மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 29 ஜன 2020

காலே டெஸ்ட்: வலுவான நிலையில் இங்கிலாந்து!

காலே டெஸ்ட்: வலுவான நிலையில் இங்கிலாந்து!

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.

இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 ஒருநாள், 1 டி20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது. ஒருநாள் மற்றும் டி20 தொடர்களை இங்கிலாந்து அணி கைப்பற்றிய நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் இன்று (நவம்பர் 6) தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

ரோரி பர்ன்ஸ், கீட்டன் ஜென்னிங்ஸ் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். அணியின் ஸ்கோர் 10 ரன்களாக இருந்தபோது ரோரி பர்ன்ஸ் 9 ரன்கள் எடுத்து சுரங்கா லக்மல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இவரையடுத்து வந்த மொயீன் அலி அவர் சந்தித்த முதல் பந்திலேயே லக்மலிடம் ஸ்டம்பை பறிகொடுத்து அவுட் ஆனார். பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன. ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி 164 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது. அப்போது வந்த சாம் கரன், பென் ஃபோக்ஸுடன் ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்டார்.

சாம் கரன் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடந்து வந்த அடில் ரஷீத் அவர் பங்குக்கு 35 ரன்கள் சேர்த்தார். பென் ஃபோக்ஸ் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 87 ரன்கள் எடுத்திருந்தார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் எடுத்துள்ளது. இலங்கை அணி சார்பில் தில்ருவான் பெரேரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

செவ்வாய், 6 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon