மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020

பணம் இருக்கு வெடிக்கிறோம்: போலீசிடம் பொதுமக்கள் ஆவேசம்!

பணம் இருக்கு வெடிக்கிறோம்: போலீசிடம் பொதுமக்கள் ஆவேசம்!

இரண்டு மணி நேரம்தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்ட நிலையில், அதை நடைமுறைப்படுத்துவதில் தமிழக காவல் துறை திணறி வருகிறது.

பட்டாசு வெடிப்பதற்கான கால நிர்ணயம் செய்து சில நாட்களுக்கு முன்பு உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. நிர்ணயம் செய்யப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடிக்கும் இளஞ்சிறார்களை, இளஞ்சிறார்கள் குழுமத்தின் தலைவரிடம்தான் ஒப்படைக்க வேண்டும், மாஜிஸ்திரேட்டிடம் ஆஜர்படுத்தக்கூடாது என்று சட்ட விதிகள் உள்ளன. இது ஒருபக்கம் இருக்க, பல பணிகளுக்கு மத்தியில், இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க முடியுமா என்ற குழப்பத்தில் இருக்கின்றது காவல் துறை.

தீபாவளி தொடங்குவதற்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பாகவே பட்டாசு வெடிக்கும் சத்தம் காவல் துறையினரின் காதுகளில் ஒலித்துக் கொண்டுதான் இருந்தது. இதற்கு எப்படிப்பட்ட நடவடிக்கை எடுப்பது என்று குழப்பத்தில் இருந்த சென்னை மாநகர டெபுடி கமிஷனர்கள் நேற்று(நவம்பர் 5)சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனை தொடர்புகொண்டு பேசினர்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி பட்டாசு வெடிப்பவர்களை என்ன செய்வது, பட்டாசு வெடிக்கும் குழந்தைகளை பிடித்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படுமே என்று அவர்கள் கேட்டபோது, ”உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி செயல்படுங்கள்” என்று ஒற்றை வரியில் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று சென்னை பெரம்பூர் தொகுதியில் உள்ள செந்தியாம் காவல் நிலையத்திற்கு புகார் கொடுப்பதற்காக ஒருவர் வந்தார். அவர் ”எங்கள் பகுதியில் நேரம் தவறி பட்டாசு வெடிக்கிறார்கள்” என்று புகார் அளித்துள்ளார். இந்த புகாரை ஏற்றுக் கொண்ட போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது ஒன்று கூடிய மக்கள், ”சத்தம் குறைவான பட்டாசுகளைதான் வெடிக்கிறோம். எங்களிடம் காசு உள்ளது, அதனால் நாங்கள் வெடிக்கிறோம். புகார் கொடுத்தவன் கையில் காசில்லை, அதனால் பட்டாசு வாங்கமுடியாமலும், வெடிக்க முடியாமலும் இருப்பதால், உங்களிடம் புகார் கொடுக்கிறான். இதையும் மீறி எங்கள் மீது வழக்கு போடுவோம் என்றால்,எங்கள் அனைவரையும் கைது செய்யுங்கள்” என ஆவேசத்துடன் கூறினார்கள் அப்பகுதி மக்கள்.

இது நேற்றைய நிலை என்றாலும், இன்றும் பட்டாசு சத்தம் காவல்துறையினரின் காதுகளை கிழித்துக் கொண்டுதான் இருக்கிறது. சரி இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள் என்பதை அறிய காவல் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டோம்.

இதுகுறித்து உச்ச நீதிமன்றத்திற்குப் பதில் சொல்வதற்காக சாராயம், லாட்டரி சீட் விற்பவர்கள் பட்டியலை எடுத்து வைத்துள்ளதாகவும், அவர்கள் மீது பட்டாசு வெடித்த வழக்கு போடுவதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.

இதையடுத்து, தமிழக நீதித் துறை வட்டாரத்தில் பேசியபோது, மக்கள் நலன் கருதி நல்ல தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. காலங்காலமாக பட்டாசு வெடித்து வருகிறோம், இந்த தீர்ப்புக்காக பட்டாசு வெடிப்பதை விட்டுவிடமுடியுமா, என்றால் அன்று ஆலமரத்தடியிலும் அரசமரத்தடியிலும் பஞ்சாயத்து செய்து தீர்ப்பு வழங்குவதை இன்று அனுமதிக்க முடியுமா. அதுபோன்றுதான் இந்த தீர்ப்பும்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பினால் சிவகாசியில் ஒரு லட்சம் தொழிலாளர்கள் குடும்பம் பாதிக்கிறது என்பதால் பத்து கோடி மக்களுக்கு நோய்வாய் ஏற்பட அனுமதிக்க முடியுமா? அதனால், மக்கள் நலனை கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பை காவல் துறையினர் அமல்படுத்த வேண்டும் என்கின்றனர்.

காசி

செவ்வாய், 6 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon