மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 29 ஜன 2020

பட்டாசு விற்பனை சரிவு!

பட்டாசு விற்பனை சரிவு!

சென்னையில் பட்டாசு விற்பனை 35 விழுக்காடு அளவுக்கு சரிந்துள்ளதாக வர்த்தகர்கள் கூறுகின்றனர்.

தமிழகத்தில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டுமென்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால், மக்கள் வழக்கத்தைக் காட்டிலும் குறைவான தொகையை மட்டுமே பட்டாசுகள் வாங்க செலவளித்துள்ளனர். தலைநகர் சென்னையில் தீவுத்திடல், ராயப்பேட்டை, நந்தனம் உள்ளிட்ட எல்லா பகுதிகளிலும் சிறு சிறு கடைகள் உட்பட 900 கடைகள் தீபாவளி பட்டாசு விற்பனையில் ஈடுபட்டுள்ளன. கடந்த ஆண்டைக் காட்டிலும் வாடிக்கையாளர்கள் பட்டாசு வாங்குவதற்கான செலவுகளை வெகுவாகக் குறைத்துவிட்டதாகவும், இதனால் 40 விழுக்காடு வரை விற்பனை சரிந்துள்ளதாகவும் கூறுகின்றனர்.

இதுகுறித்து சென்னையில் கடை வைத்துள்ள பட்டாசு வியாபாரிகள் கூறுகையில், “நீதிமன்றத்தின் கட்டுப்பாடுகளால் பொதுமக்கள் பட்டாசு வாங்க ஆர்வம் காட்டவில்லை. பட்டாசு வாங்க வருபவர்கள் குழந்தைகளிடம் பட்டாசு அதிகம் வெடித்தால் போலிஸ் வரும் என்று கூறுகின்றனர். பட்டாசு செலவைக் குறைப்பதற்காக அவர்கள் குழந்தைகளிடம் இவ்வாறு கூறுகின்றனர். கடந்த 3 ஆண்டுகளாக ரூ.8 கோடி முதல் ரூ.11 கோடி வரை தீவுத்திடலில் பட்டாசு விற்பனையாகும். ஆனால் இந்த ஆண்டில் அதில் 65 விழுக்காடு மட்டும்தான் விற்பனையாகியுள்ளது. விற்பனையாகாத பட்டாசுகளை எங்களால் திருப்பியளிக்கவும் இயலாது. முதலீட்டைக் கூட திரும்ப எடுக்க இயலாத நிலையில் இருக்கிறோம். உச்ச நீதிமன்றம் 6 மாதத்துக்கு முன்பே இந்தத் தீர்ப்பை விதித்திருந்தால் , நாங்கள் குறைவாக வாங்கியிருப்போம். எங்களுடைய இழப்புக்கு அரசுதான் உதவ வேண்டும்’ என்கின்றனர்.

தேனி மாவட்டத்தில் பட்டாசு விற்பனை செய்ய 86 கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுதவிர கூட்டுறவு சங்கங்கள் மற்றும் அனுமதி பெறாத சிறுகடைகளும் பட்டாசு விற்பனையில் ஈடுபட்டுள்ளன. ஆனால் அங்கு கடந்த ஆண்டைக் காட்டிலும் 40 விழுக்காடு குறைவாகவே பட்டாசு விற்பனை நடந்துள்ளதாக வர்த்தகர்கள் கலக்கமடைந்துள்ளனர். செல்லூரில் 30 வருடங்களாகப் பட்டாசு விற்பனையில் ஈடுபட்டுள்ள தமிழ்செல்வன் என்பவர் தி இந்து ஆங்கில ஊடகத்திடம் பேசுகையில், “கடந்த ஆண்டில் 5,000 ரூபாய்க்குப் பட்டாசு வாங்கியவர்கள் கூட இந்த ஆண்டு 1,000 ரூபாய்க்கு மட்டும் வாங்கிச் செல்கின்றனர். நாங்கள் தற்காலிக உரிமம் பெற்று விற்பனை செய்கிறோம். விற்காத பட்டாசுகளை எங்களால் சிவகாசிக்கு திருப்பி அனுப்ப இயலாது. 2 மாதத்துக்கு முன்பே இந்தக் கட்டுப்பாடுகள் தெரிந்திருந்தால் கொள்முதலைக் குறைத்திருப்போம்” என்றார்.

சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த அச்சக நிறுவனத்தில் பணிபுரியும் லட்சுமணன் என்பவரிடம் பேசுகையில், “வழக்கமாக தீபாவளிக்கு 2000 ரூபாய்க்கு பட்டாசு வாங்குவோம். இந்த வருடம் பட்டாசு வெடிக்க நீதிமன்றம் நேரத்தைக் குறைத்துள்ளதால் 1,000 ரூபாய்க்கு மட்டும்தான் வாங்கினோம். இனிப்புகள், ஆடைகள் வாங்கக் கூடுதலாக செலவிட்டோம். ஆனால் இன்று (நவம்பர் 6) காலையிலிருந்து இப்போது வரை ஆங்காங்கே பட்டாசு வெடித்துக்கொண்டுதான் இருக்கின்றனர்” என்றார்.

செவ்வாய், 6 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon