மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 1 ஜுன் 2020

ஆடுகளம்: கோலியாட்டத்தின் அவதாரங்கள்!

ஆடுகளம்: கோலியாட்டத்தின் அவதாரங்கள்!

தினேஷ் அகிரா

தொழில்நுட்ப பலவீனங்கள் கொண்டவராக விமர்சிக்கப்பட்ட விராட் கோலி இன்று மட்டையாட்டத்தில் இத்தனை சாதனைகளைப் புரிவது எப்படி?

புள்ளியியல் தரவுகளின் அடிப்படையில் சச்சினுடன் கோலி நிறைய விதங்களில் பொருந்தி வந்தாலும் மட்டையாட்டத் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இருவரும் முற்றிலும் வித்தியாசமானவர்கள். சச்சின், தான் விளையாடத் தொடங்கிய காலத்தில் இருந்தே தொழில்நுட்ப ரீதியாக மட்டையாட்டத்தில் மிகவும் வலுவானவராக இருந்தவர். சர்வதேசக் கிரிக்கெட்டில் ஒரு சில ஆட்டங்களை மட்டுமே ஆடியிருந்த சமயத்திலேயே கிரிக்கெட்டின் அடுத்த நட்சத்திரம் என்று ஆஸ்திரேலிய வேகப் பந்து வீச்சாளர் மெக்டெர்மோட்டால் புகழப்பட்டவர் சச்சின். ஆனால், கோலியின் கதை அதுவல்ல. நிறைய தொழில்நுட்பக் குறைபாடுகளை கொண்டுள்ள கோலி சர்வதேசக் கிரிக்கெட்டில் அதிக நாள் தாக்குப் பிடிக்க மாட்டாரென விமர்சகர்கள் ஆரூடம் கூறினார்கள்.

தனது இருபத்து நான்கு ஆண்டுக் கால ஆட்ட வாழ்வில் சச்சின் தனது அடிப்படைத் தொழில்நுட்பத்தையும் ஸ்டான்ஸையும் பெரிய அளவில் மாற்றியதில்லை. ஆனால், அணியின் தேவை மற்றும் உடல் தகுதியின் அடிப்படையில் தனது மட்டையாட்டத்தின் அணுகுமுறையில் நிறைய மாற்றங்களைப் புகுத்திக்கொண்டே இருந்தார். குறிப்பாக ஷாட் தேர்வுகளில் கவனம் செலுத்திய சச்சின் சில அபாயகரமான ஷாட்களை வெளியே எடுத்து, தேவைக்கேற்ற அவசியமான ஷாட்களை உள்ளே கொண்டுவந்தார்.

தனக்கு வேண்டியதை மட்டும் பொறுக்கி எடுப்பதற்கு சச்சின் என்ற மேதையின் காலடியில் எக்கச்சக்க தேர்வுகள் கொட்டிக் கிடந்தன. ஆனால், கோலியோ எதிரணிகளால் வைக்கப்படும் பொறிகளிலிருந்து தன்னைக் காத்துக்கொள்வதற்காகத் தொழில்நுட்பத்திலும் ஷாட் தேர்வுகளிலும் தொடர்ந்து உழைத்துவருகிறார். சச்சினைப் போலப் பிறவி மேதமையோ ஆட்டத்தின் வள ஆதாரமோ கோலிக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவரது மனஉறுதியும் தேவைகளுக்கு ஏற்பத் தன்னைத் தானே புதுப்பித்துக்கொள்ளும் ஆற்றலும் கோலியை சச்சினுக்கு நிகரான மேதையாக்குகின்றன.

கோலியாட்டத்தின் மூன்று கட்டங்கள்

இதுநாள் வரையிலான விராட் கோலியின் ஆட்ட வாழ்வை மட்டையாட்டத் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மூன்று கட்டங்களாகப் பிரிக்கலாம்.

முதலாவது கோலி சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானது முதல் இங்கிலாந்து தொடர் வரையியிலான காலகட்டம் ( 2008 - 2014).

இரண்டாவது கோலி கேப்டனான ஆஸ்திரேலிய தொடர் முதல் ஆஸ்திரேலிய அணியின் இந்தியப் பயணம் வரையிலான காலகட்டம் (2014 - 2017).

இறுதியாக தென்னாப்பிரிக்கத் தொடர் முதல் தற்போது வரையிலான காலகட்டம் (2018 - இன்று வரை)

சர்வதேச கிரிக்கெட்டுக்கு வந்த புதிதில் கோலியின் மட்டையாட்டத் தொழில்நுட்பத்தில் short and across front-foot strideஇல் நிறைய பிரச்சினைகள் இருப்பதால் அவரால் நீண்ட நாட்களுக்கு சர்வதேச கிரிக்கெட்டில் தாக்குப் பிடிக்க முடியாது என்று விமர்சகர்கள் ஆரூடம் கூறினார்கள். இந்தக் குறிப்பிட்ட மட்டையாட்டத் தொழில்நுட்பத்தினால் மிடில் ஸ்டம்பை நோக்கி வரும் பந்துகளை மட்டையாளனால் கால் பக்கம் திறம்பட விளையாட முடியும் என்றாலும் முழு நீளத்தில் வீசப்படும் பந்து ஸ்விங்கோ ஸீம்மோ ஆகும் பட்சத்தில் அதைச் சமாளித்து ஆடுவது கடினம். மேலும் கோலியின் குறைவான backlift - மட்டையை உயர்த்திப் பிடிக்கும் அளவு, இது எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு ஷாட்களில் வலு இருக்கும் - மற்றும் குறைவான Batswing - backlift மற்றும் ஷாட் ஆடிய பிறகு மட்டை நீண்டு செல்லும் தூரத்திற்கு இடைப்பட்ட வளைவு - காரணமாக ஒருநாள் போட்டிகளில் பெரிய அளவில் ஷாட்களை ஆட முடியாது என்று விமர்சகர்கள் கூறினார்கள்.

இக்குறையைக் களைய கோலி பந்தைச் சந்திக்கும் கடைசி நொடிகளில் தனது வலுவான மணிக்கட்டை சொடுக்கி மட்டையின் வேகத்தை அதிகப்படுத்துவதன் மூலம் ஷாட்களுக்கு வலுவைக் கூட்டிக்கொண்டார். ஆனால், இந்தக் குறிப்பிட்ட Batswing கோலியைப் பின்கை ஆதிக்கமுள்ள ஆட்டக்காரராக மாற்றியதால் அவரால் கால் பக்கம் ஆடுகிற அதே லாகவத்தோடு ஆப் சைடில் ஆட முடியவில்லை. பந்துகளைத் தன்னை நோக்கி வர அனுமதித்து சற்றே நேரம் தாமதித்து ஆடுவதன் மூலம் இந்தப் பிரச்சினையை கோலி சமாளித்தார்.

அறிமுகமானதிலிருந்தே பெரும்பாலும் அதிகளவிலான உள்ளூர் டெஸ்ட் தொடர்கள் மற்றும் ஒப்பீட்டளவில் வலு குறைவான பந்துவீச்சைக் கொண்டுள்ள அணிகளை மட்டுமே எதிர்கொண்டு வந்ததால் கோலிக்கு அவுட் ஸ்விங் பந்துகளை எதிர்கொள்வதில் இருக்கும் பலவீனம் முதல் சில ஆண்டுகளில் பெரிதாக வெளியில் தெரியவில்லை. 2014 இங்கிலாந்து தொடரின் போதுதான் இதனை ஆண்டர்சன் வெட்ட வெளிச்சம் ஆக்கினார்.

இந்தக் குறைபாட்டைக் களைவதற்கு கோலிக்கு உதவியவர் இந்திய அணியின் அன்றைய பயிற்சியாளர் டங்கன் ஃபிளட்சர். கெவின் பீட்டர்சன் பாணியிலான அகலமான ஸ்டேன்ஸைப் பரிந்துரைத்து Forward Press தொழில்நுட்பத்தை கோலியின் மட்டையாட்டத்தில் புகுத்தினார் ஃபிளட்சர். அகலமான ஸ்டேன்ஸை (Wider Stance) - கிரீஸுக்கு வெளியே நின்று பந்தை எதிர்கொள்ளும் சமயம் மட்டையானது கால்களுக்கிடையே அமைய வேண்டும் - ஒருவர் கைக்கொள்ளும்போதுதான் Forward Press தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக உபயோகிக்க முடியும். Forward Pressஇல் வழக்கத்தைவிட அதிகமாக முன்னங்காலில் இருக்கும்போது ஸ்விங் பந்துகளை எதிர்கொள்வதில் பெரிய சிரமம் இருக்காது. சுருக்கமாகக் கூறினால் ஒரு சுழற்பந்து வீச்சாளரை இறங்கிவந்து எதிர்கொள்வதைப் போலத்தான் இதுவும்.

மட்டையாட்ட உத்தியில் கோலி புகுத்திய இந்த மாற்றத்தால் ஸ்விங் பந்துவீச்சில் குறிப்பாக அவுட் ஸ்விங்கில் கோலிக்குப் பொறி வைக்கும் வியூகங்களை எதிரணிகள் கைவிட்டன.

சாதகத்தில் தோன்றிய பாதகமாக கோலியின் அகலமான ஸ்டேன்ஸ் அவரின் பின்னங்கால் ஆட்டத்தை, குறிப்பாக ஆடுகளத்தின் ஸ்கொயர் பகுதிகளில் கட் ஷாட் மூலம் ரன்கள் குவிப்பதை, வெகுவாகப் பாதித்தது. பின்பு ஸ்டான்சின் அகலத்தைச் சற்றே குறைப்பதன் மூலம் ஸ்விங் பந்தை எதிர்கொள்ளவும் ஸ்கொயர் கட் ஆடுவதற்கும் ஏதுவான ஓர் இடைப்பட்ட ஸ்டேன்ஸை கோலி அமைத்துக்கொண்டார்.

இங்கிலாந்து வைத்த புதிய பொறி

விராட் கோலிக்கு இருந்த அவுட் ஸ்விங் பலவீனத்தை வெளிக்கொண்டு வந்த இங்கிலாந்து அணியே 2016 இந்தியத் தொடரின்போது கோலியின் புதிய அகலப் பந்து பலவீனத்தையும் கிரிக்கெட் உலகுக்குக் காட்டிக் கொடுத்தது. ஸ்விங் பந்தை எதிர்கொள்ள அகலமான ஸ்டான்சில் எல்லா பந்தையும் முன்னோக்கி வந்து எதிர்கொள்ளும் காரணத்தால் ஆப் ஸ்டம்புக்கு வெளியே வீசப்படும் பந்தின் லைனைக் கணிப்பதில் கோலி தடுமாறினார். எதிரணிகளின் இந்தப் புதிய பொறியிலிருந்து மீள்வதற்காக ஆப் ஸ்டம்புக்கு நெருக்கமாக வந்து கோலி ஆட ஆரம்பித்தார். முள்ளை முள்ளால் எடுப்பதுபோல, தனக்குப் பொறி வைக்கப்படும் இடமான ஆப் சைடிலேயே ரன்கள் குவிக்கத் தொடங்கினார்.

தன்னை வீழ்த்த வகுக்கப்பட்ட எல்லா வியூகங்களிடமிருந்தும் மீண்டு வந்த கோலிக்குக் கடைசியாக தென்னாப்பிரிக்க அணி நேர் பந்துகளில் (Straighter Ball) பொறி வைத்து அதை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது. ஆறாவது ஸ்டம்ப் லைனில் வீசப்படும் பந்துகளைச் சமாளிக்கத் தனது ஸ்டேன்ஸை நெருக்கமாக மாற்றியதால் நேர்கோட்டில் தன்னை நோக்கி வரும் பந்துகளுக்கு கோலி இரையாகத் தொடங்கினார்.

ஆனால், இந்த நேர்பந்து வியூகம் அடுத்த தொடரின்போது காலாவதியாகிவிட்டது. இந்த எல்லாக் காலகட்டங்களிலும் கோலியின் மட்டையாட்ட ஸ்டான்ஸ் மாற்றமடைந்துகொண்டே வந்துள்ளது. ஆரம்பத்தில் நெருக்கமான Side - On ஸ்டேன்ஸ் கொண்டிருந்த கோலி காலப்போக்கில் தேவைகளுக்கு ஏற்ப அதனை நேர்படுத்திக்கொண்டே வந்துள்ளார். நாட்கள் செல்ல செல்ல கோலியின் ஸ்டேன்ஸானது மேலும் சீரடைந்து சச்சினுடையது போல ஒரு சமநிலையில் வந்து சேரும் என்கிறார் மார்ட்டின் குரோ.

தகர்க்கப்பட்ட பவுன்சர் வியூகம்

இன்று உலகில் சிறப்பாக பவுன்சர்களைக் கையாளக்கூடிய மட்டையாளர்களில் ஒருவராகக் கருதப்படுகின்ற கோலி தனது அறிமுக டெஸ்ட் போட்டித் தொடரின்போது பவுன்சர்களுக்கு திணறியதால் அணியிலிருந்து நீக்கப்பட்டவர். கடும் பயிற்சிகளுக்குப் பின் மீண்டுவந்த கோலி எதிரணிகளின் பவுன்சர் வியூகத்தைத் தகர்த்தெறிந்தார்.

சர்வதேச கிரிக்கெட்டின் துவக்க நாட்களில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அவ்வளவாக கோலி ஸ்வீப் ஷாட் ஆட மாட்டார். இந்தக் குறிப்பிட்ட ஷாட் இல்லாமலேயே அனைத்து வடிவிலான போட்டிகளிலும் கோலியால் சதங்களைக் குவிக்க முடியுமென்பதால் அப்பொழுது இது ஒரு பிரச்சினையாக மேலெழும்பவில்லை. ஆனால், இந்த ஸ்வீப் பலவீனத்தை டெஸ்ட் போட்டிகளில் மட்டுமல்லாமல் ஒருநாள் போட்டிகளிலும் எதிரணிகள் கையில் எடுக்கத் தொடங்கியதும் கடும் பயிற்சியின் மூலம் ஸ்வீப்பைத் தனது ஷாட்களில் ஒன்றாகக் கொண்டுவந்தார் கோலி.

2008இல் தனது அறிமுகப் போட்டியில் ஆடிய கோலிக்கும் ஈடு இணையற்ற ஜாம்பவானாக மாறியிருக்கும் இன்றைய கோலிக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. இடைப்பட்ட காலத்தில் கோலியின் ஆட்டம் வெற்றிகரமாகப் பல வடிவங்களை எடுத்துவிட்டது. சவால்களுக்கேற்பத் தன் ஆட்டத்தை மாற்றிக்கொள்வதிலும் மெருகேற்றிக்கொள்வதிலும் அவருக்கு இருக்கும் திறமைதான் இன்று அவரை உலகின் முதல்தர மட்டையாளராகவும் சச்சினோடு ஒப்பிடப்படும் மட்டையாளராகவும் ஆக்கியிருக்கிறது.

செவ்வாய், 6 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon