மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 25 பிப் 2020

சீனியர் வீரர்களை வசைபாடும் முன்னாள் வீரர்!

சீனியர் வீரர்களை வசைபாடும் முன்னாள் வீரர்!

இந்திய மண்ணில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் மோசமான செயல்பாட்டுக்கு சீனியர் வீரர்கள் தான் முக்கிய காரணம் என்று அந்த அணியின் முன்னாள் வீரர் கார்ல் ஹூப்பர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி படுதோல்வியைச் சந்தித்திருந்தது. கிறிஸ் கெயில், எவின் லீவிஸ் போன்ற முன்னணி வீரர்கள் அவர்களின் சொந்த காரணங்களுக்காக இந்தத் தொடரில் இருந்து விலகியுள்ளதால் தற்போது இளம் படையைக் கொண்டுள்ள அந்த அணி இந்திய மண்ணில் தடுமாறி வருகிறது. முன்னாள் வீரர்கள் சிலர் சர்வதேச அணிக்காக விளையாடுவதில் விருப்பம் காட்டாததே இந்தத் தோல்விக்கு முக்கிய காரணம் என்று மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரரான கார்ல் ஹூப்பர் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ஹூப்பர், "சில சீனியர் வீரர்கள் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக விளையாடுவதில் விருப்பமில்லாமல் இருப்பதைப் பார்க்கையில் மிகவும் வெட்கமாக இருக்கிறது. அவர்கள் ஏன் அப்படி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் அவர்களுக்கு விருப்பமில்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், "உலகக் கோப்பை குவாலிஃபயர் சுற்றில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராகத் தோல்வியடைந்தோம். ஒருவேளை சீனியர் வீரர்களைக் கொண்டு முழுபலத்துடன் களமிறங்கியிருந்தால் நாங்கள் வென்றிருப்போம்" என்று கூறியுள்ளார்.

இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி லக்னோவில் இன்று இரவு 7 மணிக்குத் தொடங்கவுள்ளது.

செவ்வாய், 6 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon