதுகாப்பு விவகாரங்களில் சில இடையூறுகள் தென்படுவதாக தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 6 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon