மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 4 ஜுன் 2020

சிவசங்கரனை சந்தித்த சிபிஐ அதிகாரிகள்!

சிவசங்கரனை சந்தித்த சிபிஐ அதிகாரிகள்!

இந்த ஆண்டு செப்டம்பரில் ஏர்செல் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சிவசங்கரனை சிபிஐ அதிகாரிகள் ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றில் சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2014ஆம் ஆண்டில் ஐடிபிஐ வங்கியில் சிவசங்கரன் ரூ.530 கோடி கடன் பெற்று திருப்பிச்செலுத்தவில்லை. தற்போது அவற்றின் மதிப்பு ரூ.600 கோடியாக உயர்ந்துள்ளது. இதையடுத்து சிவசங்கரன் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. தன்னுடைய பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்துக்கு இவர் கைமாற்றியதிலும் பல்வேறு சர்ச்சைகள் நிலவுகிறது. இந்நிலையில் சிபிஐ கூடுதல் இயக்குநர்கள் பொறுப்பில் உள்ள அலோக் வெர்மா மற்றும் ராகேஷ் அஸ்தானா சிவசங்கரனை அலுவலகத்திலும், ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றிலும் செப்டம்பரில் மாதத்தில் சந்தித்துள்ளனர்.

இந்த சந்திப்பானது சிபிஐ அமைப்பின் உள் நடைமுறைகளுக்கும், சட்ட விதிகளுக்கும் புறம்பானது என்று கூறப்படுகிறது. சிவசங்கரனுக்கு மே மாதத்தில் லுக்அவுட் நோட்டிஸ் ரத்து செய்யப்பட்ட நிலையில் செப்டம்பரில் சிபிஐ அதிகாரிகள் சந்திப்பு நடந்துள்ளது. இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், “சிவசங்கரனுடன் சிபிஐ அதிகாரிகள் நடத்திய இந்த அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பு தெற்கு டெல்லியில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றின் அறை எண் 901ல் நடந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன’ என்று கூறியுள்ளது.

மேலும், இந்த சந்திப்பை சிவசங்கரன் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்திடம் பேசுகையில் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் கூறுகையில், “இந்த சந்திப்பு அதிகாரப்பூர்வமாக நடந்ததுதான். அவர்கள் என்னை அழைத்தார்கள், அதனால் நான் அந்த சந்திப்புக்கு சென்றேன். ஆனால் எந்தத் தேதியில் நடந்தது என்று எனக்கு ஞாபகம் இல்லை” என்று கூறியுள்ளார். இந்த வழக்கில் சிபிஐ தரப்பு விசாரணைகள் முற்றிலும் நிறைவடைந்து இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிபிஐ அதிகாரிகளின் தனிப்பட்ட சந்திப்பு எதற்காக நடந்தது என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

இச்சந்திப்பு நடந்த நேரத்தில் இந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்த டி.எஸ்.பி.ரவீந்திர படேங்கல், ஐடிபிஐ வங்கிக் கிளையின் பாதுகாப்பு மற்றும் மோசடிகள் தடுப்பு செல் பிரிவு தலைவர் விஜயேந்திர பிடாரி ஆகியோர் சிவசங்கரனின் லுக்அவுட் நோட்டீஸ் திரும்பப் பெறப்பட்டதற்கு எதிராக இருந்தனர். இதனால் சிவசங்கரன் அளித்த தகவலையே ரவீந்திர படேங்கல் மறுத்துள்ளார். சிவசங்கரன் வெளிநாடு சென்றுவிட்டால் இந்த வழக்கின் விசாரணைக்கு ஒத்துழைப்பு தரமாட்டார், நீதியின் பிடியிலிருந்து தப்பிவிடுவார் என்று பிடாரி சிபிஐ அதிகாரி வெர்மாவுக்கு அளித்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். சிவசங்கரன் செஷல்ஸ் நாட்டுக் குடியுரிமை பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 6 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon