மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 29 ஜன 2020

போட்டிக்கு தயாராகும் விஷ்ணு

போட்டிக்கு தயாராகும் விஷ்ணு

விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ராட்சசன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுவருகிறது. வெளியாகி ஐந்தாவது வாரமாக வசூல் சாதனை படைத்து வரும் இத்திரைப்படம் விஷ்ணுவின் திரைப்பயணத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இந்த படத்தின் வெற்றியோடு அடுத்த படத்தின் வெளியீட்டுக்கும் நாள் குறித்துள்ளார் விஷ்ணு.

விஷ்ணு தயாரித்து நடித்துள்ள படம் சிலுக்குவார்பட்டி சிங்கம். இந்த படத்தில் ரெஜினா நாயகியாக நடித்துள்ளார். இயக்குநர் எழிலின் உதவியாளர் செல்லா இயக்கும் இந்தப் படத்தில் ஆனந்த்ராஜ், லிவிங்ஸ்டன், யோகிபாபு, கருணாகரன், சிங்கமுத்து, மன்சூர் அலிகான் என பெரிய காமெடி கூட்டணி இணைந்துள்ளது.

இந்த படத்தை டிசம்பர் 21ஆம் தேதி வெளியிடத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் விஷ்ணு விண்ணப்பித்திருந்தார். தயாரிப்பாளர்கள் சங்கமும் ஒப்புதல் அளித்து கடிதம் எழுதியுள்ளது. முன்னதாக படத்தை தணிக்கைக் குழுவுக்கு படக்குழுவினர் திரையிட்டு காண்பித்திருந்தனர். படத்தை பார்த்த தணிக்கை துறை படத்திற்கு ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளது.

ராட்சசன் படத்தில் மிகவும் சீரியஸான கதாபாத்திரத்தில் போலீஸாக நடித்திருந்தார் விஷ்ணு. ஆனால் இந்த படத்தில் அதற்கு முற்றிலும் மாறாக காமெடி கலந்த ரோலில் நடித்துள்ளார். முதன்முறையாக அவர் ரெஜினாவுடன் ஜோடி சேர்ந்து நடித்திருப்பதால் இந்த கூட்டணி பற்றிய எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பத்து நாள்கள் வரை பள்ளிகளுக்கு விடுமுறை இருப்பதால் தயாரிப்பாளர்கள் அந்த நாள்களில் படத்தை வெளியிட ஆர்வம் காட்டுவர். ஏற்கெனவே கார்த்தி நடித்துள்ள தேவ் திரைப்படமும், தனுஷ் நடித்துள்ள மாரி 2 திரைப்படமும் அந்த விடுமுறையை குறிவைத்துள்ளன. இந்நிலையில் அந்த போட்டியில் விஷ்ணுவும் கலந்துகொள்ளவுள்ளார்.

செவ்வாய், 6 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon