மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 29 ஜன 2020

பிளாஸ்டிக் ஏற்றுமதியில் வளர்ச்சி!

பிளாஸ்டிக் ஏற்றுமதியில் வளர்ச்சி!

நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் பிளாஸ்டிக் ஏற்றுமதி 31.6 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது.

இதுகுறித்து பிளாஸ்டிக் ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நடப்பு நிதியாண்டின் (2018-19) முதல் அரையாண்டில் (ஏப்ரல்-செப்டம்பர்) 4.59 பில்லியன் டாலர் மதிப்பிலான பிளாஸ்டிக் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய நிதியாண்டின் முதல் அரையாண்டில் 3.48 பில்லியன் டாலராக மட்டுமே இருந்தது. அதாவது கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டில் 31.6 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த வணிக ஏற்றுமதியில் பிளாஸ்டிக் ஏற்றுமதியின் பங்களிப்பு 2.80 விழுக்காடாகும்.

பிளாஸ்டிக் பொருட்களில் கச்சா பொருட்கள், பிளாஸ்டிக் ஷீட்டுகள், ஃபிலிம்கள், பிளேட்டுகள் மற்றும் பேக்கேஜ் பொருட்கள் ஆகியவைதான் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. சீனா, மெக்சிகோ உள்ளிட்ட முன்னணி 23 நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து பிளாஸ்டிக் ஏற்றுமதி வலுவாக அதிகரித்துள்ளது. 70 விழுக்காடு முதல் 140 விழுக்காடு வரை கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டில் 23 நாடுகளுக்கு பிளாஸ்டிக் ஏற்றுமதி அதிகரித்துள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிளாஸ்டிக் ஏற்றுமதி மேம்பாட்டு வாரியத்தின் தலைவர் ரவிஷ் பி காமத் கூறுகையில், “முதல் அரையாண்டில் பிளாஸ்டிக் ஏற்றுமதி வலுவான வளர்ச்சி கண்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 800 மில்லியன் டாலர் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 38.1 விழுக்காடு வளர்ச்சியாகும்” என்றார். அதன் இயக்குநர் ஸ்ரீபாஷ் தாஸ்மோஹபத்ரா கூறுகையில், “இந்த நிதியாண்டுக்கான பிளாஸ்டிக் ஏற்றுமதி இலக்கான 10.6 பில்லியன் டாலரை எட்டுவோம் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

ஒட்டுமொத்தமாக முதல் அரையாண்டில் 164.04 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 12.5 விழுக்காடு அதிகமாகும். கடந்த நிதியாண்டின் முதல் அரையாண்டில் 145.75 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 6 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon